செங்கோட்டையன் போர்க்கொடி... வாரிவிடும் ஐகோர்ட் தீர்ப்பு... நெருக்கடியில் சிக்கிய எடப்பாடி?
சமீபத்தில் கோவையில் அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துக்கொள்ளவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், "அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்கள் வைக்கப்படாததால் பங்கேற்கவில்லை" என விளக்கமளித்தார். இது அ.தி.மு.க-வுக்குள்ளும், வெளியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/llyc5qhy/82187_thumb.jpg)
பிறகு இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "நிகழ்ச்சியை அ.தி.மு.க ஏற்பாடு செய்யவில்லை. விவசாயக் கூட்டமைப்புகளால்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துக்கொண்டிருந்தனர். எந்தவித அரசியல் காழ்புணர்வும் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் பாராட்டு விழா நடந்திருந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டிருக்கும்" என்றார். பிறகு செங்கோட்டையன் இல்லத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இது சூழ்நிலையை மேலும் பரபரப்பாக்கியது. ஆனால், "இது வழக்கமான நிகழ்வுதான்" எனச் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதற்கிடையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய செங்கோட்டையன், "நான் செல்லும் பாதை எம்.ஜி.ஆர், ஜெயலிலதா வகுத்துக் கொடுத்த பாதை. என்னைப் பற்றி எத்தனையோ பேர் என்னவெல்லாமோ பேசி கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அதைப் பற்றி கவலையும் இல்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். அதை மறந்து விடக் கூடாது. என்னைச் சோதிக்காதீர்கள். இதை நான் வேண்டுகோளாக வைக்கிறேன்" என்றார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-08-26/wz3fp4fq/143065.jpeg)
இதுகுறித்து நம்மிடம் பேசிய எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள், "`அதிகாரத்தைக் கைப்பற்றியது முதலே எடப்பாடி பழனிசாமி தரப்பு செங்கோட்டையனை ஓரங்கட்டத் தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் வேலுமணியை வளர்த்துவிட்டார். இது சீனியரான செங்கோட்டையனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஆனாலும், பெரிதாக வெளியில் பேசாமல் இருந்தார். இந்த சூழலில்தான் செங்கோட்டையனிடமிருந்த தலைமை நிலையச் செயலாளர் பதவியையும் வேலுமணிக்குக் கொடுத்து அழகு பார்த்தார், எடப்பாடி. இப்படி தொடர்ச்சியாக அடிமேல் அடி விழுந்துகொண்டிருந்தது. இந்த சூழலில்தான் பாராட்டு விழாவுக்கான அழைப்பிதழில், வேலுமணிக்குக் கீழே செங்கோட்டையனின் பெயர் போடப்பட்டிருந்ததுதான். இது ஏற்கெனவே கோபத்தில் இருந் செங்கோட்டையனை மேலும் சூடாக்கிவிட்டது" என்றனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில்தான் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கூடவே தேர்தல் ஆணைய விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "ஒரு இயக்கம் பிளவுபட்டால், யார் உண்மையாக அதை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று விசாரித்து சொல்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கிறது. இவற்றின்படி, உள்கட்சி விவகாரங்களில் தலையிட தங்களுக்கு உரிமை இல்லை என்று தேர்தல் ஆணையம் நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்டுவிட்டது. இருப்பினும், நீதிமன்றத்தில் இன்று இப்படித் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதைத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகத் தேர்தல் ஆணையம் எடுத்துக்கொண்டதை நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/913eb6a0-42d8-46ea-9789-79ff29703a9f/141346_thumb.jpg)
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "இந்த இயக்கம் 50 ஆண்டுகாலம் இரு தலைவர்களும் உயிரைக்கொடுத்து காப்பாற்றியது. விதி 45-ன் படி, அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் பொதுச்செயலாளார் பதவி தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதியை யாராலும், எந்த சூழ்நிலையாலும் மாற்ற முடியாது. வரும் 2026 தேர்தலில் அனைவரும் ஒன்றாக இணைந்தால் வாழ்வு. இல்லையென்றால் எல்லோருக்கும் தாழ்வுதான். அ.தி.மு.க-வில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அமித் ஷா எவ்வளவோ சொன்னார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எதையும் ஏற்கவில்லை. அதன் விளைவுதான் இன்று எதிர்கட்சியாக இருக்கக்கூடிய சூழல்" என்றார்.
இதற்கு எதிர்வினையாற்றிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், "புரட்சித்தலைவி அம்மா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்று எடப்பாடி செயல்படுகிறார் என்று ஆர்.பி. உதயகுமார் எப்போதும் காமெடி செய்து கொண்டே இருப்பார். இந்த உலகத்தில் அம்மா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நிகராக யாருமே கிடையாது. ஆர்.பி. உதயகுமார் பேசுவதை நாம் காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இந்த விஷயத்தில் செங்கோட்டையன் அவர்கள் எடுத்திருப்பது அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயமாகும்" என்றார்.
இதனைத் தொடர்ந்தே இன்று மதுரை மேலூரில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஜன் செல்லப்பா, ''அ.தி.மு.க வளர வேண்டுமமென்றால் ஓ.பி.எஸ் போன்ற யாருமே நீதிமன்றத்துக்குச் செல்லக்கூடாது. ஒரு ஆறு மாதத்துக்கு அமைதியாக இருக்க வேண்டும். அப்படி அமைதியாக இருந்தால் எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடியிடம் சென்று அவருக்காகப் பேசுவோம்" என்றார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/a0d32691-4819-49f0-9b94-a2d333199de3/ttv_dinakaran.jpg)
செங்கோட்டையனின் எதிர்ப்பு, நீதிமன்றத்தின் உத்தரவு என இருமுனை தாக்குதலால் கதிகலங்கி நிற்கிறார், எடப்பாடி பழனிசாமி. இது அந்த கட்சிக்குள் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பேசினோம், "இதில் தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க ஒன்றும் இல்லை. சின்னம் தொடர்பான பிரச்னைகளில்தான் அவர்கள் விசாரிக்க முடியும். மற்ற அனைத்தும் உரிமையியல் நீதிமன்றம்தான் விசாரிக்கும். இதில் எடப்பாடிக்குப் பெரும் பின்னடைவுதான். பா.ஜ.க இதை வைத்து அரசியல் செய்யும். இந்த சூழலில் தேவையில்லாமல் ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்கள் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். இது கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தைத் தேவையெல்லாம் வீணடிக்கிறார்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-10-23/i3wshuvh/WhatsApp_Image_2023_12_11_at_1_27_10_PM.jpeg)
எடப்பாடி வீம்புக்காகப் பிரச்னையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஓ.பி.எஸ் மற்றும் அவருக்குப் பின்னால் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் இருக்கிறார்கள். இவர்களை எடப்பாடி அழைத்து பேசினால் பிரச்னை இந்நேரம் முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் கட்சிக்குள் வந்தால் தனக்கு பிரச்சினை ஏற்படும் என எடப்பாடி நினைக்கிறார். இந்த இடத்தில்தான் எடப்பாடி தவறு செய்கிறார். ஓபிஎஸ் உள்ளே வந்தாலும் தனக்கு எதிராக வேலை செய்யாத அளவுக்கு நிபந்தனைகளை அவருக்கு விதிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதற்குப் பின்னால் எடப்பாடியைக் கூட்டணிக்குக் கொண்டுவரும் பா.ஜ.க-வின் திட்டம் இருக்கிறது. அவர்கள் ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலா போன்றவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறது. இதேபோல் செங்கோட்டையன் யார் பிடியில் இருக்கிறார் எனத் தெரியவில்லை. ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்தால் பிரச்சினைதான் வளரும்" என்றார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play