வயநாடு மறுவாழ்வு பணிகள்: கேரள அரசின் நிலுவை தொகையில் ரூ.120 கோடி தள்ளுபடி: உயா்ந...
Shivarajkumar: `நான் நலமாக இருக்கிறேன்!'- புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு சிவராஜ்குமார் உருக்கம்
புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த சிவராஜ்குமார் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
கன்னட நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்தநிலையில் தன் மனைவியுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய சிவராஜ் குமாரின் மனைவி கீதா, " சிவராஜ்குமாருக்கு புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது அவர், புற்றுநோயில் இருந்து மீண்டிருக்கிறார். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் அவர் மீண்டிருக்கிறார்.
சிவராஜ்குமாரின் அனைத்து அறிக்கையும் பயப்படும் வகையில் இல்லை. அவர் புற்றுநோயிலிருந்து விடுபட்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்" என்று பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து பேசிய சிவராஜ்குமார், " நான் அமெரிக்காவிற்கு வரும் போது சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். ஆனால், எனக்கு மன தைரியத்தை என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த தைரியத்தால்தான் நான் நிம்மதியாக இருந்தேன்.
இந்த கடுமையான நேரத்தில் என் மனைவி கீதா, எனக்கு பக்கபலமாக இருந்தார். என் வாழ்நாள் முழுவதும் கீதா இல்லாமல் சிவாண்ணா இல்லை. அந்த அன்பு வேறு யாரிடம் இருந்தும் எனக்கு கிடைக்குமா என்று தெரியாது. அதே போல, மகள் நிவேதிதா, எப்போதும் என் அருகிலேயே இருந்து என்னை கவனித்துக்கொண்டாள். புற்றுநோயில் இருந்த முழுமையாக குணமடைய மருத்துவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தனர். இப்போது நான் நலமாக இருக்கிறேன்.
ஜனவரி இறுதி வாரத்தில் நான் இந்தியா திரும்பி விடுவேன், மார்ச் மாதத்திற்குப் பிறகு முழுமையாக பணிக்கு திரும்புவேன். நான் மீண்டும் வருகிறேன், முன்பு சிவண்ணா எப்படி இருந்தாரோ, அதே போல் நடனம், சண்டைக்காட்சிகள் மற்றும் தோற்றத்தில் இரண்டு மடங்கு பவர் இருக்கும். உங்கள் ஆசீர்வாதத்தால் நான் எப்போதும் ஆற்றல் நிறைந்தவனாக இருப்பேன்" என்று சிவராஜ் குமார் பேசிஉள்ளார்.