செய்திகள் :

`NEP-யை விட சிறப்பாகச் செயல்படும் ஒரு மாநில கல்வியை ஏன் சீர்குலைக்க வேண்டும்?'- அன்பில் மகேஸ் கேள்வி

post image

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசுக்கும், தமிழ்நாடு தி.மு.க அரசுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. நேற்றுவரை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ரூ. 2,000 கோடி நிதி கிடையாது எனக் கூறிவந்த மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், தற்போது தி.மு.க எம்.பி-க்கள் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தன்னை நேரில் சந்தித்து பி.எம் ஸ்ரீ திட்டத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும், முதல்வரும் நடைமுறைப்படுத்தக் கூறியதாகவும், ஆனால் இப்போது மொழிப் பிரச்னையைக் கிளப்பி ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்றும் கூறி வருகிறார்.

தேசிய கல்விக் கொள்கை (NEP)- 2020
தேசிய கல்விக் கொள்கை (NEP)- 2020

குறிப்பாக, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தி.மு.க-வினரை நாகரிகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் கூறியது பெரும் பிரளயமாக வெடித்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் முதல் தி.மு.க கூட்டணி தலைவர்கள், எம்.பி-க்கள் பலரும் தர்மேந்திர பிரதானை வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையை விட சிறப்பாகச் செயல்படும் தமிழ்நாட்டின் மாநில கல்வியை ஏன் சீர்குலைகிறீர்கள் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அன்பில் மகேஸ், ``தேசிய கல்விக் கொள்கை மீதான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டின் மீதான தாக்குதல் மற்றும் மொழிப் பிரச்னை என்பது வெறுமனே தவறாக வழிநடத்துவது மட்டுமல்ல. அது, மிகப்பெரிய விஷயத்தைப் புறக்கணிக்கிறது. இது தமிழ் மொழியைப் பற்றியது மட்டுமல்லாமல், பல தசாப்தங்களாக சோதனைக்குப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட ஒரு கல்வி முறையைப் பற்றியது. நமது மாநில கல்வி முறையானது உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தொடர்ந்து சிறந்த முடிவுகளை அளித்து வருகிறது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

மனப்பாடம் செய்வதை விட சிந்தனை அடிப்படையிலான கற்றலில் கவனம் செலுத்துவது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தொழில்துறையில் பல தலைமுறை மாணவர்கள் சிறந்து விளங்க வைத்திருக்கிறது. 58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவர்கள் மாநில வழி பள்ளிகளில் படிக்கின்றனர். அதேசமயம், 1,635 சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். தமிழக மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது இதன்மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. சிலர் கூறுவது போல, ஏதேனும் ஒரு மூன்றாவது மொழியைக் கற்க வேண்டிய உண்மையான தேவை இருந்திருந்தால், எதற்காக நம் மக்கள் மாநில வழி கல்வியைத் தேர்வு செய்கின்றனர். மக்களின் விருப்பங்களைப் புரிந்துகொண்டு மதிப்போம்.

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையின் ஒரு பகுதியாக ஆங்கிலம் இருக்கிறது. இது உலகளாவிய வாய்ப்புகளை உறுதி செய்கிறது. மூன்றாம் மொழி திணிப்பு போலல்லாமல், உலக அளவில் சிறந்து விளங்க ஆங்கிலமும், கலாசார நெறிமுறைகளில் சிறக்க தமிழும் இருக்கிறது. நமது பெருமைக்கு தமிழும், உலக வழிகாட்டியாக ஆங்கிலமும், நமது முன்னேற்றத்திற்கும் சமத்துவத்திற்குமான வழி. இத்தகைய வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும் போது தமிழ்நாட்டுக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான்

மேலும், இந்தப் பதிவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கேள்விகளை அடுக்கிய அன்பில் மகேஸ், ``தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும்போது, ஏன் மாற்றத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும்? தேசிய கல்விக் கொள்கையை விடச் சிறப்பாகச் செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்? இது வெறும் மொழியைப் பற்றியது மட்டுமல்ல, கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது. மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் தமிழ்நாடு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. தயவுசெய்து சிறப்பாக விளங்கும் கல்வி முறையைச் சீர்குலைக்காதீர்கள்." என்று தெரிவித்திருக்கிறார்.

மல்ஹர் சர்டிஃபிகேட்: இந்துக்கள் மட்டும் நடத்தும் மட்டன் கடை - திறந்துவைத்த மகாராஷ்டிரா அமைச்சர்

மட்டன் கடைகளில் விலங்குகளை வெட்டும்போது முஸ்லிம்கள் ஹலால் முறையைப் பின்பற்றுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு ஹலால் முறையில் வெட்டப்படும் விலங்குகளின் இறைச்சிக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ... மேலும் பார்க்க

`அறிவுள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?' - மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் அமைச்சர் பி.டி.ஆர் காட்டம்

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தோல்வி அடைந்த மும்மொ... மேலும் பார்க்க

TVK : 'உங்கள் மீதான விமர்சனங்களை மறைக்க பெரியாரை இழுப்பதா?' - மத்திய அரசுக்கு எதிராக விஜய் காட்டம்!

நாடாளுமன்றத்தில் பெரியார் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.tvk vijayஅவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பெரியார், தமிழைக் காட்டும... மேலும் பார்க்க