சஸ்பென்ஸ் வைக்கும் எடப்பாடி... TVK - ADMK இடையே என்ன நடக்கிறது?
RIC: ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பு மீண்டும் உருவாக்கப்படுகிறதா... வெளியுறவுத்துறை சொல்வதென்ன?
இந்தியா சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் RIC இயக்கமுறையை (Russia-India-China Mechanism) மீண்டும் நிறுவுவது பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் எந்த முடிவுகளும் மூன்று நாடுகளின் பரஸ்பர வசதிகளைப் பொறுத்தே எடுக்கப்படும் என வெளியுறவுத்துறைக் கூறியுள்ளது.

முன்னதாக சீன வெளியுறவுத்துறை, RIC இயக்கமுறையை புதுப்பிக்க ரஷ்யா எடுக்கும் முயற்சிகளை பெய்ஜிங் ஆதரிப்பதாக கூறியிருந்தது. 'இது மூன்று நாடுகளின் நலன்களையும் கடந்து பிராந்தியத்தில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவுகிறது' என்பதை சீன வெளியுறவுத்துறைக் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இந்த ஆலோசனை வடிவம் உலகளாவிய பிரச்னைகள் மற்றும் பிராந்திய சிக்கல்கள் குறித்து மூன்று நாடுகளும் கலந்து விவாதிக்கும் இயக்கமுறையாகும்.
RIC கூட்டம் நடத்தப்படுமா, எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மூன்றுநாடுகளுக்கும் வசதியாக அமையும் முறையில் முடிவெடுக்கப்படும்." என்று பேசியுள்ளார்.
RIC கூட்டம் நடத்துவது குறித்து இதுவரையில் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என டெகான் ஹெரால்ட் தளம் சுட்டிக்காட்டுகிறது.

சில மாதங்களாக அமெரிக்க அரசு BRICS கூட்டமைப்புக்கு எதிராக கண்டனங்கள் முன்வைத்து வருவது அதிகரித்திருக்கிறது.
இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று (ஜூலை 17) ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ BRICS கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த மூன்று நாடுகள் இடையே ஒருங்கிணைந்த இயக்கமுறை உருவாவது அவசியம் என்றும் இதற்காக இந்தியா மற்றும் சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் பேசியிருக்கிறார்.
RIC இயக்கமுறையின் கீழ், மூன்று நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் அடிக்கடி சந்தித்து தங்கள் ஆர்வமுள்ள இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதித்து ஒத்துழைப்பை மேம்படுத்த முயற்சிப்பர்.
கோவிட் பெருந்தொற்று மற்றும் இந்தியா சீனா இடையே லடாக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லைப் பிரச்னைகளால் RIC இயக்கமுறை செயல்படாமல் போனது குறிப்பிடத்தக்கது.