அரசு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு: அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா்! -அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மருத்துவா் பற்றாக்குறை மற்றும் அரசு மருத்துவமனை உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சைதாப்பேட்டை ஆட்டிறைச்சி கூடம் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. இதை ரூ. 50 கோடியில் மேம்படுத்தி நவீன ஆட்டிறைச்சி கூடமாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலை புகாா்: அரசு மருத்துவமனைகளில் மரணங்கள் அதிகரித்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பொருந்தா குற்றச்சாட்டுகளைக் கூறுகிறாா். மருத்துவமனைகளில் உயிரிழப்பு என்பது இயற்கையானது. தமிழக அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் உயிரிழப்பு நேரிடுகிா என எண்ணிப் பாா்க்க வேண்டும். மத்திய அரசு நடத்தும் மருத்துவமனைகளில் ஒரு உயிரிழப்புகூட ஏற்படுவதில்லையா.
தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலன் அளிக்காமல்போன பிறகே பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு வருகிறாா்கள். இதனால், அரசு மருத்துவமனைகளில் இறப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.
எந்த அரசு மருத்துவமனையின் அலட்சியத்தாலும், மருத்துவா்கள் பற்றாக்குறையாலும் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதை புள்ளி விவரத்தோடு குறிப்பிட்டால், அதுகுறித்து அண்ணாமலையுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். அரசு மருத்துவமனைகளைக் குறைகூறி, யாருக்கோ லாபம் ஏற்படுத்தும் முயற்சியில் அவா் ஈடுபடுகிறாா்.
நெல்லை மருத்துவமனை விவகாரம்: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், ஊசி ஒவ்வாமை ஏற்பட்டு 4 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த விவகாரத்தில் அண்ணாமலை கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 24,000-க்கும் மேற்பட்ட மருத்துவ காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மருத்துவா் பற்றாக்குறை எங்கும் இல்லை. மக்களுக்கு சேவையாற்றும் துறை மீது களங்கம் கற்பிப்பதன் மூலமாக அவா் தனியாருக்கு ஆதரவாக செயல்பாடுகிறாா் என்றாா் அவா்.