Mars: 'செவ்வாய்க் கிரகத்துக்கு 38வது புத்தாண்டு வாழ்த்துகள்!' - எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா?
2025 ஆண்டு வருவதற்கு நமது பூமிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நமது அண்டை கிரகமான செவ்வாய் அதன் புத்தாண்டை நவம்பர் 12ஆம் தேதியே கொண்டாடியுள்ளது.
அதாவது, செவ்வாய் கிரகம் சூரியனைச் சுற்றிய அதன் புதிய சுற்றுவட்ட பாதையை மீண்டும் தொடங்கியுள்ளது. செவ்வாய் நாட்காட்டியின் படி, அதன் 38வது ஆண்டை துவங்கி உள்ளது.
2021ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட பெஸ்வெரன்ஸ் ரோவர் செயற்கைக்கோள் ஆனது, அதன் திட்டமிடப்பட்ட ஆயுட்காலத்தைத் தாண்டியும், செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்த புத்தாண்டில், புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து அதன் பணியைத் தொடர்கிறது.
1955ஆம் ஆண்டு நிறுவப்பட்ட செவ்வாய் நாட்காட்டி, 1956ஆம் ஆண்டு அக்கிரகத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வான தூசிப் புயலிலிருந்து அதன் வருடத்தைக் கணக்கிடுகிறது. இதன் மூலம் கிரகத்தின் வருடாந்திர சுழற்சி மற்றும் அதன் பருவகால மாற்றங்களையும் கவனிக்க முடிகிறது.
செவ்வாய்க் கிரகத்தின் ஒரு நாளை “சோல்” என்று அழைக்கிறார்கள். இது 24 மணி நேரம் 39 நிமிடங்கள் நீடிக்கிறது. செவ்வாய்க் கிரகத்தின் ஒரு வருடம் 687 பூமி நாட்கள் அல்லது 668 சோல்களைக் கொண்டது. இது நமது பூமியின் ஆண்டு நீளத்தை விட இரட்டிப்பானது.
கடந்த முறை செவ்வாய் புத்தாண்டு டிசம்பர் 26, 2022 அன்று கொண்டாடப்பட்டது. இது சூரியனைச் சுற்றிய செவ்வாய்க் கிரகத்தின் நீள்வட்ட பாதையின் தூர அளவைப் பொறுத்து அமைகிறது. இந்த நீள் வட்டப்பாதையின் தூரம் காரணமாக நீண்ட காலநிலை மாற்றங்கள், சமமற்ற பருவநிலைகள் ஏற்படுகின்றன.
பூமியைப் போலவே செவ்வாயிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் நான்கு பருவநிலைகள் உள்ளன. கோளின் அச்சு சாய்வானது பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த புத்தாண்டு செவ்வாய்க் கிரக வானிலையில் வடக்கில் வசந்த காலத்தின் தொடக்கத்தையும், தெற்கில் இலையுதிர் காலத்தையும் கொண்டுள்ளது.
ஆண்டின் பாதியில் சூரியனுடனான நெருங்கிய அணுகுமுறைகளால், கிரகத்தையே மூழ்கடிக்கும் கடுமையான தூசிப் புயல்கள் ஏற்படுகின்றன. இது மட்டுமல்லாது, தீவிர வெப்பநிலை மாற்றங்களும் ஏற்படுகின்றன. கோடை நாட்களின் நண்பகலில் 0° எட்டும். இரவில் -60° ஆகக் குறையும். குளிர்கால இரவுகள் -110° வரை இருக்கும்.
இந்த செவ்வாய்க் கிரகத்தின் புத்தாண்டு அதன் புத்தாண்டாக மட்டுமல்லாமல் அந்த கிரகத்தின் காலநிலை மற்றும் எதிர்கால ஆய்வுகளுக்கான சாத்தியக் கூறுகளை எடுத்துக்காட்டுவதில் விஞ்ஞான ஆர்வத்தைத் தூண்டுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...