Healthy Food: இதயம் தொடங்கி வயிறு வரைக்கும் நல்லதே செய்யும் பாசிப்பருப்பு!
பாசிப்பருப்பு சீக்கிரம் வேகும், ருசியில் நாக்கை அசத்தும் என்பது சமைத்தவர்களுக்கும், ருசித்தவர்களுக்கும் தெரியும். பாசிப்பருப்பில் இருக்கிற நன்மைகள் பற்றி டயட்டீஷியன் அம்பிகா சேகரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.
''பாசிப்பருப்பில் `ஏ', `பி'. `சி', `ஈ' ஆகிய வைட்டமின்கள் இருக்கின்றன. வைட்டமின் `ஏ' சருமத்துக்கும் கண்களுக்கும் நல்லது. வைட்டமின் `பி' ரத்தசோகை வராமல் தடுப்பதோடு நரம்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். பாசிப்பருப்பில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல தாது உப்புகளும் இருக்கின்றன. இதன் காரணமாக, இந்தப் பருப்பில் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆன்டி ஆக்ஸிடன்களும் அதிகம். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பாசிப்பருப்பு உதவும்.
கேன்சரை எதிர்க்கும்! மெனோபாஸ் பிரச்னைகளை கட்டுக்குள் வைக்கும்!
உடலின் கழிவுகளை வெளியேற்றக்கூடிய தன்மை கொண்டிருப்பதால், பாசிப்பருப்பு கேன்சரை எதிர்க்கவும் உதவுகிறது. துவரம்பருப்பைவிட பாசிப்பருப்பில் நார்ச்சத்து அதிகம் என்பதால், சீக்கிரம் ஜீரணமாகிவிடும். ஜீரணமாவதில் பிரச்னை இருப்பவர்கள் தாராளமாகப் பாசிப்பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பாசிப்பயற்றை தோலுடன் ஊறவைத்து முளைகட்டிச் சாப்பிட்டால், பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கிடைக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முளைகட்டியப் பாசிப்பயற்றைச் சாப்பிட்டு வந்தால், மெனோபாஸ் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும்.
அசிசிட்டியும் வராது; அல்சரும் வராது!
வயிற்றில் அல்சர் பிரச்னை இருப்பவர்களுக்கு துவரம்பருப்பு ஜீரணமாவதில் சிக்கல் இருக்கும். தவிர, துவரம்பருப்பு அசிடிட்டியையும் அதிகப்படுத்திவிடும். ஆனால், பாசிப்பருப்பில் சாம்பார் வைத்துச் சாப்பிட்டால், மேலே சொன்ன இரண்டு பிரச்னைகளும் வராது.
காய்ச்சல் நேரத்திலும் சாப்பிடலாம்!
ஏற்கெனவே, கிட்னியில் பிரச்னையிருப்பவர்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, இன்னும் பிரச்னை அதிகமாகும். அப்படிப்பட்டவர்கள்கூட மருத்துவரின் ஆலோசனைப்படி பாசிப்பருப்பு சாப்பிடலாம்.
காய்ச்சல் நேரத்தில் உடல் சோர்வாக இருக்கும். அந்த நேரத்தில் புழுங்கலரிசியும் பாசிப்பருப்பும் சேர்த்துக் கஞ்சியாக சாப்பிட்டால் சீக்கிரம் உடல் தேறும்.
வாயுத்தொல்லை வராது!
வாயுத்தொல்லை பிரச்னை இருப்பவர்களுக்குக் கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பயறுகளைப் போலவே துவரம்பருப்பும் கடலைப்பருப்பும்கூட ஒத்துக்கொள்ளாது. இவை, வாயுத்தொல்லையை இன்னும் அதிகப்படுத்திவிடும். ஆனால், அவர்களும் பாசிப்பருப்பு சாம்பாரை தாராளமாகச் சாப்பிடலாம். வாயுத்தொல்லை வராது.
உடல் எடையைக் குறைக்கும்!
பாசிப்பருப்பு குளிர்ச்சி என்பது கட்டுக்கதைதான். பாசிப்பருப்பு மட்டுமல்ல, உடலுக்குக் குளிர்ச்சி தருகிற எந்த உணவுப்பொருளையும் சமைத்துச் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியாகும், சளிப்பிடிக்கும் என்றெல்லாம் பயப்படவே தேவையில்லை.
பாசிப்பயற்றில் கொழுப்புச்சத்து குறைவாகவும் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையைக் குறைக்கும். உடல்பருமன் பிரச்னை இருப்பவர்களும் பாசிப்பருப்பை தைரியமாகச் சாப்பிடலாம்.
தோலுடன் சாப்பிடுங்கள்!
சைவ விரும்பிகள் தங்களுக்குத் தேவையான புரதச்சத்துக்கு தோலுடன் இருக்கிற பாசிப்பயறு, தோல் நீக்கிய பாசிப்பருப்பு இரண்டையும் உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கெட்ட கொழுப்பைக் குறைக்கும்!
பாசிப்பருப்பைத் தோலுடன் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கிற கெட்ட கொழுப்பு குறைந்து, இதயக்குழாய்களை நெகிழ்வாக வைத்திருக்கும்.
ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கும் பண்பும் பாசிப்பருப்புக்கு உண்டு.
இதிலிருக்கிற `காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்' சாப்பிட்டவுடன் உடனே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது. அதனால் நீரிழிவு பிரச்னை இருப்பவர்களும் பயப்படாமல் பாசிப்பருப்பு சாப்பிடலாம்."
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...