வக்ஃப் மசோதாவை கண்டித்து ஏப்.9-இல் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
Doctor Vikatan: வயதான அப்பாவுக்கு வருடம் முழுக்க சளி, இருமல்; சித்த மருத்துவம் உதவுமா?
Doctor Vikatan: என் அப்பாவுக்கு 65 வயதாகிறது. அவருக்கு வருடத்தின் பெரும்பாலான நாள்கள் சளியும் இருமலும் தொடர்கிறது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் அது அதிகமாகும்போது மட்டும் மருத்துவரைப் பார்த்து மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கொள்கிறார். மற்ற நாள்களில் சளி, இருமலை கட்டுப்பாட்டில் வைக்க சித்த மருந்துகள் உதவுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

வயதானவர்களின் சளி, இருமல் பிரச்னைக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த தீர்வுகள் உள்ளன. மிளகு, சீரகம், ஓமம் மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து சுத்தமான துணியில் கட்டி முடிச்சிட்டு தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். அதை வடிகட்டி, அந்த நீரை நாள் முழுவதும் குடிநீராகப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் சிறிது துளசியையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படிச் செய்தால் நெஞ்சில் சளி கட்டியிருந்தால் சரியாகும்.
ஆடாதோடா இலைகள், துளசி இலைகள், தூதுவளை இலைகள், சிறிது திப்பிலி சேர்த்துக் கொதிக்கவைத்த நீரை, கஷாயமாக வாரம் இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருவேளை குடிக்கலாம். திப்பிலியை வெறும் கடாயில் லேசாக வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். அதை சிறிதளவு தேனில் குழைத்து தினம் சிறிது சாப்பிடலாம். இதுவும் நெஞ்சு சளியை விரட்டும். சிலருக்கு சளி இருக்காது. ஆனால், அடிவயிற்றிலிருந்து இருமல் மட்டும் தொந்தரவு செய்யும். அவர்கள் அதிமதுரம், சித்தரத்தை சேர்த்த கஷாயம் குடிக்கலாம்.
சளித் தொந்தரவு உள்ளவர்கள், குளிர்ச்சியான, மந்தத்தை ஏற்படுத்துகிற எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. சளி என்பது நெஞ்சுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. வயிற்றில் மந்தம் உண்டானாலும் சளி வரும். வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்படுவோருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் வருவதையும், ஒன்றிரண்டு நாள்களில் காய்ச்சல் போனாலும் சளி மட்டும் நீடிப்பதையும் பார்க்கலாம். அதனால்தான் வயிற்றை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சளி அதிகமாக இருக்கும்போது செரிமானம் சரியாக இருக்காது. எனவே, இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டும். பிறகு துளசி, மஞ்சள் தூள் சேர்த்த வெந்நீரை குடிக்கலாம். பால் குடித்தே ஆக வேண்டும் என்பவர்கள், மஞ்சள்தூள், மிளகு, திப்பிலித் தூள் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். ஆனால், மாலையில் குடிப்பதுதான் சிறந்தது. பால் சேர்க்காத சுக்கு காபி, அதிமதுரம், தேன் கலந்த வெந்நீர் குடிக்கலாம். இரவில் தயிர்சாதம், கீரை போன்றவை கூடாது. குளிர்ச்சியான இடங்களில் வாக்கிங் செல்வது, அமர்ந்திருப்பது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
இஞ்சி சேர்த்த டீ, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்தரைத்த துவையல் சாப்பிடலாம். ஓமத்தை வறுத்துப்பொடித்துக் கொள்ளவும். அதை சிறிய துணியில் வைத்துக் கட்டி, அவ்வப்போது மூக்கின் அருகில் வைத்து இழுக்கலாம். இது மூக்கடைப்பை சரிசெய்து, சுவாசத்தை சீராக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
