MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்ன...
Dushara: 'கலைவாணியாக பயணித்த இந்த அனுபவம்..'- வீர தீர சூரன் பாகம் 2 குறித்து நடிகை துஷாரா நெகிழ்ச்சி
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பாகம் -2'.
பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை வெளியாகியிருந்தது இப்படம். ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரௌடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும், தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் போராடும் விக்ரமின் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபத்திரமும் சிறப்பாக வடிவைமைக்கப்பட்டு, அதில் நடித்திருந்த நடிகர்கள் திரையில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். மனைவியுடன் சேட்டை, பதற்றம், கோபம், பயமற்ற நெஞ்சுரம் என தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விக்ரம்.
சூது, வன்மம், சூழ்ச்சி ஆகிய வில்லத்தனங்களில் அசத்தியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. நிசப்தமான சூழலில் கேட்கும் கடிகார முள்ளின் ஒலியைப்போல, ‘திக் திக்’ திரில் உணர்வை தன் பின்னணி இசையில் கடத்தி, கதைக்கு பலம் சேர்த்திருந்தார் ஜி.வி.பிரகாஷ். ஒட்டு மொத்தமாக ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் என சிறப்பாக இயக்கியிருக்கிறார் எஸ்.யூ. அருண்குமார்.
குறிப்பாக விக்ரமின் மனைவியாக கலைவாணி (துஷாரா ) காதல் கெமிஸ்ட்ரியில் சிறப்பாக நடித்து, "என்ன நடக்கிறது" என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக் கடத்தி, நடிப்பில் அசத்தியிருந்தார். இப்படி படக்குழுவினர் எல்லோருக்கும் வாழ்த்துகள் குவிந்த வருகின்றன.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் துஷாரா, "இப்படம் தொடங்கிய முதல் நாளில் இருந்து, கடைசி நாள் வரை கலைவாணியாக பயணித்த இந்த அனுபவம் என்றும் என் மனதில் நீங்காமல் நிறைந்திருக்கும். இப்படத்தில் நடிக்க வாய்ப்பு தந்த இயக்குநர் ஸ்.யூ. அருண்குமார், தயாரிப்பாளர் இருவருக்கும் என் நன்றிகள்.
விக்ரம் சாரின் அர்ப்பணிப்பும், எனர்ஜியும் என்றும் என்னையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும். எஸ்.ஜே.சூர்யா சாரின் திறமையின் மீது என்றும் மரியாதை உண்டு. ஜி.வி.பிரகாஷ் சார் தனது சக்திவாய்ந்த இசையால் இப்படத்திற்கும், என்னுடைய கலைவாணி கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்து மேஜிக் செய்திருக்கிறார். கேமரா, எடிட்டர், ஆர்ட் டைரக்டர் என அனைவருக்கும் என் நன்றிகள். கலைவாணி கதாபாத்திரத்தை அழகாக திரையில் கொண்டு வந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். மேலும், 'அன்புடன் சியான் விக்ரம்' என தன் கையில் விக்ரம் கையெழுத்திட்ட புகைப்படத்தையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் துஷாரா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...