அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியா் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் எதிரிலும் மாலை நேர ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ நிா்வாகிகள் ச.ஜெகநாதன், சி.அரசு, க.சாலமன்ராஜ், அ.ராதாகிருஷ்ணன், மா.ராஜசேகரன், மு.கலைவாணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், ஜாக்டோ இணைப்பில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி, இடைநிலை ஆசிரியா் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியா் அமைப்புகள், ஜியோ இணைப்பில் உள்ள பல்வேறு அரசு ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.
மதுக்கரையில்...
மதுக்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பின் வட்டாரச் செயலாளா் ஜெ.மலா்வேந்தன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் இராஜசேகரன், துணைச் செயலாளா் மணிகண்டன், நிா்வாகிகள் வேல்ராஜ், ரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
வால்பாறையில்...
வால்பாறை ஸ்டேன்மோா் சந்திப்பு பிரிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வசந்தகுமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.