Otha Rubai Tharen: ``அஜித் என்னை பார்த்ததும்.. மாறாத அந்த விஷயம்'' - நெகிழும் ஜான் பாபு மாஸ்டர்
நாட்டுப்புற பாட்டு' படம் ரிலீஸானப்போ பாடல்களும் நடனமும் எப்படி பெருசா பேசப்பட்டு எனர்ஜியைக் கொடுத்ததோ, அதே எனர்ஜியைத்தான் 'குட் பேட் அக்லி' படமும் கொடுத்திட்டிருக்கு.
இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ரசிகர்கள் 'ஒத்த ரூபாய்' பாட்டை கொண்டாடுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்தப் பாட்டோட டான்ஸ் மாஸ்டர்ங்கிற முறையில் பெருமைப்படுறேன். அஜித் சாருக்கும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்!" - சந்தோஷப்பூரிப்புடன் எனர்ஜிட்டிக்காக பேசுகிறார் நடன இயக்குநர் ஜான் பாபு.
சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்ற 'ஒத்த ரூபாய்' பாடல் மீண்டும் வைரல் ஹிட் அடித்துள்ளது. இப்பாடலுக்காகவே 'மொத்த ரூபாய்யையும் கொட்டிக்கொடுத்து படம் பார்க்கிறோம்' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் ஹார்ட்டின்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள், ரசிகர்கள்.
இந்த நிலையில், இப்பாடலுக்கு நடனம் அமைத்ததோடு அஜித் அறிமுகமான 'அமராவதி' படத்தில் நடன இயக்குநராக பணியாற்றிய ஜான் பாபு மாஸ்டரிடம் பேசினேன்.
`ஒரே நாள்ல அந்தப் பாட்டை ஷூட் பண்ணாங்க..'
"கஸ்தூரி ராஜா சாருக்கு நான் பண்ணின முதல் படம் 'நாட்டுப்புற பாட்டு'. அந்தப் படம் ரிலீஸான காலக்கட்டத்துல ரொம்ப பிஸியா ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தேன்.
கஸ்தூரி ராஜா சார், ஒருநாள் போன் பண்ணி 'இந்தப் படத்துல நான்கு பாடல்களுக்கு நீங்கதான் நடனம் அமைக்கணும். ஒரு பாட்டுக்கு மட்டும் நீங்க குஷ்புகூட டான்ஸ் பண்ணனும்'னு கேட்டுக்கிட்டார்.
அந்தப் பாட்டுதான் 'ஒத்த ரூபாய் தாரேன்'. அதுவும், ஒரே நாள்ல அந்தப் பாட்டை ஷூட் பண்ணனும் அப்படின்னார். நானும் சேலஞ்சிங்கா ஓகே சொல்லிட்டேன்.
குஷ்பு மேடம் தான் காரணம்..
ஒரே நாள்ல அந்தப் பாட்டை ஷூட் பண்ண ஓகே சொல்ல முழு காரணம் குஷ்பு மேடம்தான். ஏன்னா, குஷ்பு மேடம் ரொம்ப சின்சியர். அவங்களோட நிறைய படங்களுக்கு கோரியோகிராபி பண்ணிருக்கேன்.
டக்கு டக்குன்னு ஸ்டெப்ஸை புரிஞ்சிக்கிட்டு பிரமாதப்படுத்திடுவாங்க. எக்ஸ்பிரஷனும் வேற லெவல்ல இருக்கும். அதனால்தான், யோசிக்காம ஓகே சொன்னேன்.
குஷ்பு மேடத்தைத் தவிர்த்து, வேற எந்த நடிகையா இருந்திருந்தாலும் ஒரேநாள் ஷூட்டுக்கு ஓகே சொல்லியிருக்கமாட்டேன்.
`குஷ்பு மேடம் கரகம் வெச்சு சூப்பரா ஆடுனாங்க..'
நான் சொல்லிக்கொடுத்த மாதிரியே குஷ்பு மேடம் கரகம் வெச்சு சூப்பரா ஆடுனாங்க. அவங்களோட சிறப்பான ஒத்துழைப்பாலதான் பாட்டும் ஹிட் ஆச்சு. எங்கப் போனாலும் இந்தப் பாட்டுதான் ஓடும். ரசிகர்கள் ஆசையா வந்து போட்டோ எல்லாம் எடுத்துக்கிட்டாங்க.
அந்த அற்புதமான நினைவுகள் இப்பவும் மனசுல பதிஞ்சுக்கிடக்கு. இன்னும் சொல்லப்போனா, 'ஒத்த ரூபாய்' பாட்டு மூலம் இன்னும் பட வாய்ப்புகள் எனக்கு குவிய ஆரம்பிச்சுடுச்சு. உணர்வுப்பூர்வமா கிராமிய மணத்தோடு பேரிசையைக் கொடுத்திருந்தார் இளையராஜா சார்.
இத்தனை வருடங்கள் ஆகியும் எல்லோரும் கொண்டாடுற மாதிரியான ட்ரெண்டிங்கான இசையையல்லவா கொடுத்திருக்கார்?" என்று சிலாகிப்பவரிடம் "அஜித்தின் முதல் படமான 'அமராவதி' படத்துக்கு நீங்கதான் நடன இயக்குநர். 'குட் பேட் அக்லி' படத்தில் 'ஒத்த ரூபாய்' பாட்டு.. எப்படி இருக்கு?" என்றோம்.
'குட் பேட் அக்லி' படத்துல ஒர்க் பண்ணலைன்னாலும் நான் ஒர்க் பண்ணின ஃபீலைக் கொடுக்குது 'ஒத்த ரூபா' பாட்டு. நான் பெரிதும் மதிக்கும்; எனக்குப் பிடித்த அஜித் சாரோட படத்துல இடம்பெற்றது ரொம்ப சந்தோஷம். அஜித் சார் அறிமுகமான 'அமராவதி' படத்துக்கு எல்லா பாடல்களுக்கும் நான்தான் நடன இயக்குநர்.
'நேசம்', 'கல்லூரி வாசல்' படங்களுக்கும் நடனம் அமைச்சிருக்கேன். 'அமராவதி' படத்துல வர்ற 'புத்தம் புது மலரே' பாட்டுதான் அவருக்கு முதல் பாட்டு.
லைட்டான டான்ஸ் மூவ்மென்ட்ஸ். எல்லாம் மான்டேஜ் ஸ்டைல்லதான் இருக்கும். ஒவ்வொரு மூவ்மென்ட்ஸையும் பளிச் பளிச்னு சூப்பரா பண்ணினார். 'முதல் படம் மாதிரி இல்லையே... பத்து, பதினைந்து படங்களுக்கு ஒர்க் பண்ணின மாதிரி ஆடுறாரே'ன்னு இயக்குநர் செல்வாவும் நானும் ஆச்சர்யத்தோட பாராட்டுவோம்.
`ஆசீர்வாதம் வாங்கினார் அஜித் சார்; மெய்ச்சில்லிர்த்துப் போயிட்டேன்..'
அஜித் சார் ரொம்ப தன்னடக்கமான மனிதர். அவர்கூட ஒர்க் பண்றதே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இன்னைக்கு பெரிய ஸ்டாரா இருக்கார். ஆனாலும், முதல் படத்துல இருந்த தன்னடக்கத்தை இப்பவும் பார்க்கலாம். அதுக்கு உதாரணமா, ஒரு சம்பவத்தைச் சொல்றேன்.
சில வருடங்களுக்கு முன்பு, நேரு ஸ்டேடியத்துல எங்க டான்சர்ஸ் யூனியன் அசோசியேஷனோட விழாவுக்கு குடும்பத்தோட வந்திருந்தார் அஜித் சார். எல்லோரும் எக்ஸைட்மெண்ட்டா இருந்தோம். அவரைப் பார்க்கிறதுக்காக, நான் ரூம்ல இருந்து வெளில வந்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு குருகிட்ட ஆசீர்வாதம் வாங்குற மாதிரி கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் அஜித் சார்.

இப்படிப்பட்ட மனிதரோட முதல் படத்துக்கு நான் நடனம் அமைச்சேங்கிறது ரொம்ப பெருமையான விஷயம். எவ்ளோ உயரத்துக்குப் போனாலும் இன்னமும் அப்படியே இருக்காரேன்னு மெய்ச்சில்லிர்த்துப்போயிட்டேன்.
'அமராவதி' பண்ணும்போதே, அஜித் சாருக்கு ஏத்தமாதிரி நல்ல மூவ்மென்ட்ஸ் கொடுத்து பெரிய ஹீரோ மாதிரி கொண்டுவரலாம்னு யோசிச்சு பண்ணினேன்.
புதுமுகமா வரும்போது அவங்களுக்கும் ஆயிரம் கனவுகள் இருக்கும். அதனால, க்ளோஸ் ஷாட், மூவ்மெண்ட்ஸ், எமோஷனல்னு எல்லா திறமையையும் பாட்டுல கொண்டு வந்துடுவேன்.
`என்னை வாத்தியார்னு கூப்பிடுற ஒரே ஆர்டிஸ்ட் அவர்தான்..'
அஜித் சார் மாதிரியே, ரோஜா மேடத்துக்கும் 'நிலா காயும் நேரம்' பாட்டு பண்ணேன். சூப்பரா பண்றவங்களை இன்னும் சூப்பரா பண்ண வெச்சதுல பெரிய மன நிம்மதி. அஜித் சாருக்கு கொரியோகிராபி பண்ணிய படங்களில், எனக்குப் பிடித்த பாடல் 'அமராவதி' படத்தின் 'மடோனா வருவாளா' பாடல்தான். அஜித் சார் சூப்பரா டான்ஸ் பண்ணிருப்பார்" என தனது ஃபேவரைட் பாடலைப் பகிர்ந்தவரிடம் "எத்தனையோ நடிகர்கள்கூட ஒர்க் பண்ணியிருக்கீங்க. இப்பவும் உங்களை ரொம்ப மதிக்கக்கூடிய நடிகர் யார்?" என்றோம்.
"எப்போ; எங்க பார்த்தாலும் என்னை 'வாத்தியாரே' அப்படின்னு அன்போட அழைக்கிறது, பிரபுசார்தான். 'கோழிக்கூவுது' படத்துல உதவி நடன இயக்குநரா இருந்தப்போ, பிரபு சாருக்கு முதன் முதலா 'அண்ணே அண்ணே... சிப்பாய் அண்ணே' பாட்டுக்கு டான்ஸ் மூவ்மென்ட்ஸ் சொல்லிக்கொடுத்தது நான்தான். அதுக்கப்புறம், அவர்க்கூட நிறைய படங்கள் டான்ஸ் மாஸ்டராவும் ஒர்க் பண்ணிருக்கேன். ரொம்ப மரியாதையா பேசுவார்.
என்னை வாத்தியார்னு கூப்பிடுற ஒரே ஆர்டிஸ்ட்டும் அவர்தான். டான்ஸ் மாஸ்டரா அவர் படங்களுக்கு அதிகமா ஒர்க் பண்ணினதும் நான்தான். ரொம்ப தங்கமான மனசு. எனக்கு தெரிஞ்சும் தெரியாமலும் நிறைய உதவிகள் பண்ணிருக்கார். பல படங்கள்ல மறைமுகமா என்னைத்தான் டான்ஸ் மாஸ்டரா போடச்சொல்லி ரெக்கமெண்ட் பண்ணுவார். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டுல நாமதான் ரெக்கமெண்ட் பண்ணோமேங்கிற மாதிரி காட்டிக்கமாட்டார். ரொம்பவே ஹெல்ப்பிங் மைண்ட். அதேநேரம், செம்ம ஜாலி. கலாய்ச்சுத் தள்ளுவார். பார்க்கணும்னு சொன்னா, உடனே வீட்டுக்கு வரச்சொல்லி உணவு பரிமாறி சாப்பிட வெச்சு கவனிப்பார். அப்படியொரு பேரன்புக்காரர்" என்று நெகிழ்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...