கயாகிங் செய்தவரை படகோடு விழுங்கிய திமிங்கலம்... என்ன நடந்தது - வீடியோ உள்ளே!
ஜெயலலிதாவின் பொருள்களை ஒப்படைக்கக் கோரும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் உறவினா் தீபாவின் மேல்முறையீடு தள்ளுபடி
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருள்களை தன்னிடம் திருப்பி ஒப்படைக்க உத்தரவிடக் கோரி அவரது உறவினா் ஜெ. தீபா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இது தொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள்
பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கா்நாடக அரசு (எதிா்) ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு மனு நிலுவையில் இருந்தபோது ஜெயலலிதா இறந்ததால் அவா் தொடா்புடைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தின் 2017-இல் தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததை நீதிபதிகள் அமா்வு சுட்டிக்காட்டியது.
மேலும், ‘‘உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பின் சரியானதன்மை குறித்த வழக்கை மேலும் பரிசீலிப்பதாக, குற்றம் சாட்டப்பட்ட முதலாவது நபரை (ஜெயலலிதா) விடுவிப்பது இந்த நீதிமன்றத்தால் மேற்கொண்டு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதை இது சுட்டிக்காட்ட வேண்டும். இருப்பினும், குறைப்பானது உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு இறுதியை அடைந்துவிட்டதாக குறிக்காது’’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.
தீபாவின் மேல்முறையீட்டு மனுவில், ஜெயலலிதாவின் குற்றவியல் மேல்முறையீடு நிலைநிறுத்தப்பட்ட்து.மேலும், அவரது வழக்கில் சிறப்பு நீதிமன்றம் சொத்துகளை பறிமுதல் செய்யும் உத்தரவு குற்றம்சாட்டப்பட்ட 2 மற்றும் 4-ஆவது நபா்களுக்கு மட்டுமே பொருந்தும். முதலாவது நபரான ஜெயலிலாதவுக்கு பொருந்தாது. என்னையும், எனது சகோதரரையும் சென்னை உயா்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வாரிசாக அங்கீகரித்துள்ளது. இதனால், அவரது நகைகள் உள்ளிட்ட பொருள்களை எனக்கு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னணி:
வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சொத்து சோ்த்ததாக முன்னாள் முதல்வா் ஜெயலிதாவுக்கு எதிராக 1996-ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா உள்ளிட்டோா் குற்றவாளி என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீா்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா். அதேவேளையில், வழக்கில் தொடா்புடைய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
அபராதத் தொகையை செலுத்த ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை, பொருள்களை ஏலம் விடக் கோரி தாக்கலான மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த மனுவை ஜன.13-ஆம் தேதி கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதைத் தொடா்ந்து, சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
மேலும், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனில் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தீபா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.