DMDK: 2026-ல் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' - பிரேமலதா தலைமையில் தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக!
2026ம் ஆண்டு தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சிகள் தங்கள் கட்டமைப்பை புனரமைக்கவும் வலுப்படுத்தவும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் தங்களது கட்சியின் மாநில மாநாட்டை அறிவித்துள்ளது தேமுதிக.
கேப்டன் என அனைவராலும் அன்போடு போற்றப்பட்ட நடிகரும் தேதிமுக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த் 2023ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது இறப்புக்குப் பிறகு அந்தக் கட்சி சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும்.

கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற 2026 ஜனவரி மாதம் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0" வரும் 09.01.2026 ஆம் தேதி மாலை 02.45 மணியளவில் நடைபெறும்.
கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கொடியேற்றி, கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட தலைமை கழகம், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளை கழகம், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளனர்.