Relationship: காதல், திருமண வாழ்வை பாதிக்கும் Insecure உணர்வு. தீர்வுகள் இதோ!
'நீ ஏன் ஆரம்பத்துல இருந்த மாதிரி இப்போ இல்ல?', 'உனக்கு என்னைவிட முக்கியமான விஷயம் நிறைய இருக்குதுல்ல?', 'இப்போவெல்லாம் நான் உனக்கு அலட்சியமா போயிட்டேன்ல?' - இந்த மாதிரியான கேள்விகளை எதிர்கொள்ளாத காதல்கள் சொற்பம்தான்.
காதலின் ஆரம்பத்தில் இணையைப் பார்த்தவுடன் அடிவயிற்றில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் நாள்கள் செல்லச் செல்ல செயலிழந்து போவதற்கான காரணம், காதலில் தோன்றும் பாதுகாப்பின்மைதான். இன்செக்யூர்ட் ஃபீல். 'அவனுக்கு\அவளுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடுமோ, என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவாரோ' என்று காதலிலும், திருமண வாழ்விலும் இன்செக்யூர்டாக உணர ஆரம்பித்துவிட்டால் நாம் வரமாக நினைத்த அந்த உறவே சாபமாக மாறிவிடும்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய காதல் ஜோடிகளும், தம்பதிகளும் இன்செக்யூர் உணர்வுக்குள் மாட்டிக்கொண்டு வெளியில் சொல்லவும் முடியாமல், இன்செக்யூர்டாக உணர்வதைத் தவிர்க்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். காதல், திருமணம் என்று எந்த உறவாக இருந்தாலும் அதில் உறவுச்சிக்கல் ஏற்படுவது இயல்புதான். ஏற்படும் உறவுச்சிக்கல்களை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதிலேயே இருக்கிறது அந்த உறவின் ஆயுள்! காதல் மற்றும் திருமண வாழ்வில் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுவது ஏன்? அப்படி உணர்வதால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து மனநல ஆலோசகர் வசந்தி பாபுவிடம் பேசினோம்.
"காதல் ஆரம்பிக்கும்போது ஒருவரை ஒருவர் கவர வேண்டும் என்பதுதான் இருவரின் நோக்கமாகவும் இருக்கும். தனக்குப் பிடித்த ஒருவருக்குத் தன்னை பிடித்திருக்கிறது என்பதைத் தெரிந்து இருவரும் காதலுக்குள் செல்லும்போது அந்த உறவு அளவில்லாத சந்தோஷத்தைத் தரும்.
எனவே ஒருவருக்கொருவர் தங்களது உண்மையான குணங்களை மறைத்துக்கொண்டு தங்கள் இணைக்குப் பிடித்ததுபோல் நடந்துகொள்ளத் தொடங்குவார்கள்.
ஆனால் இந்தப் பொய் முகம் வெகு நாள்கள் நீடிக்க வாய்ப்பில்லை. என்றாவது ஒருநாள் தங்கள் இணையின் உண்மையான குணம் வெளிப்படுவதைக் காணும்போது, 'இவர் நம்முடன் கடைசிவரை இருப்பாரா?' என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிக்கும். இதுதான் பாதுகாப்பின்மையை உணர்வதன் தொடக்கம்.

உதாரணமாக, காதலிக்கும்போது அந்தப் பெண், 'எனக்கு ஆண் நண்பர்களே இல்லை' என்று சொல்லிவைத்திருக்கலாம். அந்த ஆண், 'எனக்குப் புகைபிடிக்கும் பழக்கம் இல்லை' என்று சொல்லியிருக்கலாம். என்றோ ஒருநாள் காதலன் தன் காதலியை ஆண் நண்பர்களோடு பார்க்கும்போதோ, அந்தக் காதலி புகைபிடித்துக் கொண்டிருக்கும் தன் காதலனைப் பார்க்க நேர்ந்தாலோ அவர்களுக்குள் பாதுகாப்பின்மை உணர்வு தலையெடுக்கத் தொடங்கும்.
லவ் ரிலேஷன்ஷிப்பில் இன்செக்யூர்டாக உணரவைக்கும் மற்றொரு முக்கியக் காரணம், பொசசிவ்னெஸ்(Possessiveness). தன் காதலன்\காதலி தனக்கு மட்டுமே சொந்தம் என்று கருதுவது. ஆரம்பத்தில் இந்த உணர்வு இருவருக்குமே இன்பத்தைக் கொடுத்தாலும் பின்னாளில் காதலில் பெரிய விரிசல் ஏற்பட இதுவே காரணமாகிவிடுகிறது. 'நீ எனக்கு மட்டும்தான்', 'என்னைவிட அவங்கதான் உனக்கு முக்கியமா?', 'என்கிட்ட பேசுறதைவிட உனக்கு வேலைதான் முக்கியமா?' என்று, பொசஸிவ்னெஸ்ஸில் உள்ளவர்கள் தங்கள் காதலில் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்கிவிடுவார்கள்.

அடுத்தது, கட்டாயப்படுத்துவது(Compulsion). 'நீ எங்கே போனாலும் எங்கிட்ட சொல்லிட்டுத்தான் போகணும்', 'இனிமேல் அவன்கூட பேசாத', 'அவகூட நீ எங்கேயும் போகக் கூடாது' போன்ற கட்டளைகளைக் கட்டாயத்தின் பேரில் லவ் ரிலேஷன்ஷிப்பில் திணிக்கும்போது அவை இன்செக்யூர்ட் ஃபீலை ஏற்படுத்தி காதல் முறிந்துபோகக் காரணமாகிறது.
இதுவே திருமண உறவு என்று வரும்போது அது காதல் திருமணமாக இருந்தால், காதலிக்கும்போது இருந்த நெருக்கம் திருமணமான பிறகு இல்லை என்று சிலர் கருதும்போது அது இன்செக்யூர்ட் ஃபீலுக்குக் காரணமாகிறது. காதலிக்கும்போது இருவரும் தனியே சந்தித்துப் பேசக் கிடைக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தபோது இருந்த குறுகுறுப்பு, கல்யாணமாகி ஒரே அறைக்குள் இருவரும் வசிக்கும்போது காலப்போக்கில் குறைவது இயல்புதான். ஆனால் இது தன் துணைக்கு தன் மேல் அலட்சியம் வந்துவிட்டதோ என்ற இன்செக்யூர்ட் ஃபீலை ஏற்பட வைக்கிறது.

இதுவே அரேஞ்டு மேரேஜ் என்று வரும்போது கணவரோ மனைவியோ எப்போதும் தன் சொந்தங்களைப் பற்றியே தன் துணையிடம் பேசிக்கொண்டிருந்தால் அது இன்செக்யூர்டு ஃபீலை ஏற்படுத்தும். மேலும் குடும்பத்தில் ஏதாவது சண்டை என்று வரும்போது தன் துணை தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் அதுவும் பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படக் காரணமாகும்.
காதல் மற்றும் திருமண உறவு இரண்டிலும் இன்செக்யூர் ஃபீல் ஏற்பட முக்கியக் காரணம், சந்தேகம். இன்னொரு புறம், ஒரு ரிலேஷன்ஷிப் நீடித்து நிலைக்க முக்கியக் காரணம் பரஸ்பர நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் விரிசல் ஏற்படும்போது அவர்களுக்கிடையேயான உறவிலும் விரிசல் ஏற்படுகிறது.
எனவே, ஓர் உறவில் பாதுகாப்பின்மையை உணரும்போது அதிலிருந்து மீண்டுவர புரிந்துணர்வு இருவருக்கு இடையிலும் அவசியமாகிறது. பேசித் தீர்க்க முடியாத பிரச்னைகள் என்பது எதுவுமே இல்லை. அதுவும் காதல், திருமண உறவில் ஏற்படும் பிரச்னைகளுக்கு காதலன் - காதலி, கணவன் - மனைவி இருவரும் மனம்விட்டுப் பக்குவமாகப் பேசினாலே அவர்களுக்கு ஏற்பட்ட சண்டைகள் தீரும்; அவர்களின் காதலும் மேலும் பலப்படும். 'விட்டுக்கொடுத்தல்' என்பதும் காதல் உறவை வலுவாக்கும் முக்கியக் காரணி'' என்றார் மனநல ஆலோசகர் வசந்தி பாபு.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
