உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: லோக்பால் விசாரணைக்கு தடை
DOGE: `இந்தியாவுக்கு வழங்கப்பட்ட ரூ.182 கோடி ரத்து' -அமெரிக்க நிதி நிறுத்தப்பட்ட பிற நாடுகள் எவை?
அமெரிக்காவில் எலான் மஸ்க் தலைமையில் செயல்படும் அரசு செயல்திறன் துறை (The Department of Government Efficiency (DOGE)), இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர் (ரூ.182 கோடி) நிதியை நிறுத்தியுள்ளது.
DOGE அமெரிக்காவால் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துவகையான நிதியுதவிகளையும் நிறுத்தி வருகிறது. இதனால் இந்தியா, வங்காள தேசம், ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட பல வளரும் நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர்.
இதுகுறித்த DOGE சமூக வலைத்தளத்தில், "பின்வரும் விஷயங்களுக்காக செலவிடப்பட்டிருந்த அமெரிக்கர்களின் வரிப்பணம் நிறுத்தப்பட்டுள்ளது" என ஒரு பதிவை வெளியிட்டிருந்தது.
அந்த பதிவில் பல நாடுகளுக்கு பல விஷயங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதி பட்டியலிடப்பட்டிருந்தது. அதில் இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வழங்கப்படும் 21 மில்லியன் டாலரையும் சேர்த்திருந்தனர்.
டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த முதல்நாளே இதுகுறித்த அறிவிப்பில் கையெழுத்திட்டிருந்தார். எலான் மஸ்க் தலைமையிலான இந்த துறை, வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் உள்நாட்டில் பல துறைகளில் ஆள்குறைப்பு செய்துள்ளது, செலவுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
அமெரிக்க அதிபர், இந்திய பிரதமரை சந்தித்த சில நாள்களில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தபோது இதுகுறித்து எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேப்போல, அமெரிக்காவிலிருந்து அழைத்துவரப்படும் இந்தியர்களுக்கு கைவிலங்கிடுவது குறித்தும் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்தபோதும் அங்கிருந்து அனுப்பப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நிதி ரத்து செய்யப்படுவது குறித்து பாஜக தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் தளத்தில், "வாக்களர்களை அதிகரிக்க 21 மில்லியன் டாலர்கள்? இது இந்தியாவின் தேர்தல் நடைமுறையில் வெளிநாடு தலையிடுவதாகும். இதனால் யாருக்கு லாபம்? நிச்சயமாக ஆளும் கட்சிக்கு அல்ல" எனப் பதிவிட்டிருந்தார்.

DOGE அமெரிக்காவால் வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகள் நிறுத்தப் பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா, வங்காளதேசம், நேபால், மொசாம்பிக், லிபேரியா, மாலி,செர்பியா, செக் குடியரசு, மால்டோவா, எகிப்து, தெற்கு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சில ஆசிய நாடுகளும் அடங்கும்.
அமெரிக்க பயணத்தின்போது எலான் மஸ்கை சந்தித்த மோடி, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆராய்ச்சி, புதுமைகளை உருவக்கும் அமெரிக்க, இந்திய நிறுவனங்கள் இணைந்து செயல்படுதல், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள், தொழில்முனைவு, அரசு நிர்வாகம் என பல விஷயங்களைக் கலந்துரையாடியதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.