வளையல் விற்பனை முதல் மதம் மாற்றம் செய்தது வரை... கிராமத் தலைவரின் வங்கிக் கணக்கி...
Doctor Vikatan: சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது உண்மையா?
Doctor Vikatan: நீரிழிவு உள்ளவர்கள் சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து சப்பாத்தி சாப்பிடுவது சரியானதா. இன்னொரு பக்கம், சப்பாத்தி சாப்பிடுவதால்தான் அதில் உள்ள குளூட்டன் காரணமாக பலருக்கும் சர்க்கரைநோய் வருகிறது என்றும் சிலர் சொல்கிறார்களே, அது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

சப்பாத்தி சாப்பிட்டால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும் என்பது தவறான கருத்து. அரிசி உணவுகளிலும் கோதுமை உணவுகளிலும் சம அளவு சர்க்கரைச்சத்து தான் இருக்கும். எனவே, அரிசி உணவுகளைச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் அதே வாய்ப்பு, கோதுமை உணவுகளைச் சாப்பிடுவதிலும் இருக்கிறது.
நீரிழிவு பாதித்தவர்கள் எந்த உணவைச் சாப்பிட்டாலும், அதில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.
அடுத்தது உணவின் அளவும் முக்கியம். உதாரணத்துக்கு, சப்பாத்தி என எடுத்துக்கொண்டாலும், அவரவர் உடல் எடை, உயரத்தைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம். சப்பாத்தி நல்லது என்ற எண்ணத்தில் ஆறு, ஏழு என்று சாப்பிட்டால், அது நிச்சயம் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
அதேபோல எந்த நேரத்தில் சாப்பிடுகிறார்கள் என்பதும் முக்கியம். இரவு தாமதமாக சப்பாத்தி சாப்பிட்டிருந்தால், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சுகர் டெஸ்ட் செய்து பார்த்தால் நிச்சயம் அதிகமாகத்தான் காட்டும். இது சப்பாத்திக்கு மட்டுமல்ல, அரிசி உணவுகளுக்கும் பொருந்தும்.

சப்பாத்தி செய்யப் பயன்படுத்தும் கோதுமை மற்றும் மைதாவில் குளூட்டன் அதிகமிருப்பதாகவும், அதனால்தான் சப்பாத்தி சாப்பிடுவோருக்கும் சர்க்கரைநோய் வருவதாகவும் ஒரு கருத்து மக்களிடம் இருக்கிறது.
கோதுமை, மைதா மாவில் குளூட்டன் இருக்கிறது. அந்த குளூட்டன் சர்க்கரைநோயை உருவாக்குவதில்லை. குளூட்டன் அலர்ஜி உள்ளவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருக்கும். அதாவது வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற உணர்வுகள் வரலாம். குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் கோதுமை, மைதா உள்ளிட்ட குளூட்டன் உள்ள உணவுகளைத் தவிர்ப்பதுதான் சரியானது.
சப்பாத்தியோ, சாதமோ, இட்லி, தோசையோ... எந்த உணவானாலும் அளவு முக்கியம். ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அளவைத் தாண்டி எடுத்துக்கொள்ளும்போதுதான் பிரச்னையே.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.