Sex Workers: 'மகப்பேறு ஊதியம், ஓய்வூதியம், காப்பீடு...' - பெல்ஜியத்தின் புதிய சட்டம் சொல்வதென்ன?
பல்வேறு நாடுகளில் பாலியல் தொழில் குற்றமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலியல் தொழில் மூலம், மனிதக் கடத்தல், பாலியல் ரீதியில் பெண்கள் மீதான சுரண்டல், பாதுகாப்பின்மை, நோய் அச்சுறுத்தல் எனப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் பாலியல் தொழிலுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கி அந்த நாட்டு அரசு மசோதா நிறைவேற்றியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு பெல்ஜியம் பாலியல் தொழில் குற்றமில்லை என அறிவித்தது.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பெல்ஜியத்தில் சுமார் 30,000 பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கும் விதமாக பெல்ஜியம் நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அந்த மசோதா அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, பாலியல் தொழிலும், மற்ற தொழில்களைப் போலவே கருதப்படும்.
பாலியல் தொழிலாளர்களுக்கும் மகப்பேறு ஊதியம், விடுமுறை, விரும்பும் நேரத்தில் இந்தத் தொழிலிருந்து வெளியேறும் உரிமை, விருப்பமில்லாத வாடிக்கையாளரை மறுக்கும் உரிமை, உரிய ஆணுறைப் பாதுகாப்பு அம்சங்கள், மருத்துவக் காப்பீடு, அறையில் அபாய அலாரா எச்சரிக்கை ஏற்பாடு, ஓய்வூதியம் போன்றவை இந்தச் சட்டத்தின் மூலம் அமல்படுத்தப்படும். ஆனால், இந்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரே நேரத்தில் கிளம்பியிருக்கிறது.
இந்த சட்ட மசோதாவை வரவேற்றிருக்கும் பெல்ஜிய பாலியல் தொழிலாளர் சங்கம், ``இந்தச் சட்டம் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வரும். பாலியல் தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.
அதே நேரம், இந்த மசோதா 2023 இல் வெளியிடப்பட்டபோது, பெல்ஜியத்தின் ஃபிராங்கோஃபோன் பெண்கள் கவுன்சில், ``இளம் பெண்கள், சிறுமிகள் ஆகியோர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மனிதக் கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பேரழிவைத் தரும் சட்டம்" எனக் குறிப்பிட்டிருக்கிறது. உலகில் பாலியல் தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு கொண்டுவந்த முதல் நாடு பெல்ஜியம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...