Saudi Arabia: ஒரே ஆண்டில் 100 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை... காரணம் என்ன? - விரிவான தகவல்கள்!
2024ம் ஆண்டில் இதுவரை சௌதி அரேபியா 101 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இது அந்த நாட்டின் வரலாற்றிலேயே அதிகம். கடந்த 2022, 2023 ஆண்டுகளை ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகம்.
எந்த குற்றத்துக்காக அதிகம் மரண தண்டனை விதிக்கப்படுகின்றது?
மரண தண்டனை என்ற பெயரில் மக்களை கொன்று குவிப்பதாக மனித உரிமை அமைப்புகள் சௌதி அரேபியாவைக் கண்டித்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றங்களில் பெரும்பாலானவை போதைப் பொருள்கள் தொடர்பானவை. இந்த ஆண்டு மட்டும் போதைப்பொருள் வழக்குகளில் 92 பேர் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். அதில் 69 பேர் வெளிநாட்டவர்கள். 2024ம் ஆண்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 274 பேருக்கு அந்த நாடு மரண தண்டனை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை அமைப்புகள் சொல்வதென்ன?
மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய-சவுதி அமைப்பின் சட்ட இயக்குநர் டஹா அல்-ஹாஜ்ஜி, "இந்த விவகாரத்தில் வெளிநாட்டவர்களே அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர். பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் பலிகாடாக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் கைது செய்யப்படுவதிலிருந்து தூக்கில் இடப்படும் வரை பல்வேறு கொடுமைகளைச் சந்திக்கின்றனர்" எனப் பேசியுள்ளார்.
வெளிநாட்டவர்கள் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உபடுத்தப்படுகிறார்களா என்றக் கேள்வியும் எழுந்துள்ளது. நீதி மன்ற ஆவணங்களை அணுகுவது முதல் வெளிநாட்டவர்கள் வழக்காடுவதில் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
சௌதி அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள், போராடுபவர்கள் சித்தரிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனர். மரணத்தை விளைவிக்காத தீவிரவாத நடவடிக்கைகளுக்காக 29 பேர் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளனர்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் படி "கடுமையான குற்றங்கள்" பட்டியலில் வராத குற்றங்களுக்கும் சௌதியில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஜூலை 2023 இல், ஓய்வு பெற்ற 55 வயது ஆசிரியர் முகமது அல்-கம்டி தனது சமூக வலைத்தள நடவடிக்கைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார்.
எந்தெந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?
பாகிஸ்தானில் இருந்து 21 பேர், யேமனில் இருந்து 20 பேர், சிரியாவில் இருந்து 14 பேர், நைஜீரியாவில் இருந்து 10 பேர், எகிப்தில் இருந்து 9 பேர், ஜோர்டானிலிருந்து 8 பேர் மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து 7 பேர். இந்தியா, ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளிலிருந்து தலா முன்று பேர் மற்றும் இலங்கை, எரித்ரியா, பிலிப்பைன்ஸில் இருந்து தாலா ஒருவர்.
சர்வதேச மன்னிப்பு அமைப்பு (Amnesty International) உள்ளிட்ட அமைப்புகள் சௌதி அரேபியாவின் மரண தண்டனைகள் ஆராய்ந்து வருகின்றன.
சௌதியின் இருண்ட முகம்
"மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவர் அடுத்ததாக இருக்கலாம் என மிரண்டு போயிருக்கின்றனர்." என்கிறார் மரண தண்டனைக்கு எதிரான குழுவான ரிப்ரைவிலிருந்து ஜீட் பஸ்யோனி.
இப்போது மரண தண்டனை அளிக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் உயிர் பறிக்கப்படலாம் என்ற நிலையில் 18 வயதுக்குட்பட்ட 9 சிறுவர்கள் உள்ளனர். சௌதி சிறார்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடாது என்ற விதியையும் மீறிவருகிறது.
சீனா, ஈரான் நாடுகளைத் தொடர்ந்து அதிக அளவில் சிறைபிடிக்கப்பட்ட குற்றவாளிகளைத் தூக்கிலிடும் மூன்றாவது நாடாகத் திகழ்கிறது சௌதி.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், சௌதியில் கொலைக்குற்றம் மற்றும் அதிக உயிர்களுக்கு ஆபத்தானவர்கள் மட்டுமே மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவதாகக் கூறியிருந்தார்.
ஆனால் அவரது கூற்றுக்கு முற்றிலும் முரணான நடைமுறையேத் தொடர்கிறது. சௌதி அரேபியா அரசு மக்களை முடக்குவதற்கான ஆயுதமாக மரணதண்டனையை பயன்படுத்துகிறது என சர்வதேச சமூகம் அரச குடும்பத்தின் மீது விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
நியோம் நகரம் போன்ற கவர்ச்சிகரமான சர்வதேச திட்டங்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் மிகப் பெரிய முதலீடுகள், FIFA உலகக் கோப்பையை நடத்த ஏலம் கேட்பது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம் பெறுவதற்கான முயற்சி போன்ற நடவடிக்கைகளால் சர்வதேச சமூகத்தில் நல்லிடம் பெற முயன்றாலும் சௌதி அரேபியாவின் இருண்ட முகம் தொடர்ந்து அச்சமூட்டுவதாகவே இருந்துள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...