மின்சாரம் தாக்கி இறக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதியுதவி; புதுச்சேரி அரச...
Noor Ahmed : 'அன்று ஏல அரங்கில் சிஎஸ்கே செய்த சம்பவம்' - அணியின் நம்பிக்கையை எப்படி காப்பாற்றினார்?
சில மாதங்களுக்கு முன்பு நடந்த மெகா ஏலம் இன்னும் நியாபகம் இருக்கிறது. ஏல அரங்கில் நூர் அஹமதுவின் பெயர் வாசிக்கப்பட்டவுடனேயே சென்னை அணி களத்தில் குதித்தது. மும்பையும் விடவில்லை. நூர் அஹமதுவை எடுக்க சென்னையும் மும்பையும் போட்டி போட்டன. 5 கோடி வரைக்கும் இந்த பந்தயம் சென்றது. 5 கோடியில் மும்பை பின்வாங்கிக் கொண்டது. நூர் அஹமது சென்னைக்கு வருகிறார் என நினைக்கையில், குஜராத் அணி RTM கார்டை நீட்டி ஒரு ட்விஸ்ட் வைத்தது. இப்போது சென்னை அணி நூர் அஹமதுவுக்கு ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டும்.

சென்னை அணி அசரவே இல்லை. 5 கோடியிலிருந்து நேராக 10 கோடிக்கு சென்றது. குஜராத் மிரண்டுபோய் பின்வாங்கியது. நூர் அஹமது சென்னை அணிக்கு வந்தார். ஏல அரங்கில் சென்னை அணி நூர் அஹமதுவின் வைத்த நம்பிக்கையை முதல் போட்டியிலேயே அவர் காப்பாற்றியிருக்கிறார். மிகச்சிறப்பாக பந்துவீசி மும்பை அணியை சராசரியான ஸ்கோருக்குள் கட்டுப்படுத்த உதவியிருக்கிறார். 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
நூர் அஹமது வீழ்த்திய 4 விக்கெட்டுகளுமே ரொம்பவே முக்கியமானவை. ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். முதலில் சில விக்கெட்டுகள் விழ ஒரு கட்டத்தில் திலக் வர்மாவும் சூர்யாவும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். 36-3 என்ற நிலையிலிருந்து 51 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் வைத்திருந்தனர். இந்த கூட்டணி கியரை மாற்றி அட்டாக்கிங்காக செல்ல இருந்த சமயத்தில் சரியாக இந்த கூட்டணியை நூர் அஹமது உடைத்தார்.

சூர்யாவை ஸ்டம்பிங் ஆக்கினார். அதேமாதிரி, திலக் வர்மா, ராபின் மின்ஸ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். திலக் வர்மா நின்று கடைசி வர ஆடும் மனநிலையில் இருந்தார். அவரை lbw ஆக்கி வெளியேற்றினார். ராபின் மின்ஸ் துடிப்பான இளம் வீரர். அதிரடியாக ஆடக்கூடியவர். அவரும் அட்டாக்கில் இறங்குவதற்குள் வீழ்த்தினார். அதேமாதிரி, கீழ்வரிசையில் நமன் தீரின் விக்கெட்டையும் காலி செய்தார். இப்படியாக மொத்தம் 4 விக்கெட்டுகள். அத்தனை விக்கெட்டுகளுமே சென்னை அணி பக்கமாக போட்டியை நகர்த்திக் கொண்டே வந்தன.
2023 ஓடிஐ உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்காக ஆடிய போதே சேப்பாக்கத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம், ரிஸ்வான் போன்றோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். இன்றும் சென்னை பிட்ச்சின் தன்மையை உணர்ந்துகொண்டு மும்பை பேட்டர்களை சர்ப்ரைஸ் செய்யும் விதத்தில் லைனையும் லெந்தையும் மாற்றி சீரான வேகத்தில் வீசி திணறடித்தார்.

அணி நிர்வாகம் தன் மேல் வைத்த நம்பிக்கையை முதல் போட்டியிலேயே முழுமையாக காப்பாற்றியிருக்கிறார் நூர் அஹமது. இதே செயல்பாடுகள் சீசன் முழுக்க தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
