Pushpa: `பல காயங்களுடன் அந்த பாடலுக்கு நடனமாடினார்' - அல்லு அர்ஜுன் குறித்து நெகிழும் கணேஷ் ஆச்சர்யா
புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வசூல் வெற்றியை அடுத்து வெளியான இரண்டாம் பாகமும் வசூலைக் குவித்து கவனம் ஈர்த்திருந்தது.
படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி ரூ. 1500 கோடியைத் தாண்டியுள்ளது அதன் வசூல். அல்லு அர்ஜூன் அட்லீ, திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகிய இருவரின் இயக்கத்தில் அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறார். அதை முடித்துவிட்டு புஷ்பா மூன்றாம் பாகத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. இயக்குநர் சுகுமாரும் ராம் சரணுடனான படத்தை முடித்துவிட்டு புஷ்பா -3 படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பார். 2028ம் ஆண்டு புஷ்பா -3 திரையரங்கிற்கு வரும் என அதன் தயாரிப்பாளர் ரவி ஷங்கர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் புஷ்பா 2 படத்தின் 'சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே
என் சாமி' பாடலின் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சர்யா, அல்லு அர்ஜுன் நடனம் குறித்தும் அவரின் அர்ப்பணிப்புக் குறித்தும் பேசியிருக்கிறார்.
இது பற்றி பேசியிருக்கும் அவர், " அந்தப் பாடலில் கங்கம்மா வேடமணிந்து சேலை, ஜிமிக்கி, கம்மல் என அனைத்தையும் அணிந்துகொண்டு அல்லு அர்ஜூன் நடனமாடியாது சாதாரண விஷயமல்ல. அதற்கு மிகுந்த அர்ப்பணிப்பு வேண்டும். அந்தப் பாடலை 29 நாள்கள் எடுத்தோம்.

அல்லு அர்ஜுனுக்கு 5- 10 நாள்கள் படப்பிடிப்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் அந்த மேக்கப் உடன் பல மணி நேரம் இருந்தார். நடனமாடும்போது கால்களில் அடிபடும், கழுத்தில் சுளுக்கு, காயங்கள் எனப் பல சவால்களை எதிர்கொண்டார். ஒவ்வொரு முறையும் புத்துணர்வுடனும், விடாமுயற்சியுடனும் நடனமாடினார். அப்பாடலைப் பார்க்கும்போதே அவரது அர்ப்பணிப்பு தெரியும்" என்று அல்லு அர்ஜுனைப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.