சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன்: சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட இந்தியா!
H-1B: "ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம்" - அமெரிக்கா விளக்கம்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சர்ச்சைக்குரியதாக இருக்கின்றன. அவரின் முடிவுகளால் அமெரிக்க மக்களே பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் உலக நாடுகள் மீது டொனால்டு ட்ரம்ப் விதித்திருக்கும் இறக்குமதி வரியால் அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது.
தற்போது புதிதாக அமெரிக்காவிற்கு வேலை தேடி வருபவர்கள் H-1B எனப்படும் விசா பெற ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டும் என்று டொனால்டு ட்ரம்ப் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து இருக்கிறார்.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் இக்கட்டண உயர்வை அறிவித்து, இது ஆண்டுதோறும் செலுத்தக்கூடிய கட்டணம் என்றும், புதிய விசா மற்றும் விசாவைப் புதுப்பிப்பவர்களுக்கு இது பொருந்தும் என்றும் கூறினார்.

இந்த உத்தரவு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். அவர்கள் பெரும்பாலும் சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.
டொனால்டு ட்ரம்ப் உத்தரவைத் தொடர்ந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ள H-1B விசா வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் உடனே அமெரிக்காவிற்குத் திரும்பும்படி ஐ.டி நிறுவனங்கள் உத்தரவிட்டன.
அதோடு வெளிநாட்டு ஊழியர்கள் சொந்த ஊருக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி ஐ.டி நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன. இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் விமானங்களில் கட்டணம் கடுமையாக அதிகரித்தது.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வர டிக்கெட் எடுத்திருப்பவர்கள் கூட தங்களது டிக்கெட்டை ரத்து செய்து வந்தனர். சிலர் விமானத்தில் ஏறிய பிறகு டொனால்டு ட்ரம்ப் உத்தரவைக் கேட்டுப் பாதி வழியில் இறங்கி மீண்டும் அமெரிக்காவிற்குள் சென்ற சம்பவங்கள் கூட நடந்திருக்கின்றன.
ஊருக்குச் சென்றால் திரும்ப வர முடியாது என்ற அச்சத்தில் அவர்கள் விமானத்தில் ஏறிய பிறகு இறங்கிச் சென்றுள்ளனர். டொனால்டு ட்ரம்ப் உத்தரவு அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்கள் மத்தியில் ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் புதிய விளக்கம் கொடுத்துள்ளது. புதிய கட்டணம் நடைமுறைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் இது குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒரு லட்சம் டாலர் என்பது வருடாந்திர கட்டணம் கிடையாது என்றும், இது விண்ணப்பத்திற்கு ஒரு முறை செலுத்தும் கட்டணம் என்றும், புதிய விசாவிற்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், புதுப்பிக்கவும், ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இக்கட்டணம் பொருந்தாது''என்று அறிவித்துள்ளார்.
மேலும், எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தற்போது வெளிநாடு அல்லது சொந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய ஒரு லட்சம் டாலர் கட்டணம் வசூலிக்கப்படாது.
H-1B விசா வைத்திருப்பவர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு மீண்டும் அமெரிக்காவிற்கு வருவதற்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது என்றும் அவர் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்டண உத்தரவை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
H-1B விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள் தங்கி வேலை செய்து கொள்ளலாம். மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகு அதனைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.
H-1B விசாவால் அமெரிக்கர்கள் வேலை வாய்ப்பை இழப்பதாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், ''H-1B விசா வைத்திருக்கும் ஐ.டி ஊழியர்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் 32 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
H-1B விசாவால் அமெரிக்கர்கள் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். 5,189 H-1B விசா பெற்ற ஒரு நிறுவனம் 16000 அமெரிக்க ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி இருக்கிறது. அமெரிக்க ஊழியர்களை மீண்டும் பணிக்குக் கொண்டு வரும் நோக்கில் புதிய விசா விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.