Doctor Vikatan: நீரிழிவு; புண்கள் ஆறிவிட்டால், diabetes இல்லை என்று அர்த்தமா?
Doctor Vikatan: நீரிழிவு நோய் வந்தால், உடலில் ஏற்படும் காயங்கள் சீக்கிரம் ஆறாது என்பார்கள். அப்படியென்றால், டாக்டர்களால் நீரிழிவு நோய் வந்துள்ளது என்று சொல்லப்படுபவர்களுக்கு அல்லது சர்க்கரையின் அளவு குறிக்கப்பட்டதைவிட தாண்டி இருப்பவர்களுக்கு வரும் காயங்கள், புண்கள் நீரிழிவு நோய் இல்லாத மற்றவர்களைப் போல ஆறிவிட்டால், அவர்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்று அர்த்தமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி
பொதுவாக புண்கள் ஆறுவது என்பது நான்குவிதமான படிநிலைகளைக் கொண்டது. முதல்நிலை ஹீமோஸ்டாஸிஸ் (hemostasis ) எனப்படும். இதில் அடிபட்டதும் ரத்தம் வரும். சில நொடிகளில் அல்லது நிமிடங்களில், நாம் அழுத்திப் பிடிப்பதாலோ அல்லது பேண்ட் எய்டு போடுவதாலோ, அந்த ரத்தக்கசிவு நிற்கும் நிலை இது.
இரண்டாவது படிநிலையை இன்ஃப்ளமேஷன் (inflammation) என்கிறோம். அடிபட்ட இடத்தில் ஏற்படுகிற வீக்கத்தைக் குறிப்பது. இந்த நிலையில்தான் காயம்பட்ட இடத்தில் அல்லது புண் உண்டான இடத்தில் உள்ள சின்னச் சின்ன திசுக்கள் ஒன்றுசேர்ந்து, அந்தப் புண் ஆறுவதற்கான வழிகளைச் செய்யும். மூன்றாவது படிநிலையை 'புராலிஃபெரேஷன்' (proliferation) என்று சொல்கிறோம்.
இந்த நிலையில், புண் உள்ள இடத்தில் உள்ள திசுக்கள் ஒன்றுசேர்ந்து அங்குள்ள தசையை வளரவைக்கும். அப்போதுதான் அந்த இடம் மூடும், சேரும்.
நான்காவது நிலையை 'ரீமாடலிங் ஆஃப் ஸ்கார்' (remodeling of scar) என்கிறோம். புண் ஏற்பட்ட இடத்தின் மேல் கறுப்பாக ஒரு படலம் ஏற்படுவதும், சில நாள்களில் அது உதிர்ந்து, அந்தப் பகுதி வெள்ளையாக மாறுவதும் இந்த நிலையில்தான் நடக்கும். புண்கள் ஆறுவதில் இந்த நான்கு நிலைகளும் எல்லோருக்கும் நிகழ்பவை.

அதுவே நீரிழிவாளர்களுக்கு முதல் நிலையான ஹீமோஸ்டாஸிஸ் உடனே நடந்துவிடும். அடுத்த நிலையான இன்ஃப்ளேமேஷனில்தான் அவர்களுக்குப் பிரச்னையே ஆரம்பிக்கும். இந்த நிலை அவர்களுக்கு 24 முதல் 72 மணி நேரம் வரை தொடரும். இந்தக் கட்டத்தில் அந்தப் புண்ணை சரியாகப் பராமரிக்காவிட்டால், அதாவது அதற்கான மருந்து தடவாமல், ஆன்டிபயாட்டிக் எடுக்காமல் விட்டால், இன்ஃப்ளமேஷன் நிலை நீளும். இன்ஃப்ளமேஷன் நிலை எந்த அளவுக்கு நீட்சி அடைகிறதோ, அதே அளவுக்கு அடுத்தடுத்த நிலைகளும் நீளும். உதாரணத்துக்கு, ஒரு புண் 4 முதல் 6 நாள்களில் ஆறக்கூடியது என்ற நிலையில், இன்ஃப்ளமேஷன் நிலை நீளும்போது, அதே புண்ணானது ஆறுவதற்கு 7 முதல் 21 நாள்கள், சிலருக்கு 3 மாதங்கள் வரைகூட ஆகலாம். இன்னும் சிலருக்கு ஆறாமலே இருக்கவும் வாய்ப்பு உண்டு. இது சம்பந்தப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பாற்றலைப் பொறுத்தது.
நீரிழிவாளர்களுக்கு பொதுவாகவே நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருக்கும். சருமத்தின் அடியிலுள்ள ஈரப்பதமும் குறைவாக இருக்கும். இந்த இரண்டும் சேரும்போது, இன்ஃப்ளமேஷன் நிலை நீளும். சில நீரிழிவாளர்களுக்கு அரிதாக நோய் எதிர்ப்பாற்றலும் சிறப்பாக இருக்கும், சருமத்தின் ஈரப்பதமும் நன்றாகவே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு புண்கள் ஆறுவதும் சீக்கிரமே நடக்கும்.
எனவே, நீரிழிவாளர்களின் நோய்நிலை என்பது எல்லோருக்கும் ஒன்றுபோல இருக்காது. நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு உறுப்புகள் பாதிக்கப்படலாம். சிலருக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் பாதிப்பு இருக்காது. அது அவரவர் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டைப் பொறுத்தது.

எனவே, புண் சீக்கிரம் ஆறுவதைவைத்தோ, அடிக்கடி தாகம் எடுப்பதில்லை என்பதை வைத்தோ, அடிக்கடி சிறுநீர் கழிப்பதில்லை என்பதை வைத்தோ, தலைச்சுற்றல் இல்லை என்பதை வைத்தோ, சருமத்தில் அரிப்போ, வெடிப்போ இல்லை என்பதை வைத்தோ, தனக்கு சர்க்கரை நோயே இல்லை என முடிவுக்கு வரக்கூடாது. அதாவது வெறும் அறிகுறிகளை மட்டுமே வைத்து நீரிழிவை முடிவு செய்ய முடியாது. இது வளர்சிதை மாற்றம் தொடர்பான ஒரு பிரச்னை. எனவே, அதைப் புரிந்துகொண்டு ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
