இனி தோட்டத்துப் பகுதிகளில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது: நயினார் நா...
IPL 2025 : 'கோடிகளில் ஏலம்... நம்பிய அணிகள்; சொதப்பிய டாப் 10 வீரர்கள்!' - யார் யார் தெரியுமா?
'சொதப்பிய வீரர்கள்!'
ப்ளே ஆஃப்’ஸ் ரேஸ் வேகமெடுத்திருக்கிறது. நடப்பு சீசனின் க்ளைமாக்ஸை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறோம். நிறைய இளம் வீரர்கள் அவர்களின் ஆட்டத்தின் வழி நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றனர்.

அதே சமயத்தில் நிறைய ஏமாற்றங்களும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக, ஏலத்தில் பெருத்த எதிர்பார்ப்புடன் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வீரர்கள் இந்த சீசனில் சொதப்பி தள்ளியிருக்கின்றனர். அப்படிப்பட்ட வீரர்களின் பட்டியல் இங்கே
ரிஷப் பன்ட்:
இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பன்ட்டை தவிர யாருக்கும் கொடுக்க முடியாது. ஐ.பி.எல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். லக்னோ அணியின் நிர்வாகம் அவருக்கு கேப்டன் பதவியையும் கொடுத்தது. கோயங்கா பன்ட் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், இப்போது வரைக்கும் பன்ட் இந்த சீசனில் சொல்லிக்கொள்ளும்படி ஒரு இன்னிங்ஸை கூட ஆடவில்லை.

11 போட்டிகளில் 128 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 99 மட்டுமே. நம்பர் 4 இல் தான் இறங்குவேன் என தலைகீழாக நின்று சொதப்பினார். பின்னர் ஓப்பனிங் இறங்கி சொதப்பினார். கன்னாபின்னாவென பேட்டை சுற்றி சகட்டுமேனிக்கு அவுட் ஆகிவிட்டு செல்கிறார். நடப்பு சீசனில் அவர் சொதப்பியிருக்கும் விதம் இந்திய ஒயிட் பால் அணியில் அவரின் இடத்தை மேலும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
வெங்கடேஷ் ஐயர்:
கொல்கத்தா அணி நடப்பு சாம்பியன். அந்த அணியை சாம்பியனாக்கிய ஸ்ரேயாஷ் ஐயருக்கு அவர் கேட்ட தொகையை வழங்காமல் ரிலீஸ் செய்தனர். அதேநேரத்தில்தான் ஏலத்துக்கு சென்று வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடிக்கு வாங்கி வந்தனர். 2021 சீசனிலிருந்து கொல்கத்தா அணியின் தவிர்க்க முடியாத வீரராக வெங்கடேஷ் ஐயர் இருக்கிறார்.

ஆனால், இந்த சீசனில் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு அணி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட போதிலும், 11 போட்டிகளில் 142 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். கொல்கத்தாவின் சறுக்கலுக்கு வெங்கடேஷ் பார்மில் இல்லாததும் மிக முக்கிய காரணம்.
ஜோப்ரா ஆர்ச்சர்:
எல்லா சீசனிலும் பெயரை பதிந்துவிட்டு கடைசி நிமிடத்தில் ஜகா வாங்கும் ஆர்ச்சர், இந்த முறை Attendance சரியாக வைத்திருக்கும் போதும் எதிரணிகளிடம் மரண அடி வாங்கியிருக்கிறார். அவரை 12.50 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் வாங்கியிருந்தது.

12 போட்டிகளில் 11 விக்கெட்டுகளைத்தான் எடுத்திருக்கிறார். இடையில் ஐ.பி.எல் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் வழங்கிய பௌலர் எனும் சாதனையையும் படைத்திருந்தார்.
இஷன் கிஷன்:
இஷன் கிஷனை 11.25 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் வாங்கியிருந்தார். தங்களது அதிரடி பட்டறையின் இன்னொரு கூர் ஆயுதமாக இஷன் இருப்பார் என எதிர்பார்த்தார்கள். அதற்கேற்ப சதத்தோடுதான் சீசனையும் தொடங்கினார். அவரது பார்மும் அங்கேயே தொடங்கிய இடத்திலேயே முடிந்துவிட்டது.

முதல் போட்டியிலேயே சதமடித்த போதும் 11 போட்டிகளில் சேர்த்து 196 ரன்களை மட்டும்தான் எடுத்திருக்கிறார். இடையில் மும்பைக்கு எதிரான போட்டியில் அவுட்டே ஆகாமல் பெரிய மனுசத்தனமாக நடையைக் கட்டி ஆரஞ்சு ஆர்மியின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டார்.
அஷ்வின் :
அஷ்வினை 9.75 கோடிக்கு சென்னை வாங்கியிருந்தது. ஓய்வுபெற்ற வீரருக்கு இது அதிகமான தொகையாக தெரிந்தாலும் சேப்பாக்கம் எமோஷனை வைத்து சென்னை ரசிகர்கள் கம்பு சுற்றினர். ஆனால், அஷ்வினின் பௌலிங்க் எந்தவிதத்திலும் தாக்கம் ஏற்படுத்தவில்லை.
உள்ளூரான சேப்பாக்கத்திலேயே அவரின் பந்துகளை சரமாரியாக அட்டாக் செய்தனர். 5 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். தொடர்ந்து பவர்ப்ளேயிலுமே வீசி ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் மனசாட்சியே இல்லாமல் வழங்கினர். மினி ஏலத்துக்கு முன்பாக அவரை ரிலீஸ் செய்து விடுங்கள் என்கிற மனநிலைக்கு ரசிகர்களே வந்துவிட்டனர்.
முகமது ஷமி:
ஷமியை 10 கோடி கொடுத்து சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. தொடர் காயங்களில் சிக்கியிருந்தாலும் அவரின் அனுபவத்தை நம்பிதான் சன்ரைசர்ஸ் அணி முதலீடு செய்தது. ஆனால், இப்போது வரைக்கும் 6 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார்.

9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார். அவரிடம் எதிர்பார்த்த மிரட்டலான பௌலிங் மிஸ்.
ஜேக் ப்ரேஸர் மெக்கர்க் :
கடந்த சீசனில் டெல்லி அணிக்காக இளம் சூறாவளியாக அசத்தியிருந்தார். அந்த நம்பிக்கையில்தான் மீண்டும் அவரை 9 கோடி கொடுத்து டெல்லி அணி வாங்கியது. ஆனால், இந்த சீசனில் அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. நடப்பு சீசனில் டெல்லி அணி 6 முறை ஓப்பனிங் கூட்டணியை மாற்றிவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணமே இந்த ஜேக்தான்.

6 போட்டிகளில் 55 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 105 மட்டுமே. ஜேக் நல்ல பார்மில் இருந்திருந்தால் டெல்லி அணியின் பல தலைவலிகள் தீர்ந்திருக்கும்.
இவர்களெல்லாம் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள். ஏலத்துக்கு முன்பாக பெரிய தொகை கொடுத்து சில வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்திருக்குமே. அந்தப் பட்டியலில் பெரிய தொகையை வாங்கிய வீரர்கள் சிலருமே மோசமாகத்தான் ஆடி வருகின்றனர்.
பதிரனா :
பதிரனா மாதிரியான 22 வயது இளம் வீரரை சென்னை மாதிரியான அணி கோடிகளை கொட்டி தக்கவைப்பதே பெரிய விஷயம். பதிரனாவுக்கு 13 கோடியை சென்னை அணி கொடுத்திருந்தது. ஆனால், கடந்த இரண்டு சீசன்களில் கொடுத்தத் தாக்கத்தை பதிரனா இந்த சீசனில் கொடுக்கவில்லை. மிடில் & டெத் ஓவர்களில்தான் பதிரனாவை சென்னை பயன்படுத்துகிறது.

அங்கேதான் பதிரனாவால் விக்கெட் வேண்டும் என நினைக்கிறது. பதிரனாவால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. 12 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். எக்கானமி 10 க்கும் மேல் இருக்கிறது. சென்னை அணியும் பதிரனாவை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
ரஷீத் கான்:
ரஷீத் கானை 18 கோடி கொடுத்து குஜராத் அணி தக்கவைத்தது. அவரைத்தான் தங்களின் முக்கிய ஸ்பின்னராக பார்த்தது. கில் இல்லாத சமயங்களில் கடந்த சீசனில் கேப்டன்சியையும் கொடுத்திருந்தனர். அவ்வளவு முக்கியமாக கருதப்படும் ரஷீத் கான், சமீபமாக அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுப்பதில்லை.

அவரின் மிஸ்டரியை அணிகள் அறிந்துவிட்டனர். வேகமாக ஸ்டம்பை நோக்கி வரும் கூக்ளிகளும் டைட்டான டெலிவரிகளும் மட்டுமே அவரின் ஆயுதம். அதை அணிகள் உடைத்து விட்டன. இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார்.
ஹெட்மயர்
பௌலர்களையெல்லாம் தாரை வார்த்து ஹெட்மயரின் அதிரடிக்காக அவரை 11 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணி தக்கவைத்தது. அந்த அணிக்காக பினிஷர் ரோலில் இறங்கி போட்டிகளை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும். ஆனால், ஹெட்மயர் அதை ஒரு போட்டியில் கூட செய்யவில்லை.

இந்த சீசனில் நான்கைந்து போட்டிகளை நெருங்கி வந்து கடைசிப் பந்தில் ராஜஸ்தான் தோற்றிருக்கிறது. அந்த சமயங்களிலெல்லாம் ஹெட்மயர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து ஆடியிருக்கவே இல்லை. அடுத்த சீசனில் ஹெட்மயர் தக்கவைக்கப்படுவது கடினமே எனும் சூழல் தான் நிலவுகிறது.!