Kohli: `இந்திய கிரிக்கெட் வீரராக என்ன செய்ய வேண்டும்?’ - சிறுவனின் கேள்வியும் வைரலாகும் கோலி பதிலும்
டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மோசமான ஃபார்மில் இருக்கும் இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் நாளை களமிறங்குகிறார். கோலியுடன் டெஸ்ட் போட்டிகளில் ஃபார்மில் இல்லாத இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 2015-க்குப் பிறகு முதல்முறையாக ரஞ்சி டிராபியில் கடந்த வாரம் களமிறங்கினார்.
ஜம்மு காஷ்மீருக்கு எதிரான அந்த ஆட்டத்தில் மொத்தமாக இரண்டு இன்னிங்ஸ்களையுமே சேர்த்து 54 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார் ரோஹித். இதனால், டெல்லியில் நாளை நடைபெறும் டெல்லி vs ரயில்வேஸ் போட்டியில் விராட் கோலி களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. இந்த நிலையில், நாளைய போட்டியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலியிடம், சிறுவன் கேள்வி கேட்பதும் அதற்கு அவர் பதிலளிப்பதுமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி அணிக்காக 16 மற்றும் 19 வயதுக்குப்பட்டோர்களுக்கான போட்டிகளில் கோலியுடன் இணைந்து விளையாடிய முன்னாள் வீரர் ஷாவேஜ் கானின் மகனான அந்த சிறுவன் கபீர் கான், ``இந்திய கிரிக்கெட் வீரராக உருவாவதற்கு என்ன செய்ய வேண்டும்" என்று விராட் கோலியிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த விராட் கோலி, ``கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும். அது, பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று உங்களின் தந்தை உங்களுக்கு நினைவூட்டுவதாக இருக்கக் கூடாது. நீங்களாக அவரிடம் சென்று, பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்று கூறவேண்டும்.
பயிற்சியில் ஈடுபட ஆர்வமாக இருக்க வேண்டும். யாராவது ஒரு மணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டால், நீங்கள் இரண்டு மணிநேரம் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவர்கள் அரைசதம் அடித்தால், உங்களின் இலக்கு சதமாக இருக்க வேண்டும். சதமடித்தால் இரட்டை சதம் இலக்காக இருக்க வேண்டும். தொடர்ந்து கடினமாக உழைத்து, விளையாட்டை ரசித்து விளையாடுவதுதான் முக்கியம்." என்று அறிவுரை வழங்கினார்.