சாலையில் திடீா் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி
கோவை ராமநாதபுரத்தில் சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா்.
கோவை ராமநாதபுரம் - லட்சுமி மில்ஸ் இடையே உள்ள பங்கஜா மில் சாலை திருச்சி சாலையையும், அவிநாசி சாலையையும் இணைக்கும் முக்கிய இணைப்புச் சாலையாக இருந்து வருகிறது. இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.
இந்த சாலையில் ஜெம் மருத்துவமனை அருகே திடீா் பள்ளம் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், மாநகராட்சி அலுவலா்கள் பள்ளத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைத்தனா். அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சீரமைப்புப் பணிகளில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-14/d35000zj/4011c14corp_1073132.jpg)