பாகிஸ்தான் ரயில் சிறைபிடிப்பு: 33 பயங்கரவாதிகள் கொலை... மீட்புப் பணிகள் நிறைவு!
NEP Row: `தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!' - வைகோ ஆவேசம்
மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக் கல்விக் கொள்கை', 'தொகுதி மறுவரையறை' திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
குறிப்பாக, 'தேசியக் கல்விக் கொள்கை'யை ஏற்காததால் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ. 2,000 கோடி நிதியை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் வழங்காமல் மறுத்து வருவது, பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது. மேலும் 'தேசியக் கல்விக் கொள்கை'யின் மூலம் மும்மொழிக் கொள்கையை, இந்தியைத் திணிக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் வெடித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது என்று தமிழ்நாடெங்கும் முழக்கங்கள் எழுந்து வருகின்றன.

மத்திய அரசையும், மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் நிலைப்பாட்டையும் எதிர்த்து கடந்த சில வாரங்களாகவே ஆளுங்கட்சியான 'தி.மு.க' பலவேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டங்களையும் நடத்தி கலந்தாலோசனை செய்திருந்தது.
நேற்றைய (மார்ச் 10) மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி விவகாரத்தில் தி.மு.க எம்.பி கேள்வி எழுப்பியதற்கு, `ஜனநாயகமற்றவர்கள், நாகரிகமற்றவர்கள்' என மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் காட்டமாகப் பேசியது, பெரும் சர்ச்சையாகவும் விவாதப்பொருளாகவும் மாறியிருக்கிறது.

இந்நிலையில்... இரண்டாவது அமர்வின் இரண்டாவது நாளான இன்று எம்.பி கனிமொழி தலைமையிலான 'தி.மு.க' எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 'மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜனநாயகமற்றவர்கள், நாகரிகமற்றவர்கள் எனப் பேசியது கடும் கண்டனத்திற்குரியது. அவர் தமிழ்நாட்டிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்' என்று கோஷமிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
`நாகரீகமற்றவர்களா?' தமிழச்சி vs தர்மேந்திர பிரதான் vs கனிமொழி - மக்களவையில் நடந்த மோதல்| முழு விவரம்
இப்போராட்டம் குறித்துப் பேசியிருக்கும் எம்.பி கனிமொழி, "ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினால் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள சபாநாயகரை வலியுறுத்துவோம்" என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்துப் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழ் மண்ணின் பெரும் வரலாறு. 'தமிழ், ஆங்கிலம்' என இருமொழிக் கொள்கையில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம். மொழி உரிமைக்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட தமிழ்நாட்டை தர்மேந்திர பிரதான் நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களைக் காயப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழ்நாட்டிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். தர்மேந்திர பிரதானை ஒன்றிய அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும்." என்று ஆவேசத்துடன் பேசியிருக்கிறார் வைகோ.