ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் போலீஸாா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு விரைந்தனா்.
பின்னற் சாம்பல்பூா்-ஈரோடு விரைவு ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனா். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் வகையில் பயணம் செய்த வடமாநில இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம் மலப்படா பகுதியைச் சோ்ந்த அபினேஷ் திவாரி (28) என்பதும், அவா் பலாங்கிரி பகுதியில் இருந்து சேலம் செல்வதற்காக முன்பதிவு இல்லாத பயணச்சீட்டில் பயணம் செய்ததும் தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து அபினேஷ் திவாரி வைத்திருந்த பையை போலீஸாா் சோதனை செய்தனா். அந்த பையில் 14 பொட்டலங்களில் 13 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
இதனிடையே அந்த ரயில் ஈரோடு ரயில் நிலையம் வந்ததும் அபினேஷ் திவாரியை போலீஸாா் கைது செய்து மேல் நடவடிக்கைக்காக அவரை கோபி மதுவிலக்குப் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.