Love: விழுப்புரம் பையன் உக்ரைன் பொண்ணு... சேர்த்து வைத்த பெரியாரிய கொள்கை; காதல் ததும்பும் இளம் ஜோடி
காதலுக்கு இந்த மொத்த உலகமுமே ஒரு சிற்றூர்தான். சாதி, மதம் பார்க்காது, இனம், மொழி கேட்காது. யாராயினும் அன்பென்றால் வரவேற்கும், சமத்துவத்தை வளர்த்தெடுக்கும். எல்லாவற்றுக்கும் மேல், ஒருவருக்கொருவர் மனம் ஒத்துப்போய்விட்டால், அதில் உறுதியாய் இருந்துவிட்டால், தூரமென்ன பேதமென்ன என்று பார்க்காமல் அக்காதலே அவர்களை நிச்சயம் சேர்த்து வைத்துவிடும்.
அத்தகைய காதலின்பால், விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரைச் சேர்ந்த ஜெயக்குமார் - சுதா தம்பதியின் மகன் உதயகுமார் (29) என்ற இளைஞர், தன் கடல் கடந்த உக்ரைன் காதலி அனஸ்டாலியாவைக் (anastalia) கரம்பிடித்திருக்கிறார். விழுப்புரம் மணமகன் - உக்ரைன் மணப்பெண்ணின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி, அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுவரும் நிலையில் அவர்களைத் தொடர்புகொண்டோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/9rz61phl/WhatsApp_Image_2025_02_14_at_2_03_22_PM.jpeg)
அப்போது, தங்களின் காதல் அத்தியாயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிய உதயகுமார், ``நான் காலேஜ் படிச்சது எல்லாமே கோயம்புத்தூர்லதான். இன்ஜினியரிங் முடித்த பிறகு, என்னோட படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக ஸ்லோவேக்கியா (Slovakia) நாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தேன். அதன்படி, அங்கு சென்று 2016-ல் MS முடித்ததும் அங்குள்ள பிரபல நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த சமயத்தில், ஆங்கில மொழி பேச்சுத் திறனை அதிகரிக்க, ஆன்லைன் செயலி ஒன்றில் சேர்ந்தேன். அப்போதான் முதல் முறையாக அனஸ்டாலியாவுடன் அறிமுகம் ஏற்பட்டது.
மூன்று மாத காலம் இணையம் வழியே நட்பாகப் பழகினோம். அடுத்து, அவரைச் சந்திக்க உக்ரைனுக்குச் செல்ல முடிவெடுத்தேன். எங்களின் முதல் சந்திப்பே மிகவும் ரணகளமாக இருந்தது. நான்தான் அட்ரஸை மாத்தி சொல்லிட்டேன். அந்த அட்ரஸில், அனஸ்டாலியா எனக்காகக் காத்திருக்க, என்னுடைய செல்போனும் வேலை செய்யாமல் போய்விட்டது. பின்னர் அருகிலிருந்த கடையில் போனுக்கு சார்ஜ் போட்டு, அவருக்கு கால் செய்தேன். வெகு நேரமா அவர் என்னைத் தேட, நான் அவரைத் தேட என நேரம் சென்று கொண்டே இருந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/3fa8pfvq/WhatsApp_Image_2025_02_14_at_2_03_24_PM__2_.jpeg)
ஒரு கட்டத்தில், என்னைக் காணவில்லை என மைக் மூலம் அவர் அன்னௌன்ஸ் பண்ணி தேடினார். பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் இருவரும் சந்திச்சோம்." என்று முதல் சந்திப்பின் சுவாரஸ்யத்தை விவரிக்க, உதயகுமார் மீது காதல்வயப்பட்டதை எடுத்துரைக்க ஆரம்பித்த அனஸ்டாலியா, ``அவரைக் காணவில்லை என்றதும் ரொம்ப பயந்துட்டேன். அவர மிஸ் பண்ணிட கூடாதுன்னு நினைச்சேன். அவரை முதல்முறையா பார்க்கும்போதே எனக்குள்ள பட்டாம்பூச்சிகள் பறந்துச்சு.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/o85uf6fm/WhatsApp_Image_2025_02_14_at_2_03_19_PM.jpeg)
அப்பவே புரிஞ்சிடுச்சு அவர்தான் என்னோட soulmate-னு. நான் பெருசா இன்டர்நெட் காதலெல்லாம் நம்பமாட்டேன். ஆனா, அதை அவர் மாத்திட்டாரு. இதுதான் என்னோட ஃபர்ஸ்ட் லவ். முதல் சந்திப்பிலேயே யாராலும் பிரிக்கமுடியாத, அழிக்க முடியாத puzzle ஆகிட்டோம். அவர் அதிகம் பேச மாட்டாரு, ரொம்ப அமைதியான கேரக்டர். எனக்கு என்ன வேணுமோ, அத பாத்து பாத்து செய்வாரு.
நான் பெருசா எங்கேயும் போக மாட்டேன். ஆனா, அவரோட நிறைய இடத்துக்குப் போனேன். இதுவரைக்கும் எங்க லவ் ரிலேஷன்ஷிப்ல ஒருத்தங்க இன்னொருத்தர குறை சொன்னது கிடையாது. இப்போதான் முதல்முறையா இந்தியா வரேன். அவங்க அப்பா, அம்மா, சொந்தக்காரங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. விழுப்புரம் மிகவும் அழகான ஊர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/7m0cifpb/WhatsApp_Image_2025_02_14_at_2_03_19_PM__1_.jpeg)
இந்தியாவுல எல்லா விஷயமும் தனித்துவமா, ஸ்பெஷலா இருக்கு. தமிழ் மொழி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. தினமும் நோட்ஸ் எடுத்து தமிழ் கத்துக்றேன்." என அனஸ்டாலியா கூற, உக்ரைனில் அவர் வீட்டுக்கு சென்றதைப் பற்றி விளக்க ஆரம்பித்தார் உதயகுமார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/3q9k1sdw/WhatsApp_Image_2025_02_14_at_2_03_21_PM.jpeg)
"ஒருமுறை அங்க அவங்க வீட்டுக்குப் போக வேண்டிய சூழ்நிலை வந்துச்சு. போனப்போ, அவங்க அப்பா அம்மா என்ன வேற நாட்டு பையனாவே பாக்கல. தான் வீட்ல ஒருத்தவங்களாதான் பார்த்தாங்க. அப்புறம், இங்க ஒரு பொண்ண நான் லவ் பண்றேன்னு என் வீட்ல சொன்னதும் யாரும் மொதல்ல ஒத்துக்கல. என்னோட பெரியப்பாதான், 'என்ன ஆனாலும் பரவால்ல. நீ கல்யாணம் பண்ணிக்கோ'-னு எங்க கல்யாணத்துக்கு ஹெல்ப் பண்ணாரு. எங்க பெரியப்பா பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவர்.
பிறகு, எங்க வீட்ல எல்லாரோட சம்மதத்தோட, விழுப்புரம் மாவட்டம் கப்பியாம்புலியூர் பெருமாள் கோவிலில், தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டோம்." என்று உதயகுமார் கூற, காதல் வாழ்க்கை பற்றி மேலும் பேசத் தொடங்கினார் அனஸ்டாலியா. "நிறைய ups and downs. ஆனாலும் அது எல்லாத்துலயும் ஒண்ணா பயணிச்சிருக்கோம். உதயாவோடு பேரன்ட்ஸ்க்கு இங்கிலீஷ் தெரியாது. அதனால, அவங்க கூட தமிழ்ல பேசணம்னு எனக்கு ஆசை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/fly7ppxb/WhatsApp_Image_2025_02_14_at_2_03_24_PM.jpeg)
இப்போதான் சமைக்க கத்துக்றேன். பிரியாணி நல்லா சமைப்பேன். ஆனா, எல்லா இந்தியன் உணவுகளையும் உதயாவோட பேரன்ட்ஸ், ரிலேடிவ்ஸ், ஃபிரண்ட்ஸ்க்கு சமைச்சு தரணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஒரு புது வாழ்க்கைய தொடங்குறக்கு முன்னாடி எல்லார்கிட்டயும் ப்ளெஸ்ஸிங்ஸ் வாங்குறது ரொம்ப அழகா இருந்துச்சு.
Europe-ல ஸ்பூன்லதான் சாப்பிடுவோம். ஆனா, இங்க தமிழ்நாட்டுல சாப்பாட்ட கையில் எடுத்து சாப்பிடும்போது, சாப்பாட்டுக்கு எவ்ளோ மரியாதை கொடுக்கணும்னு தெரிஞ்சுது. இலைல சாப்பிட்றது, இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கையா இருக்கு.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/9jvkiqjv/WhatsApp_Image_2025_02_14_at_2_03_22_PM__1_.jpeg)
உதயாவோட அம்மா அப்பா என்ன அவங்களோட குழந்தையாதான் பாத்துக்குறாங்க. வேற நாட்டுல இருக்கிற மாதிரியே எனக்கு தோனல. என்னோட தாய்நாடு உக்ரைன்ல இருக்ற மாதிரிதான் எனக்கு தோணுது. `உதயா இஸ் மேஜிக் இன் மை லைஃப்'. " எனக் காதல் வெள்ளம் ததும்பக் கூறினார்.
காதலினால் இணைந்த இந்த ஜோடியின் கரங்கள் மேலும் இருகப்பற்றிக்கொண்டு மகிழ்வோடு வாழ நாளும் இனி காதலர் தினமாகட்டும்!