NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
Relationship: மனைவியை கை ஓங்கும் கணவனைத் திருத்தும் 6 வழிகள்!
பெண் தன்னை கை ஓங்குவதை வாழ்நாள் அவமானமாக நினைக்கிற ஆண், தன் மனைவி என்ற ஒரே உரிமையை வைத்துக்கொண்டு பெண்ணை அடிக்கிறான். ’இந்த நூற்றாண்டுல இருந்துதான் ஆரம்பிச்சது’ என்று உறுதியாகக் கணிக்க முடியாத அநாகரிகம் கை ஓங்கும் பழக்கம். மனைவியை அடிக்கிற கணவனைக் கண்டிக்கிற சினிமா ஹீரோக்கள்கூட, ‘வீட்டுக்குள்ள வெச்சு அடிச்சா நான் ஏன்டா கேட்கப் போறேன். வெளியில போட்டு அடிச்சதாலதான் கேக்குறேன்’ என்றுதான் வசனம் பேசுவார்கள்.
விதிவிலக்காக, அடித்த கணவனை ஹீரோ தூக்கிப்போட்டு மிதித்தால், ‘என் புருசன் என்னை அடிப்பாரு, மிதிப்பாரு. அதைக் கேட்க நீ யாரு’ என்று அடிவாங்கிய மனைவியே கணவனுக்கு சப்போர்ட் செய்வாள். இரண்டு காட்சிகளுமே மனைவியை கணவன் கை ஓங்குவது உலக இயல்புதான் என்று சொல்லாமல் சொல்வதற்கு, அந்த வசனங்களை எழுதியது ஓர் ஆண் என்பதைத்தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-24/twrj2cz3/WhatsApp_Image_2025_01_24_at_4_25_15_PM.jpeg)
’புருஷந்தானே அடிச்சான்’ என்று காலங்காலமாகப் பேசிவந்த சமூகத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கி விவாகரத்து கேட்கவைத்தது சில வருடங்களுக்கு முன்னால வெளிவந்த ’தப்பட்’ இந்திப் படம். வீட்டுக்குள்ளோ அல்லது பொதுவெளியிலோ பெண்களின் சுயமரியாதைக்கு எதிராக ஆண்களின் கரம் உயர்ந்தால், ஓங்குகிற கையைத் தடுப்பதிலிருந்து உறவைத் துண்டிப்பது வரை இனி பெண் செய்வாள் என்பதற்கான அறிவிப்பாகவே அந்தப் படத்தைப் பார்க்கலாம். சரி, உளவியல் ஆலோசகரும் பேராசிரியருமான கருணாநிதி, கை ஓங்குதல் பற்றி என்ன சொல்கிறார்...
‘’ஓர் ஆண் தன் மனைவியை அடிக்க காரணம், ‘நான் இவளைவிட உயர்ந்தவன். இவளை அடிக்க எனக்கு அதிகாரமிருக்கிறது. இவள் எனக்கு உரிமைப்பட்ட பொருள்(?!) இவளை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்ற ஆதிக்க உணர்வுதான். குழந்தைப் பருவத்திலிருந்தே இது ஆணுக்குக் கற்பிக்கப்படுகிறது. ‘சாப்பிட்ட தட்டை கையோட கழுவி வை’ என்று பெண் குழந்தைக்கு போதிக்கிற பெற்றோர்கள், ஆண் குழந்தைக்கு ’தட்டை அப்படியே வெச்சிட்டு எழுந்திரு’ என்று, அவர்கள் அறியாமலே ஆணாதிக்கத்தைச் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறார்கள். இதனுடைய நீட்சியில் ஒன்றுதான் மனைவியை கை ஓங்குவதும்.
நம் வீடுகளுக்குள் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் சரிசமமாக நடத்தியிருந்தால், இப்படியோர் அநாகரிகம் நம் சமூகத்தில் இருந்திருக்காது. நான் ஒட்டுமொத்த பெற்றோர்களையும் விரல் நீட்டவில்லை. சிலர் பாலினம் தாண்டி குழந்தைகளை சரிசமமாக வளர்த்தாலும், அந்தச் சிறுபான்மை நாகரிகத்தால் இந்தப் பெரும்பான்மை அநாகரிகத்தை இந்த நூற்றாண்டு வரை சரி செய்ய முடியவில்லை’’ என்றவர், இதற்கான உளவியல் தீர்வுகளையும் பகிர்ந்துகொண்டார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-04/6bb4d591-5e19-4238-a1c1-a30348ed4695/happy_family.jpg)
‘’கை ஓங்குததிலிருந்து பெண்களைக் காக்க வேண்டுமென்றால், குழந்தைகளை சரிசமமாக வளர்ப்பது மட்டுமே நிரந்தர தீர்வு. ‘நிகழ்காலத்தில் அவமானப்பட்டுக்கொண்டிருக்கும் மனைவிகளுக்கும் வழிகள் இருக்கின்றன. கோபத்தைக் குறைப்பதற்கு என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் ‘மனைவியை கை ஓங்குகிற இயல்பை’ அதிகமாகப் பார்க்கிறேன். ‘மனைவியை அடிப்பீர்களா’ என்றால், ‘அவ தப்பு பண்ணா அடிப்பேன்’ என்பார்கள். ‘ நீங்க தப்பு பண்ணா உங்க மனைவி உங்களை அடிக்கலாமா’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டால், ‘ஒரு பொம்பளை ஆம்பளையை அடிக்கலாமா’ என்று பதில் கேள்வி கேட்பார்கள். இவர்களைச் சரிசெய்ய வேண்டுமென்றால், மனைவியை கை ஓங்குகிறபோது இவர்களுடைய முகம், உடல்மொழி, இயல்பு ஆகியவை எப்படி மாறுகின்றன என்பதை வீடியோ எடுத்துக்காட்ட வேண்டும். இதைச் சம்பந்தப்பட்ட மனைவி செய்ய முடியாது. இன்னொருவர் செய்யலாம். அவர், கணவர் குடும்பத்தைச் சேர்ந்த நபராக இருந்தால் இன்னும் நல்லது. தீர்வுக்கான முதல் வழி இது.
மனைவியை அடிக்கிற பழக்கமென்பது தாத்தாவிடமிருந்து, அப்பாவிடமிருந்து என்று ஓர் ஆண் பார்த்துக் கற்றுக்கொண்டதுதான். வழக்கமான விதிவிலக்குகள் இதிலும் உண்டு. ‘கற்றுக்கொண்ட தவறான எந்த இயல்பை’யும் தொடர்ந்து 21 நாள்கள் கவனமாகக் கட்டுப்படுத்தி வந்தால், அதிலிருந்து மீள முடியும் என்பதுதான் உளவியல் நிஜம். இதை நாங்கள் ‘மென்டல் டிரெயினிங்’ என்போம். மனைவியை கை ஓங்கும் எண்ணம் வரும்போதெல்லாம் ‘என் அம்மாவையோ, என் மேலதிகாரியையோ கை ஓங்க முடியாதல்லவா’; ‘அதேபோல சக மனுஷியான மனைவியையும் அடிக்கக்கூடாது’ என்று புரிய வைப்போம். இது இரண்டாவது வழி.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/1zs38tup/Untitled_1.jpg)
மூன்றாவதாக, மனைவியின் இடத்திலிருந்து அவள் படுகிற அவமானத்தைப் புரிய வைப்போம். எம்பதி முறை சிகிச்சை இது. நான்காவதாக மனைவியிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வை அவனுக்கு ஏற்படுத்துவோம். ‘எமோஷன்ல அடிச்சிட்டேன் டாக்டர்’ என்று தப்பிக்க முயல்பவர்களிடம், ‘உங்கள் மகளை எமோஷனில் உங்கள் மருமகன் அடித்தால் ஏற்றுக்கொள்வீர்களா’ என்று ஆணுடைய பாசிட்டிவ் எமோஷனை தூண்டி விடுவோம். இது ஐந்தாவது வழி. ஆறாவதாக, ‘எங்கேயோ பிறந்து வளர்ந்த உங்கள் மனைவி உங்கள் மீது பாசமாக இருக்கிறார். ஆனால், நீங்கள் அவரை கை ஓங்குகிறீர்களே’ என்று மனசாட்சியைத் தட்டியெழுப்புவோம்.
இவற்றையெல்லாம் செய்துபார்க்க வேண்டுமென்றால், இப்படிப்பட்ட ஆண்கள் எங்களிடம் சிகிச்சைக்கு வர வேண்டும். கணவன் முதல் முறை கை ஓங்கும்போதே மனைவி அதை எந்த வகையிலாவது தடுத்துவிட வேண்டும். பெண்ணை அடித்துப் பழக்கப்பட்ட ஆணுக்கு, ‘இனி பெண்ணை அடிக்கக்கூடாது; அடிக்க முடியாது’ என்பதை இந்தத் தலைமுறை பெண்கள் புரிய வைத்தால்தான், வரும் தலைமுறை பெண்கள் இந்த அவமானமில்லாமல் வாழ முடியும்’’ என்கிறார் கருணாநிதி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY