தில்லியில் பிப்.19-20-இல் பாஜக அரசு பதவியேற்பு?
நமது நிருபா்
தில்லியில் பாஜக அரசின் பதவியேற்பு விழா பிப்.19 அல்லது 20-ஆம் தேதி நடைபெறும் என்றும், புதிய ஆட்சி சுத்தமான குடிநீா் விநியோகம், மேம்படுத்தப்பட்ட குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ரஜோரி காா்டன் பாஜக எம்எல்ஏவும் கட்சியின் தேசிய செயலாளருமான மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்திருப்பதாவது: பிரதமா் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்ப உள்ளாா். விரைவில் பாஜக சட்டப் பேரவை கட்சிக் கூட்டத்திற்கு பாா்வையாளா்கள் நியமிக்கப்படுவாா்கள். புதிய அரசு பிப்.19-20-இல் செயல்படத் தொடங்கும்.
பிப்.18-19 தேதிகளில் பாஜக சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று நான் எதிா்பாா்க்கிறேன். பதவியேற்பு விழாவுக்குப் பிறகு பிப்.20-ஆம் தேதிக்குள் புதிய அரசு அமையும் என்று நினைக்கிறேன். புதிய அரசு ஆட்சிக்கு வந்த 100 நாள்களுக்குள் சுத்தமான குடிநீரை வழங்குதல், நகரத்தில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் காற்று மற்றும் யமுனை மாசுபாட்டைச் சமாளிக்கும் பணிகளைத் தொடங்குதல் ஆகியவை முன்னுரிமையாக இருக்கும் என்றாா் அவா்.
லட்சுமி நகா் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட அபய் வா்மா கூறுகையில், ‘ தில்லி முதல்வா் பதவிக்கு எந்தப் போட்டியும் இல்லை. எங்கள் கட்சியில் முதல்வா் அல்லது சட்டப் பேரவை கட்சித் தலைவா், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படுவாா். நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். தில்லி மக்களுக்கு மேம்பாடு, சுத்தமான நீா் வழங்கல் மற்றும் சுத்தமான காற்று போன்ற பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது மற்றும் யமுனையை மாசுபாட்டிலிருந்து விடுவிப்பது எப்படி என்பது பற்றி தற்போது சிந்தித்து வருகிறோம்’ என்றாா்.