செய்திகள் :

RN Ravi: `யார் அறிவுரையின்படி ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்?’ - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

post image

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு..!

தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிதிவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, `ஆளுநர் எந்த அடிப்படையில் ஒரு மசோதா மீது முடிவெடுக்கிறார்? மசோதாக்களை இரண்டாவது முறையாக மாநில அரசு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் போது அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?’ உள்ளிட்ட எட்டு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

தமிழ்நாடு அரசு

பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதங்களை முன் வைத்தார். `மத்திய அரசின் வரம்புக்குள் இருக்கும் ஒரு விவகாரத்தில் மாநில அரசு சட்டமேற்றுகிறது என்றால் அதை நிராகரிக்க மட்டும் தான் ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. பொது பட்டியலில் இருக்கும் விவகாரங்கள் அல்லது மாநில பட்டியலில் இருக்கும் விவகாரங்கள் ஆகியவற்றில் ஒரு மாநில அரசு மசோதாவை நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்’ என தமிழ்நாடு அரசு தரப்பு பதில் அளித்தது.

நீதிபதிகள், `ஒரு மசோதாவை ஆளுநர் சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கிறார். அதை ஏன் அனுப்பி வைக்கிறேன் என்பதை ஆளுநர் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமா? ஏனென்றால் காரணத்தை குறிப்பிடவில்லை என்றால் மாநில அரசால் எப்படி அதை சரி செய்ய முடியும் இதைப்பற்றி சட்டம் என்ன சொல்கிறது?” என மீண்டும் கேள்வி எழுப்பினர்.

`இந்த மூன்று விஷயங்களை மட்டும் தான் ஆளுநரால் செய்ய முடியும்’

``பெரும்பாலான நேரங்களில் ஆளுநர் அப்படி சொல்வதில்லை வெறுமென அதை நிலுவையில் போட்டு வைப்பார் அல்லது காரணம் எதையும் குறிப்பிடாமலேயே நிராகரித்து விடுவார்” என தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

``என்ன என்ன விஷயங்களை ஆளுநர் குறிப்பிட்டு மசோதாக்களை திருப்பி அனுப்ப முடியும்?” என மீண்டும் நீதிபதிகள் கேட்டபோது

``சில பரிந்துரைகளை கொடுக்கலாம். குறிப்பிட்ட சரத்துகளை சுட்டிக்காட்டி அதை மாற்ற அறிவுறுத்தலாம். சட்ட வரைமுறைகளுக்கு எதிராக இருக்கும் அம்சங்களை சுட்டிக்காட்டலாம். இந்த மூன்று விஷயங்களை மட்டும் தான் ஆளுநரால் செய்ய முடியும்” என தமிழ்நாடு அரசு அதற்கும் பதில் வழங்கியது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

``மசோதாக்கள் மீது முடிவெடுப்பதை அறிவுறுத்தும் அரசியல் சாசனப் பிரிவின் முதல் உட்பிரிவின்படி, மசோதாவை நிராகரித்தாலோ திருப்பி அனுப்பினாலோ அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அதை கட்டாயமாக பின்பற்ற வேண்டியது இல்லை” என ஆளுநர் தரப்பு கூறுகிறது.

தமிழ்நாடு அரசு தரப்பு, ``ஆளுநர் மசோதாக்கள் மீது அறிவுரை கூறும் ஆலோசகர் மட்டும்தானே தவிர, முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை. ஆளுநரை பொருத்தவரை மசோதாக்களின் மீது முடிவெடுக்கும் அவரது அதிகாரத்தை ஒருமுறை அவர் பயன்படுத்தி விட்டார் என்றால் இன்னொரு முறை அதை பயன்படுத்த முடியாது. அதனால் தான் முதல் முறை மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பும் ஆளுநரால் இரண்டாவது முறையாக அதை செய்ய முடியாது. மேலும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்ப முடியாது ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் அவருக்கு இருக்கக்கூடிய ஒரே வாய்ப்பு. ஆளுநர் இருக்கக்கூடிய சட்ட அம்சங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சூப்பர் சட்டமன்றமாக அவர் செயல்படக்கூடாது” என அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்தது.

``ஒரு மசோதாவை இரண்டாவது முறையாகவும் அனுப்பி வைக்கும் போது, அதுவும் அதிகார வரம்பு மீறல் எனக் கூறி ஆளுநர் நிராகரிக்கிறார் என்றால் அதை எவ்வாறு பார்ப்பது?” என உச்சநீதிமன்றம் குறுக்கு கேள்வி கேட்டபோது, ``மசோதா அதிகார வரம்பை மீறி இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் வேலையை தவிர ஆளுநரின் வேலை கிடையாது” என தமிழ்நாடு அரசு பதில் அளித்தது

`சட்டம் இயற்றும் இடம் சட்டமன்றம் தானே தவிர அது கவர்னர் மாளிகை அல்ல’

``பல மசோதாக்கள் மீது 3 ஆண்டுகள் முடிவெடுக்காமல் நிலுவையில் போட்டு வைப்பது என்பது தமிழ்நாடு ஆளுநரின் வழக்கமான வேலைகளாக மாறிவிட்டது , அத்துடன் சேர்த்து தற்போது பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களையும் தான் மட்டுமே நியமிப்பேன் என்று ஆளுநர் முடிவெடுத்திருக்கிறார்.

சட்டம் இயற்றும் இடம் சட்டமன்றம் தானே தவிர அது கவர்னர் மாளிகை அல்ல. பல தருணங்களில் இந்திய நீதிமன்றங்கள் கவர்னர் அது அதிகாரங்களை கேள்வி எழுப்பி, அதை சரி செய்து இருக்கிறது.” என தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது.

தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில், ``சட்டங்களை நன்கு அலசி ஆராய்ந்து தான் சட்டமன்றங்கள் மசோதாக்களை நிறைவேற்றுகின்றன. எந்த ஒரு அரசும் தங்களது மசோதா ஆளுநரால் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அனுப்பி வைக்க மாட்டார்கள். ஆனால் அவற்றின் மீது எந்த ஒரு விளக்கங்களையும் அளிக்காமல் நிறுத்தி வைப்பது ஏற்கத்தக்கது அல்ல.

தமிழக சட்டசபை

ஆளுநர் என்பவர் அமைச்சரவை குழுவின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர். அவர் ஒரு முடிவெடுக்கிறார் என்றால் அவர் அமைச்சரவை குழுவின் அறிவுரைகளின் படியே தான் எடுக்க முடியும். ஒரு மாநில அரசு அரசியல் சாசன பிரிவின் படி நடக்கவில்லை என்றால் அந்த அரசை கலைக்க பரிந்துரை செய்யும் அரசியல் சாசனத்தின் பிரிவு 356 இன் கீழ் மட்டும்தான் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும். அந்த ஒரு இடத்தில் மட்டும் தான் ஆளுநர் அமைச்சரவை குழுவின் அறிவுரையை பெற தேவையில்லை. மற்றபடி அனைத்து விஷயங்களுக்கும் ஆளுநர் அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர். அரசியல் சாசனத்தின் படி உயர்ந்த ஒரு பதவியில் இருக்கும் ஒரே ஒரு நபர் ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு எதிராக அந்த சட்டப்பேரவைக்கு உறுப்பினர்களை அனுப்பும் மக்களுக்கு எதிராக செயல்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

பின்னர் மத்திய அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி தனது வாதங்களை தொடர்ந்தார்.

``ஆளுநர் பதவி ஒரு மிகச் சிறியது என்பது போன்ற வாதங்களை தமிழ்நாடு அரசு தரப்பு முன் வைத்திருக்கிறார்கள். ஆனால் அரசியல் சாசனம் ஆளுநருக்கு அதிகாரங்களை வழங்கி இருக்கிறது” என பேசிய போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``ஆளுநரின் அதிகாரங்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அதே நேரத்தில் மசோதாக்களின் மீது முடிவெடுக்கும் அவரது செயல்பாடுகள் மீது நாங்கள் கேள்விகளை எழுப்புகிறோம்.

உச்சநீதிமன்றம்

`யாருடைய அறிவுரையின்படி ஆளுநர் இவ்வாறு செயல்பட்டார்?'

குறிப்பாக இரண்டு மசோதாக்களை முதல் தடவையே குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர், பத்து மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டு, அரசு மீண்டும் சமர்ப்பித்த பின்னர் ஒப்புதல் அளிக்க வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு அதை செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு ஏன் அனுப்பி வைத்தார்? இதற்கான விளக்கங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது. எந்த அடிப்படையில் யார் யாரிடம் ஆலோசனை செய்து யாருடைய அறிவுரையின்படி ஆளுநர் இவ்வாறு செயல்பட்டார்? இந்த விவரங்களை எங்களுக்கு தாக்கல் செய்யுங்கள்” என ஆளுநர் தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கி வழக்கின் விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

ஆளுநர் தரப்பின் பதில்கள் பல இடங்களில் திருப்தி அளிக்காமல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தனர். நாளைய தினம் ஆளுநர் தரும் விளக்கங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு திருப்தியாக இல்லை என்றால் நிச்சயமாக ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு நாடு முழுவதிலும் உள்ள ஆளுநர்களின் செயல்பாடுகள், குறிப்பாக மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் மைல்கல் தீர்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.!

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போல வீடியோ எடுத்த சம்பவத்தில் யூடியூபர் திவ்யா, அவரின் நண்பர் கார்த்திக், சித்ரா, ஆனந்த் ராமன் ஆகிய நான்கு பேர் கடந்... மேலும் பார்க்க

ஈமு கோழி மோசடி : ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.19 கோடி அபராதம் - கோவை நீதிமன்றம் அதிரடி

கொங்கு மண்டலத்தில் மக்களின் ஆசைகளை தூண்டு விட்டு பல்வேறு நூதன மோசடிகள் அரங்கேறின. அதில் ஈமு கோழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். சுமார் 15 ஆண்டுகளாகியும் ஈமு கோழி மோசடி வழக்கு விசாரணை இப்போதும் ... மேலும் பார்க்க

`இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது; அதை ஒரே வருடத்தில் கலைக்க முடியாது'- உயர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் திருமண விவாகரத்து வழக்கு ஒன்றில், இரண்டு இந்துக்களுக்கிடையிலான திருமணம் புனிதமானது என்றும், திருமணமான ஓர் ஆண்டுக்குள் அதைக் கலைக்க முடியாது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் குறிப்ப... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் இரட்டை ஆணவக் கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை; கோவை நீதிமன்றம் அதிரடி

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகன் கனகராஜ் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்ற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவாகரம்: `நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயல வேண்டாம்' - உயர் நீதிமன்றக் கிளை கருத்து

"இந்த வழக்கை பொறுத்தவரை ஏனோ தானோவென்று குற்றவாளிகளை முடிவு செய்யவில்லை, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து, ஆவணங்கள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே குற்றவாளிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது..." ... மேலும் பார்க்க

வேங்கைவயல்: ``அறிவியல் பூர்வமாக ஆய்வு... சாதிய காழ்ப்புணர்ச்சி காரணம் அல்ல'' -தமிழக அரசு விளக்கம்!

"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டது" என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செ... மேலும் பார்க்க