Salaar: "சலார் படத்தை அலட்சியமாக எடுக்கக் காரணம் இதான்..." - பிரசாந்த் நீல் ஓபன் டாக்
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ள பிரபாஸ் நடிப்பில் வெளியான படம் சலார் (Salaar: Part 1 – Ceasefire). பான் இந்திய அளவில் வெளியான இந்த படத்தில் பிரித்விராஜ், ஸ்ருதி ஹாசன் எனப் பலர் நடித்திருந்தனர். கே.ஜி.எஃப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தாலும், கே.ஜி.எஃப்-க்கு இருந்த வரவேற்பு சலாருக்குக் கிடைக்கவில்லை. இந்தப் படம் வெளியாகி ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, சலார் - 2 திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது.
இந்நிலையில், இயக்குநர் பிரசாந்த் நீல் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில், "சலார் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படமாக இருந்தாலும் அது எனக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. அந்தப் படத்தில் இன்னும் கடின உழைப்பை வழங்கியிருந்தால் மேலும் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கலாம். சலார்-1 படத்தால் நான் முழுமையான சந்தோஷத்தை அடையமுடியவில்லை. கே.ஜி.எஃப் 2 கொடுத்த வெற்றியால் இந்தப் படத்தைச் சரியாக எடுக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டேனோ என்ற சந்தேகம் அடிக்கடி ஏற்படுகிறது.
அதனால், சலார் 2 படத்தை எனது சிறந்த படங்களுள் ஒன்றாக மாற்ற முடிவு செய்து, அதற்கேற்ற கதைக்கருவையும் வசனங்களையும் உருவாக்கியிருக்கிறேன். நான் கற்பனை செய்வதை விடவும், ரசிகர்கள் கற்பனை செய்வதை விடவும் அதைப் பெரிதாக உருவாக்கப் போகிறேன். இது சந்தேகத்திற்கு இடமின்றி எனது சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கும்." என்றார்.
பாகுபலி 2க்குப் பிறகு, பிரபாஸ் சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் தொடர் தோல்வியைச் சந்தித்தார். இது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இதனால் பிரபாஸின் சினிமா பாகுபலியோடு முடிந்துவிட்டது எனப் பலரும் விமர்சனம் செய்தனர். அப்போதுதான் வெளியானது சலார் 1. அதன் வெற்றி பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் நிலைநிறுத்தியது. தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி மொழிகளிலும் சலார் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி உலகளவில் சுமார் 700 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...