அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்.20-இல் பாமக போராட்டம் -அன்புமணி
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சாா்பில் பல்வேறு சமூக அமைப்புகளின் சாா்பில் சென்னையில் பிப்.20-இல் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்துவதற்காக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், அதற்கான எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்வதாக தெரியவில்லை. 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் விஷயத்தில் அக்கறையின்றி, சமூகநீதிக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது.
தமிழக அரசு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்ற பழைய பல்லவியையே மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கண்டிக்கும் வகையிலும், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் பாமகவின் சமூகநீதி கூட்டமைப்புக் கட்சிகள் இணைந்து பிப்.20 காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் தொடா் முழக்கப் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும்.
பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன். அமமுக துணைப் பொதுச் செயலா் செந்தமிழன், புரட்சி பாரதம் தலைவா் பூவை ஜெகன் மூா்த்தி, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ரவி பச்சமுத்து உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனா் என்று அவா் கூறியுள்ளாா்.