இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்
கனடா தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும்: உளவுத்துறை
கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும் என்று அந்நாட்டின் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்த அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி, வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில், தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறையின் துணை இயக்குநர் வனேசா லாயிட் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
“தேர்தல் நடைமுறைகளில் தலையிட அரசுக்கு எதிரானவர்கள் செய்யறிவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்திய அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனட ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
குறிப்பாக கனடாவின் தேர்தலில் செய்யறிவு கருவிகளை பயன்படுத்த சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கனடாவில் உள்ள சீன இன, கலாச்சார மற்றும் மத சமூகங்களைக் குறிவைத்து அவர்களுக்கு உடன்படுபவர்களுக்கு ஆதரவான கதைகளை சமூக ஊடகங்கள் மூலம் சீனா பரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், ரஷியாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலிலும் இந்தியா, சீனா தலையிட முயற்சித்தது. ஆனால், எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!
கடந்த கனடா தேர்தலில் தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஏற்கெனவே இந்தியாவும் சீனாவும் மறுத்துள்ளது. புதிய குற்றச்சாட்டு தொடர்பாக இரு நாடுகளும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2023 இல் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பிறகு இருநாட்டின் உறவில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.