Shruti Hassan: ஷ்ருதி ஹாசனின் ஹாலிவுட் படம்; மும்பை திரைப்பட விழாவில் இன்று திரையிடல்!
`தி ஐ (The Eye)' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஸ்ருதி ஹாசன்.
இத்திரைப்படம் குறித்தான அறிவிப்பு முன்பே வெளியாகியிருந்தது. இன்று இத்திரைப்படம் மும்பை வென்ச் (WENCH) திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதனையொட்டி நேற்று இப்படத்தின் டிரைலர் ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். சைக்கலாஜிகல் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் டயானா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இதற்கு முன்பு இத்திரைப்படம் லண்டன் சுயாதீன திரைப்பட விழாவில் கடந்த 2023-ம் ஆண்டு திரையிடப்பட்டது.

இந்த ஹாலிவிட் படத்தின் ஸ்ருதி ஹாசனுடன் மார்க் ரெளலி என்ற ஸ்காட்டிஷ் நடிகர் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை டாப்னே ஸ்கமான் என்ற இயக்குநர் இயக்கியிருக்கிறார். இந்த ஹாலிவுட் திரைப்படம் இந்தாண்டில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனை தாண்டி தமிழ், தெலுங்கிலும் அடுத்தடுத்தப் படங்களை தனது லைன் அப்பில் வைத்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். தமிழில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் `கூலி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். அதே போல மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் `டிரெயின்' படத்திலும் நடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.