Ravi Mohan: "இயக்குநராகும் குவாலிட்டி ரவி மோகன் சாருக்கும் கார்த்தி சாருக்கும் இருக்கிறது!"- எஸ்.கே
நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார்.
'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு சில நாள்களுக்கு முன்பு வந்திருந்தது.

'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், "ஒரு தயாரிப்பு நிறுவனம் என்பது ஒரு படம் செய்வது என்பதைத் தாண்டி பல கனவுகளைத் திரையில் கொண்டு வரும் பொறுப்பு.
அவ்வளவு பிரஷரோடு நாம் செய்யும் வேலை அது. 'பராசக்தி' படத்தில்தான் ரவி மோகன் சாருடன் அதிகமாகப் பழகுவதற்கான வாய்ப்பு அமைந்தது. இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்ததோடு நேற்று என்னைத் தொடர்புகொண்டு இந்த நிகழ்வுக்கு நிச்சயமாக வர வேண்டும் என நினைவூட்டினார்.
கனவு, பேஷன் என அனைத்திற்கும் வடிவம் கொடுக்க அத்தனை விஷயங்களையுமே செய்கிறார்.

அவர் தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்கிறது. 'ப்ரோ கோட்' திரைப்படம் நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். யோகி பாபு என்றைக்கும் தன்னை ஒரு காமெடியனாக சுருக்கிக்கொண்டது கிடையாது.
அவர் அற்புதமான நடிகரும்கூட. அவருக்கேற்ற தலைப்பைதான் ரவி மோகன் சார் இயக்கும் படத்திற்கு வைத்திருக்கிறார். அதற்கு சரியான ஹீரோவும் அவர்தான்.
ஒரு ஹீரோ, இயக்குநராக வேண்டும் என்று நினைப்பதே பெரிய முடிவு. அவர் சிறுவயதிலிருந்தே சினிமாவைப் பார்ப்பதனால் இந்த முடிவை அவரால் நம்பிக்கையோடு எடுக்க முடிகிறது.
ஒரு சில நடிகர்களுக்கு இயக்குநராகும் குவாலிட்டி இருக்கும். அது ரவி மோகன் சாருக்கு இருக்கிறது. கார்த்தி சாருக்கும் இருக்கிறது.
அடுத்த தலைமுறையில் இயக்குநராகும் திறமை இருக்கக்கூடியவராக நான் மணிகண்டனைப் பார்க்கிறேன். அவர் சீக்கிரமாகவே இயக்குநராகிவிடுவார். அவர் இயக்குநராக வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு இருக்கிறது.
இன்னும் ஹீரோக்கள் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஒரு படத்தை வழங்க மட்டுமே செய்தால் எங்களின் மீது படும் வெளிச்சம், அத்திரைப்படத்தின் மீது பட்டால் மக்கள் எங்களுக்குக் கொடுத்த இடத்தை நாங்கள் சரியாகப் பயன்படுத்துகிறோம் என்ற ஃபீல் இருக்கும்.

எனக்கு ஜெனிலியா மேமைப் பிடிக்கும். 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தை நான் கல்லூரியில் படிக்கும்போது இரண்டு, மூன்று முறை பார்த்திருக்கிறேன்.
நீங்கள் இருவரும் மற்றுமொரு படத்தில் நடிக்க வேண்டும் ரவி சார்!" என்றவர், "நான் தயாரிக்கும் திரைப்படங்கள் கொடுக்கும் சந்தோஷத்தை நான் நடிக்கும் எந்தப் படங்களும் எனக்கு கொடுப்பதில்லை.
தயாரிக்கும் படத்தில் கிடைக்கும் சுதந்திரமும், நான் கற்றுக்கொள்ளும் விஷயமும் 100 சதவீதம் நான் நடிக்கும் படத்தில் கிடைப்பதில்லை," என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...