Seeman : சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விகள்; வீடியோ பதிவு - சமரசம் பேசியவர்களை விசாரிக்க முடிவு?
ஆஜரான சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் மீது நடிகை பாலியல் புகாரை கடந்த 2011-ம் ஆண்டு கொடுத்தார். அதன்பேரில் சீமான் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்பட 6 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு சீமான் தரப்பு நடிகையிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. அதனால் நடிகை, புகாரை வாபஸ் பெறுவதாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்தார்.
ஆனால் இந்த வழக்கை போலீஸார் சட்டப்படி நீதிமன்றத்தில் முடித்து வைக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு நடிகை தரப்பு சீமான் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்தது. அதன்பேரில் சீமானுக்கு சம்மன் அனுப்பி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சீமான், தன்னை கட்டாயப்படுத்தி ஏழு தடவை கருக்கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டினார். அதனால் நடிகைக்கு மருத்துவ பரிசோதனையும் நடந்தது. ஆனாலும் இந்த வழக்கில் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனிடையே பாலியல் வழக்கு எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரி சீமான் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது. அதனால் விசாரணை நடத்தி 12 வாரங்களுக்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனால் நடிகையிடமும் சீமானிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சீமானிடமும் நடிகையிடமும் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன என வளசரவாக்கம் போலீஸாரிடம் பேசினோம்
``பெங்களூருவில் வசித்து வரும் நடிகையிடம் சில தினங்களுக்கு முன்பு விசாரித்தபோது புதிய தகவல்களைத் தெரிவித்தார். அதோடு சில முக்கிய ஆதாரங்களையும் கொடுத்தார். குறிப்பாக சீமானே தன்னை மனைவி என்று கூறியதற்கான ஆதாரங்களும் கருக்கலைப்பு செய்யப்பட்டதற்கான மருத்துவ சான்றிதழ்கள், இந்த வழக்கில் சமரசம் பேசியவர்களின் ஆடியோக்களை கொடுத்திருக்கிறார். அதன்அடிப்படையில் சமரசம் பேசியவர்களிடமும் விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். சீமானிடம் 28-ம் தேதி இரவு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினோம். அப்போது 2023-ம் ஆண்டு நடந்த விசாரணையின்போது கேட்கப்பட்ட கேள்விகளோடு கூடுதலாக சில கேள்விகளையும் கேட்டோம். அதற்கெல்லாம் சீமான் விரிவாக பதிலளித்திருக்கிறார்.

நடிகை கூறிய பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு, மிரட்டல், நடிகையிடமிருந்து பணம் வாங்கியது போன்ற கேள்விகளை சீமானிடம் கேட்டோம். அதற்கு சிரித்தப்படியும் டென்ஷனாகவும் அவர் பதிலளித்தார். அவர் அளித்த விளக்கத்தை வீடியோவாக பதிவு செய்திருக்கிறோம். சீமான் அளித்திருக்கும் விளக்கத்தின்படி அடுத்து நடிகையிடம் விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். அதன்பிறகு தேவைப்பட்டால் சீமானிடம் விசாரணை நடத்தப்படும். இதையடுத்து சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அதன்அடிப்படையில் நீதிமன்றம் எடுக்கும் சட்ட நடவடிக்கையின்படி அடுத்தக்கட்டத்துக்கு இந்த வழக்கு செல்லும்" என்றனர்.
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் ரூபனிடம் கேட்டபோது, ``ஒரு வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விட்டால் நீதிமன்றத்தில்தான் அதை ரத்து செய்ய முடியும். 2011-ல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் புகார் கொடுத்தவர், வழக்கை வாபஸ் பெறுவதாக எழுதிக் கொடுத்தபிறகும் அதை முடித்து வைக்க வளசரவாக்கம் போலீஸார் நீதிமன்றத்தை அணுகவில்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கை அவ்வப்போது கையில் எடுத்து சீமானை அவமானப்படுத்துகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். அங்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வோம்" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
