கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா? முதுகெலும்பு பிரச்னை வராமல் தடுப்பது எப்படி?
அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்னாப்பிரிக்க தூதருக்கு உற்சாக வரவேற்பு! என்ன காரணம்?
கேப் டவுன்: அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்னாப்பிரிக்க தூதருக்கு சொந்த நாட்டு மக்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் அரசு நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு தென்னாப்பிரிக்க தூதர் இப்ராஹிம் ரசூலுக்கு உத்தரவிட்டதையடுத்து, இப்ராஹிம் ரசூல்(62) இன்று(மார்ச் 23) தமது தாய் நாட்டுக்குத் திரும்பினார்.
அமெரிக்காவுக்கான தென்னாப்பிரிக்க இப்ராஹிம் ரசூல்(62), அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்றதொரு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பல்துறை நிபுணர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் பேசியபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இதேபாணியிலான நடவடிக்கைகள் தொடர்ந்தால், அமெரிக்காவில் வெள்ளை இன மக்கள் சிறுபான்மையினமாக மாறக்கூடுமென்றும் கூறினார்.
ரசூல் பேசிய கருத்துகள் அமெரிக்கா மீதும் டிரம்ப் மீதும் வெறுப்புணர்வை பிரதிபலிப்பதாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவரை கடந்த 14-ஆம் தேதி தூதர் பொறுப்பிலிருந்து நீக்கி அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ அறிவித்தார்.
இதனையடுத்து தென்னாப்பிரிக்க தலைநகர் கேப் டவுன் விமான நிலையத்தில் இன்று வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டிருப்பது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.
இந்த நிலையில், “தாய் நாட்டுக்குத் திரும்புவதில் எமக்கு எவ்வித வருத்தமும் இல்லை” என்று விமான நிலையத்தில் தெரிவித்த அவர், அமெரிக்காவுடனான தங்கள் நாட்டு உறவை சுமூகப் பாதையில் முன்னெடுத்துச் செல்வது முக்கியமென்றும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
“அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்று நாங்கள் சொல்லவில்லை, அமெரிக்கா மீது வெறுப்பும் உங்களுக்கு வரக் கூடாது” என்று விமான நிலையத்தில் திரண்டிருந்த குட்டத்தை பார்த்து அவர் கூறினார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றபின் தென்னாப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை.
முன்னதாக, கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து நிதியுதவியும் நிறுத்தப்படுவதாக அதிரடி உத்தரவை பிறப்பித்தார் டிரம்ப். தென்னாப்பிரிக்க அரசு பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் படை மற்றும் ஈரானுடன் நெருக்கமாக பயணிப்பதாகவும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் சுட்டிக்காட்டி, அமெரிக்க அரசு இந்த நடவடடிக்கையை எடுத்தது. அதிலும் குறிப்பாக, தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இன மக்களுக்கு எதிரான உள்நாட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கும் அமெரிக்கா கடும் எதிர்வினையாற்றியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினராக வாழும் வெள்ளை இனத்தவர்களிடமிருந்து நிலத்தை அரசு கையகப்படுத்துவது குறித்த நடவடிக்கைக்கு வெள்ளை இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னொருபுறம், அரசின் இந்த நடவடிக்கையை உள்நட்டில் பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர்.
இப்ராஹிம் ரசூல் கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கான தென்னாப்பிரிக்க தூதராக நியமிக்கப்பட்டார். முன்னதாக, பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவிவகித்தபோதும் இவர் தெனாப்பிரிக்க தூதராக பொறுப்பு வகித்தவர். இந்த நிலையில், ரசூலை வெளியேற்றிருப்பதன்மூலம், தென்னாப்பிரிக்காவை டிரம்ப் நிர்வாகம் தரக்குறைவாக நடத்தியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.