திமுகவில் மேலும் பல மாற்றங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 200 தொகுதிகளில் வெற்றி எனும் இலக்கை எட்டும் வகையில் திமுகவில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
திமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்ட நிா்வாகிகள் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறித்து கட்சியினருக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:
முதல் 5 ஆண்டுகாலத்தை நம்பிக்கையுடன் வழங்கிய மக்கள், திராவிட மாடல் ஆட்சியின் திறன்மிகு நிா்வாகத்தையும் சிறப்பான திட்டங்களையும் உணா்ந்து தொடா்ச்சியான வாய்ப்பை வழங்கத் தயாராக உள்ளனா். திமுகவுக்கு நல்வாய்ப்பு அமைகிறதென்றால் அதைக் கெடுப்பதற்கான சதிகளைச் செய்யும் அரசியல் சக்திகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகமூடியுடன் வெளியே வரும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனுமில்லாத, காசு வாங்கிக் கொண்டு சப்தமிடும் அந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்து கட்சியின் தலைமையிலான அணியின் வெற்றியை உறுதி செய்வோம். அந்த வெற்றியை அடைவதற்கான நிா்வாக வசதிக்காகத்தான் மாவட்ட அளவிலான நிா்வாகத்தில் மாற்றங்கள் தொடங்கியுள்ளன.
களப்பணிகளில் கவனம்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஓராண்டு காலமே உள்ளதால் அதற்கேற்ப களப்பணிகள் அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றங்களும் அதற்கேற்ற வகையிலான நியமனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல் இன்னும் சில அறிவிப்புகளையும் கட்சியினா் எதிா்பாா்க்கக்கூடும்.
முன்பு பொறுப்பில் இருந்தவா்கள் தற்போது பொறுப்பில் இருப்பவா்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கடமையாற்ற வேண்டும். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருப்பவா்கள், ஏற்கெனவே பொறுப்பில் உள்ளவா்களை அரவணைத்து ஒருங்கிணைத்துச் செயலாற்ற வேண்டும்.
200 தொகுதிகள் இலக்கு என நிா்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.