மயூா் விஹாா் ஃபேஸ் விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரம்
DMK : பிரிக்கப்பட்ட மாவட்டங்கள்; தூக்கியடிக்கப்பட்ட மா.செ-க்கள் - அதிரடிக்கு என்ன காரணம்?!
மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்!
திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் இருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டச் செயலாளர்தான் அதிக அதிகாரம் மிக்கவராக இருப்பார். கடைசியாக நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட, `தவறு செய்யும் மாவட்டச் செயலாளர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்’ என்று எச்சரித்திருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். தொடர்ந்து, பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மீது பல புகார்கள் வந்தபோதும் திமுக தலைமை அமைதியாகவே இருந்தது. இந்த சூழலில் முதற்கட்டமாக சில மாவட்டச் செயலாளர்களை மாற்றியிருக்கிறது திமுக.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-08-16/4ho8ynei/WhatsApp_Image_2024_08_16_at_11_46_40_AM.jpeg)
இந்த மாற்றத்தின் காரணம் என்ன என்பது குறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தோம். "காஞ்சிபுரம் பவளவிழா முடிந்த கையேடு நடந்த அமைச்சரவை மாற்றத்தோடு, இந்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றமும் நடந்திருக்க வேண்டும். ஆனால், அடுத்தடுத்த சில காரணங்களினால் இந்த மாற்றம் மூன்று மாதங்கள் தள்ளிப்போனது. இப்போது வெளியாகியிருப்பதும் முதற்கட்ட பட்டியல்தான். மற்றொரு பட்டியல் விரைவிலேயே வெளியாகும். தற்போது வெளியாகியிருக்கும் பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு - வடக்கு என இரண்டு மாவட்ட அமைப்புகள் இருந்தன. இதனை இப்போது நான்கு மாவட்டங்களாகப் பிரித்து திருப்பூர் மேற்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு, திருப்பூர் வடக்கு திருப்பூர் மேயர் தினேஷுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
உதயமான புதிய மாவட்டம்
அதேபோல, இரண்டு மாவட்டமாக விழுப்புரத்தை மூன்று மாவட்டமாகப் பிரித்து விழுப்புரம் வடக்கு - டாக்டர் ப. சேகர் நீக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும், புதிதாக உருவாக்கப்பட்ட விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக லட்சுமணன் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த தோப்பு வெங்கடாசலத்துக்கு ஈரோட்டில் புதிதாக ஒரு மாவட்டம் பிரிக்கப்பட்டுப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மதுரையில் தளபதியிடம் இருந்த நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியை அமைச்சர் மூர்த்தி மாவட்டத்துக்குச் சேர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நீலகிரியில் மாவட்டச் செயலாளராக இருந்த முபாரக் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் கொறடா ராமச்சந்திரனின் ஆதரவாளரும், படுகர் இனத்தைச் சேர்ந்த ராஜு என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/ee744334-6f05-485e-9d70-b52c901107e2/vahab.jpg)
அதேபோல, நெல்லையில் மாவட்டச் செயலாளராக இருந்த அப்துல் வஹாப் மாற்றப்பட்டு அவருக்குப் பதில் மைதீன் கான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்தில் மைதீன்கான் மாற்றப்பட்டு மீண்டும் அப்துல் வஹாப் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அண்ணாதுரை மீது பல்வேறு புகார்கள் இருக்கிறது. அவர் மாற்றப்பட்டு பழனிவேல் நியமிக்கப்பட்டிருக்கிறார். திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த டி.ஜெ.கே.கோவிந்தராஜ் மீது புகார்களுக்குப் பஞ்சமே இல்லை. உட்கட்சி பூசல் தலைவிரித்தாடும் திமுக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்று. இப்போது கோவிந்தராஜ் மாற்றப்பட்டு அந்த பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ராஜ் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் பிரியப்போகும் மாவட்டம்
திமுக மாவட்ட பிரிப்பைப் பொறுத்தவை இந்த கோரிக்கையை வலுவாக வைத்தது உதயநிதி தரப்புதான். புதிதாகப் பிரிக்கப்படும் மாவட்டங்களுக்கு இளைஞரணி நிர்வாகிகளை நியமிக்க அதிக அழுத்தமும் உதயநிதி தரப்பு கொடுத்துவந்தது. அதுவும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் தாமதமாக ஒரு காரணமாக இருந்தது. இந்த சூழலில், புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகளில் இளைஞரணி நிர்வாகிகள் பலரும் இடம்பெறவில்லை என்பது உதயநிதி தரப்புக்குக் கவலையை உண்டாகியிருக்கிறது. முதற்கட்ட மாற்றத்தில் விட்டுவிட்டு அடுத்துவரும் பட்டியலில் உதயநிதியின் சிபாரிசு ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-09/887101a7-1747-4c27-b39c-dcc7e6681935/61eb30917a2c6.jpg)
முதற்கட்ட பட்டியலைத் தாண்டி, அடுத்தகட்ட பட்டியலும் தயாராகிக்கொண்டிருக்கிறது. அதில், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்படும். சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவிடம் ஆறு தொகுதிகளும், அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் ஐந்து தொகுதிகளும் இருக்கிறது. இந்த இரண்டு மாவட்டங்களும் பிரிக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு, மாதவரம் சுதர்சனத்திடமிருந்தும், ஆர்.டி.சேகரிடமிருந்தும் ஒரு தொகுதிகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இந்த பட்டியல் இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகக்கூடும்" என்றார்கள் விரிவாக.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல அதிரடிகளை, பல்வேறு கட்சிகளிலும் காணலாம்.!
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play