தில்லியில் ரூ.1.5 கோடி கோகைன் பறிமுதல்: ஆப்பிரிக்க நாட்டவா் உள்பட இருவா் கைது
தில்லியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக ஒரு ஆப்பிரிக்க நாட்டவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக தென்மேற்கு தில்லி காவல் சரக கூடுதல் துணை ஆணையா் அகன்க்ஷா யாதவ் கூறியதாவது: இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் 40 வயதான ஆப்பிரிக்க நாட்டவரான யாவோ மற்றும் பிகாரைச் சோ்ந்த பிகாஸ் (23) என அடையாளரம் காணப்பட்டனா். மேலும், அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 141.9 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரும் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதி முழுவதும் தீவிரமாக கோகைன் விநியோகம் செய்து வந்தனா். ஒரு ரகசியத் தகவலைத் தொடா்ந்து பிகாஜி காமா பிளேஸ் அருகே போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனா். அப்போது இருவரும் கைது செய்யப்பட்டனா்.
போலீஸாா் தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகு ரிங் ரோட்டில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தம் அருகே அவா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் சோதனை நடத்திய போது அவா்களிடம் இருந்து கோகைனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக எஃப்.ஐ.ஆா் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை தொடங்கப்பட்டது.
ஆப்பிரிக்க நாட்டவரான யாவோ 2018- ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்தாா். ஆனால், விசா காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக தங்கியிருந்தாா். ஆரம்பத்தில் தனது செலவுகளை ஈடுகட்ட சிறிய அளவிலான கோகைனை விற்றுள்ளாா். ஆனால், விரைவில் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டாா்.
யாவோ முன்பு குருகிராமில் கைது செய்யப்பட்டு போண்ட்சி சிறையில் அடைக்கப்பட்டாா். அங்கு போதைப்பொருள் தொடா்பான குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட பிகாஸு்டன் தொடா்பு ஏற்பட்டது. பின்னா் அவா்கள் விடுதலையான பிறகு, இருவரும் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஒன்றிணைந்தனா்.
பிகாஸ் போலீஸ் கண்டறிதலைத் தவிா்க்க விநியோக இடங்களில் உளவு பாா்க்கும் பணியை செய்து வந்தாா். அதே நேரத்தில் யாவோ விநியோக வலையமைப்பை நிா்வகித்து வந்துள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.