KKR vs RCB : `ஆளே மாறிட்டீங்களே RCB' - ஈடன் கார்டனில் கோலி & கோ செய்த OG சம்பவம்
சீசனின் முதல் போட்டியையே பட்டாசாக தொடங்கியிருக்கிறது ஆர்சிபி. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சொதப்பினால் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். பேட்டிங்கில் சலனமே இல்லாமல் ஆதிக்கமாக ஆடி திணறடிக்கிறார். இப்படியொரு பெங்களூரு அணியா என வியக்க வைக்கும் வகையில் ஆடி சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறார்கள்.

சென்னை Vs மும்பை எப்படி ஒரு ரைவல்ரியோ, அப்படித்தான் கொல்கத்தா Vs பெங்களூருவும் ஒரு தீவிரமான ரைவல்ரிதான். ஐ.பி.எல் இன் முதல் சீசனில் தொடக்கப் போட்டியிலேயே பெங்களூருவுக்கு எதிராக மெக்கல்லம் வெளுத்தெடுத்திருப்பார். பெங்களூருவின் தலைகுனிவான சாதனையாக இருக்கும் அந்த 49 ஆல் அவுட்டும் கொல்கத்தாவுக்கு எதிராகத்தான் நடந்திருந்தது. ரெக்கார்டுகள் எப்போதுமே கொல்கத்தாவுக்கு சாதகமாகத்தான் இருந்திருக்கிறது. இப்படியொரு பின்னணியில்தான் இன்றைய போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது. போட்டிக்கு முன்பாக மழையை வைத்து பில்டப் கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆனால், எந்த தொந்தரவும் இல்லாமல் போட்டி தொடங்கியது.
ஆர்சிபியை முதல் முறையாக வழிநடத்தும் ரஜத் கேப்டனாக தனது முதல் டாஸையே வென்றார். ஆர்சிபிக்கு கேப்டனாக செயல்படுவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறிவிட்டு முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார்.
கொல்கத்தா அணியின் பேட்டிங்கை மூன்று பாகங்களாக பிரிக்கலாம். முதலில் பவர்ப்ளேயின் முதல் பாதி. இரண்டாவது 4-10 இந்த 7 ஓவர்கள். அடுத்ததாக கடைசி 10 ஓவர்கள்.
கொல்கத்தா சார்பில் டீகாக்கும் ரஹானேவும் ஓப்பனிங் இறங்கியிருந்தனர். முதல் 3 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 ரன்களை மட்டுமே எடுத்திதிந்தது. டீகாக்கின் விக்கெட்டையும் இழந்திருந்தனர். முதல் ஓவரில் 4 வது ஸ்டம்ப் லைனில் ஹேசல்வுட் வீசிய ஷார்ட் பாலில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆகியிருந்தார் டீகாக். அந்த ஓவரிலேயே சுயாஷ் சர்மா அவருக்கு ஒரு கேட்ச்சை விட்டிருந்தார். அந்த வாய்ப்பை டீகாக் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

யாஷ் தயாள் வீசிய இரண்டாவது ஓவரில் ஒரே ஒரு ரன்தான். ஹேசல்வுட் வீசிய மூன்றாவது ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே. போட்டி பெங்களூருவின் கைக்குள் வருகிறது என யோசிக்கும்போதே ஒரு பௌலிங் மாற்றம் நடந்தது. நான்காவது ஓவரை ராசிக் தர் வீசினார். அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள். இரண்டு சிக்சர்களுடன் ஒரு பவுண்டரி அடித்து கலக்கினார் ரஹானே. அடுத்த சில ஓவர்களுக்கு சுனில் நரைன் ரஹானேவுக்கு செகண்ட் ஃபிடில் ஆடிக்கொண்டிருந்தார். க்ரூணால் பாண்ட்யா, யாஷ் தயாள் என எந்த பௌலரையும் ரஹானே விட்டு வைக்கவில்லை. பவர்ப்ளே முடிகையில் கொல்கத்தா அணி 60 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே சூறையாட்டம் ஆடிக்கொண்டிருந்தார். நாலாபுறமும் இலகுவாக ஷாட்களை ஆடினார். 25 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார்.
ஒரு கட்டத்தில் நரைனும் இணைந்து அட்டாக் செய்தார். சுயாஷ் சர்மாவின் பந்துகளை பறக்கவிட்டார். போட்டி அப்படியே கொல்கத்தா பக்கமாக மாறியது. ஆனால், இதுவும் நீடிக்கவில்லை. ராசிக் தர் வீசிய 10 வது ஓவரின் கடைசிப் பந்தில் 44 ரன்களில் ஒரு ஷார்ட் பாலை அடிக்க முயன்று நரைன் அவுட். இதுதான் போட்டியின் திருப்புமுனை. 11 வது ஓவரில் க்ரூணால் பாண்ட்யா தனது இரண்டாவது ஸ்பெல்லை தொடங்கி ஒரே மூச்சில் 3 ஓவர்களை வீசினார். 3 ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட். ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் என மூன்று முக்கிய பேட்டர்களும் காலி. வெங்கடேஷ் ஐயரையும் ரிங்கு சிங்கையும் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து Against the Spin ஆக ஆட வைத்து போல்டை பறிகொடுக்க வைத்தார். ரஸலை சுயாஷ் சர்மா ஒரு கூக்ளியில் போல்ட் ஆக்கினார். அவ்வளவுதான் போட்டி பெங்களூருவின் கைக்கு வந்தது. 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா 174 ரன்களை மட்டுமே எடுத்தது.

பெங்களூருவுக்கு 175 ரன்கள் டார்கெட். கூட்டாக விக்கெட்டை விடாமல் நின்றாலே வென்றுவிடும் அளவிலான டார்கெட். ஆனால், பில் சால்ட்டும் கோலியும் நிற்கவில்லை, கதகளி ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 8.3 ஓவர்களில் 95 ரன்களை எடுத்திருந்தனர். வைபவ் அரோரா முதல் ஓவரில் 12 ரன்களையும் மூன்றாவது ஓவரில் 20 ரன்களையும் கொடுத்தார்.

நல்ல ஃபுல் லெந்த்தில் வந்த பந்துகளை பில் சால்ட் வானத்தில் பறக்கவிட்டிருந்தார். இதனால் நான்காவது ஓவரிலேயே வருணை அழைத்து வந்தார் ரஹானே. அப்போதும் பலனில்லை. வருண் டைட்டாக வீசினாலும் அதையும் மடக்கி அந்த ஒரே ஓவரில் 3 பவுண்டரிக்களை அடித்தார் சால்ட். கோலியும் பொறுமையாக இல்லை.
ஸ்பென்சர் ஜான்சன் ஓவர் தி விக்கெட்டில் வீசிய ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்சர்களை அவரின் தலைக்கு மேலேயே அடித்து அதகளப்படுத்தினார். கோலி வருணுக்கு எதிராக திணறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருணின் ஓவரிலும் கோலி பவுண்டரிக்களை அடித்தார். அரைசதத்தை கடந்து வருணின் ஓவரிலேயே சால்ட் அவுட் ஆகியிருந்தாலும் செய்ய வேண்டிய சேதாரங்களையெல்லாம் செய்து முடித்திருந்தார். தொடர்ந்து விராட் கோலியும் நின்று சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்தார். இடையில் படிக்கல் 10 ரன்களில் சுனில் நரைனின் பந்தில் அவுட் ஆகியிருந்தாலும் அதற்கடுத்து வந்த ரஜத் பட்டிதர் 200+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். ஹர்ஷித் ராணாவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிக்கள் அடித்தார். 16 பந்துகளில் 34 ரன்களை அடித்து வெற்றியை நெருங்கி வந்து வைபவ் அரோராவின் பந்தில் அவுட் ஆகினார். ஆனாலும் எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்பென்சர் ஜான்சனில் பந்தில் லிவிங்ஸ்டன் ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்து போட்டியை முடித்து வைத்தார். கோலி 36 பந்துகளில் 59 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

இந்த ஆர்சிபி அணி நிஜமாகவே புதிய புத்துணர்ச்சியுடன் இருப்பதாக தெரிகிறது. ஆனால், இந்த வெற்றி தொடர வேண்டும். இதே மாதிரி சீரான செயல்பாட்டை தொடர்ந்து கொடுக்க வேண்டும். அதுதான் முக்கியம்.