Rain Alert: `புதிதாக உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி..!’ - பாலச்சந்திரன் சொ...
Harry Brook : 'அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 வீரர்' - ஹாரி ப்ரூக் எப்படி சாதித்தார்?
'தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் இவர்தான்!' என ரிக்கி பாண்டிங் உச்சி முகர்ந்து பாராட்டுகிறார். 'அவர் அத்தனை திறன்களும் வாய்க்கப் பெற்ற முழுமையான கிரிக்கெட்டர்!' என ஜோ ரூட் புகழாரம் சூட்டுகிறார். முன்பொரு முறை ஸ்டீவ் ஸ்மித்தும் இவரை சூப்பர் ஸ்டார் என விதந்தோதியிருக்கிறார். சமீபத்திய சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகமே இவரை கொஞ்சம் வியப்பாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. அத்தனை பாராட்டுகளுக்கும் முத்தாய்ப்பாய் இப்போது உலகின் நம்பர்.1 டெஸ்ட் வீரர் எனும் அரியணையிலும் ஏறி அமர்ந்திருக்கிறார், கிரிக்கெட் உலகை கட்டி ஆள தொடங்கியிருக்கும் அந்த இளவரசன் ஹாரி ப்ரூக்.
ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், விராட் கோலி என இவர்கள் அடங்கிய பட்டியலை Fab 4 என்பார்கள். இந்த Fab 4 வீரர்களில் கடந்த 3 ஆண்டுகளில் அதிகம் சாதித்தது ஜோ ரூட்தான். விரட்டி விரட்டி ரன் சேர்த்திருக்கிறார். 3 ஆண்டுகளில் மட்டும் 19 சதங்களை அடித்திருக்கிறார். அப்பேற்பட்ட ஜோ ரூட்டை பின்னுக்கு தள்ளிதான் ஐ.சி.சி வெளியிட்டிருக்கும் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் ஹாரி ப்ரூக். எனில், ப்ரூக் எவ்வளவு பெரிய அசாத்தியங்களை நிகழ்த்தியிருக்க வேண்டும். நிச்சயமாக அவர் செய்திருக்கும் ரெக்கார்டுகளை பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கும்.
இந்த ஆண்டில் மட்டும் இப்போது வரைக்கும் 17 இன்னிங்ஸ்களில் 1036 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 4 சதங்களும் 2 அரைசதங்களும் அடக்கம். ஆவரேஜ் 64.8 ஆக இருக்கிறது. 2022 அக்டோபரில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிறார். இப்போது வரைக்கும் 8 சதங்களை அடித்திருக்கிறார். இந்த 8 சதங்களில் 7 சதங்கள் அந்நிய மண்ணில் அடிக்கப்பட்டவை. சொந்த நாடான இங்கிலாந்தில் 30 ஐ சுற்றி ஆவரேஜ் வைத்திருக்கும் ஹாரி ப்ரூக் அந்நிய மண்களில் உச்சபட்சமாக 80 க்கும் மேல் ஆவரேஜ் வைத்திருக்கிறார்.
2022 இன் கடைசிக் கட்டத்தில் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும். அங்கிருந்துதான் ஹாரி ப்ரூக்கின் விஸ்வரூப எழுச்சி தொடங்குகிறது. அந்தத் தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே ப்ரூக் சதமடித்திருப்பார். ராவல்பிண்டி, முல்தான், கராச்சி என ஆடிய மைதானங்களிலெல்லாம் முத்திரை பதித்தார். குறிப்பாக, அணி சரிவில் இருக்கும்போது அழுத்தத்தை முதுகில் ஏற்றிக்கொண்டு பொறுப்பை உணர்ந்து ஆடுவதுதான் ப்ரூக்கின் தனிச்சிறப்பு. முல்தானில் இரண்டாம் இன்னிங்ஸில் 79-3 என்றிருந்த நிலையிலும் கராச்சியில் முதல் இன்னிங்ஸில் 58-3 என்றிருந்த நிலையிலும் இறங்கி சதமடித்திருப்பார். இந்த ஒரு தொடரில் மட்டும் 5 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் + ஒரு அரைசதத்துடன் 468 ரன்களை அடித்திருப்பார். ஆவரேஜ் 93. பாகிஸ்தான் அவரின் பேவ்ரைட் ஸ்பாட். சமீபத்தில் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு சென்றிருந்த போதும் முல்தானில் வைத்து முச்சதம் அடித்திருப்பார்.
ஆஷஸிலும் அழுத்தமான சூழலில் அணிக்கு கைக்கொடுக்கும் வகையில் ஆடியிருப்பார். கட்டாயம் வென்றாக வேண்டிய மூன்றாவது டெஸ்ட்டில் 250+ ரன்களை சேஸ் செய்கையில் 93-3 என இங்கிலாந்து திணறிக்கொண்டிருக்கும். அந்த சமயத்தில் நின்று ஆடி 75 ரன்களை அடித்து போட்டியை வென்று கொடுப்பார்.
பாகிஸ்தான் எப்படி ஒரு பேவ்ரைட் ஸ்பாட்டோ அதேபோல நியூசிலாந்தும் அவருக்கு ஒரு பேவ்ரைட் ஸ்பாட். இப்போது இங்கிலாந்து அணி நியூசிலாந்தில்தான் இருக்கிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்திருக்கிறது. இரண்டிலுமே சதமடித்திருக்கிறார். அதுவும் அணிக்கு தேவையான தக்க சமயத்தில். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கும் போது இறங்கி 171 ரன்களை அடித்து அணியை தலைநிமிர செய்திருந்தார்.
அதேமாதிரி, இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் இங்கிலாந்து அணி 26-3 என திணறிக் கொண்டிருக்கும். அப்போது இறங்கி 123 ரன்களை அடித்து அணியை காப்பாற்றியிருப்பார். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு சென்றிருந்த போதும் வெல்லிங்டனில் 186 ரன்களை அடித்து பெரிய இன்னிங்ஸை ஆடியிருப்பார்.
ஹாரி ப்ரூக் டெக்னிக்கலாக ரொம்பவே பலமானவர். அதனால்தான் ஒயிட் பால் கிரிக்கெட்டில் 360 டிகிரியில் ஆடக்கூடிய அதிரடி பேட்டராக இருக்கும் போதும், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களை ஆட முடிகிறது. இளம் வயதிலேயே ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக ஆட வேண்டி பிரத்யேக பயிற்சிகளை எடுத்திருக்கிறார். அதனால்தான் வழக்கமாக எல்லா இங்கிலாந்து பேட்டர்களும் ஆடுவதைப் போல ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப்பை மட்டுமே ஆடாமல், இலகுவாக கால்களை நன்றாக நகர்த்தி ஸ்பின்னை எதிர்கொள்கிறார். அவரால் லேட் கட்டையும் லாவகமாக ஆட முடிகிறது.
க்ரீஸிலிருந்து இறங்கி வந்து பௌலரின் தலைக்கு மேலும் அடித்து ஆட முடிகிறது. ஸ்பின்னர்களுக்கு எதிராக இவரிடம் இருக்கும் இலகுவாக கால்களை நகர்த்தும் தன்மை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இல்லை. அவர்களுக்கு எதிராக கொஞ்சம் இறுக்கமான தன்மையுடன்தான் ஆடுகிறார். ஷார்ட் பால் விக்னெஸூம் இருப்பதாக தெரிகிறது. ஆனாலும் சமாளித்து விடுகிறார்.
``பேட்டை சரியாக பிடிக்க தெரியாத அந்த சிறுவன்தான்...”
ஹாரி ப்ரூக் சிறுவனாக கிரிக்கெட் பயிற்சி பெற வந்தபோது, பேட்டின் கைப்பிடியில் இடதுகையை கீழேயும் வலதுகையை மேலேயும் பிடித்து ஆடியிருக்கிறார். ஒரு வலதுகை பேட்டரின் தலைகீழான நிலை இது. பயிற்சியாளர் ப்ரூக்குக்கு முதலில் இதைத்தான் சொல்லி திருத்தி விட்டிருக்கிறார். பேட்டை சரியாக பிடிக்க தெரியாத அந்த சிறுவன்தான் இன்றைக்கு உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன். வாழ்த்துகள் ப்ரூக்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...