KMH: 'ஹார்ட் வைஸ் க்விஸ் 2025' நிகழ்ச்சி; குழந்தைகளுக்கு இதய ஆரோக்கிய விழிப்புணர...
Doctor Vikatan: 20 வருடங்களாக சுகர் மாத்திரை, சுகர் குறைய இனி இன்சுலின் போட வேண்டுமா?
Doctor Vikatan: எனக்கு 20 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு இருக்கிறது. இத்தனை வருடங்களாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். என்னுடைய நண்பர் இனியும் மாத்திரை வேலை செய்யாது, இன்சுலினுக்கு மாறுங்கள் என்கிறார். இனி எனக்கு மாத்திரைகள் பலனளிக்காதா, நான் இன்சுலினுக்கு மாற வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி.
20 வருடங்களாக நீரிழிவுக்கு மாத்திரைகள் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று சொல்லவில்லை.
20 வருடங்கள் அல்ல, 40 வருடங்களாக நீரிழிவு இருந்தாலும், அதை நீங்கள் எந்த அளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் இதில் முக்கியம்.
ரத்தச் சர்க்கரை அளவானது, சாப்பாட்டுக்கு முன் 100-க்கு கீழும், சாப்பாட்டுக்குப் பிறகு அது 150-க்குக் கீழும் இருக்க வேண்டும். தவிர, ஹெச்பிஏ1சி (HbA1c) எனப்படும் மூன்று மாத சராசரி சர்க்கரை அளவானது 7-க்குக் கீழும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டில் இருப்பதாக அர்த்தம்.
கூடவே, நீரிழிவுடன் தொடர்புடைய பிற சிக்கல்கள் இல்லாமல் இருக்கிறீர்களா என்பதும் முக்கியம். உதாரணத்துக்கு, கால்களில், கண்களில், சிறுநீரகங்களில், இதயத்தில் இப்படி எந்தப் பிரச்னையும் இல்லாதபட்சத்தில், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறில்லை.

அதே சமயம், மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தாலும், ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றாலோ, நீரிழிவால் வேறு பிரச்னைகள் புதிதாகச் சேர்ந்துகொண்டிருந்தாலோ உங்கள் சிகிச்சையில் கவனம் செலுத்த வேண்டும்.
சிலருக்குத்தான் இன்சுலின் தேவைப்படும். அது எல்லோருக்கும் அவசியப்படாது. கணையத்தில் இன்சுலின் சுரப்பு எப்படியுள்ளது என்பதைப் பார்த்துவிட்டுதான் அது முடிவு செய்யப்படும்.
பொதுவாக, டைப் 1 நீரிழிவு பாதித்தோருக்கும், நீரிழிவால் வேறு சிக்கல்கள் இருப்போருக்கும் இன்சுலின் பரிந்துரைக்கப்படலாம். இன்சுலின் சுரப்பு அறவே இல்லாதவர்களுக்கும் அது பரிந்துரைக்கப்படும். மற்றபடி எல்லோருக்கும் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.