நெல் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் உத்தரவு: அமைச்சர்கள் நன்றி
Soda: செரிமானத்துக்கு உதவுமா; வயிறு உப்புசத்தை சரியாக்குமா சோடா?
பல வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் வாங்கிய கையோடு, காற்றடைத்த குளிர்பானங்களையும் வாங்கி வந்து ஃபிரிட்ஜில் வைப்பார்கள்.
மதியம் வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்தவுடன், குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை சாப்பிட்டது செரிமானம் ஆக அந்த குளிர்பானத்தைக் குடிப்பார்கள்.
சிலர், பலமான விருந்து சாப்பிட்டப் பிறகு வருகிற எதுக்களித்தல் மற்றும் வயிறு உப்புசம் சரியாக சோடா குடிப்பார்கள். சிறிது நேரத்தில் ஏப்பம் வந்தவுடன், செளகர்யமாக உணர்வார்கள்.
இது சரியா என சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் பாசுமணி அவர்களிடம் கேட்டோம்.

''இரைப்பையில் உணவு, தண்ணீர், காற்று மூன்றும் இருக்கும் என அனைவருக்குமே தெரியும். இவை, அதனதன் அளவில் இருந்தால் பிரச்னை இல்லை. அளவுக்கு மீறி பிரியாணியை ஒரு பிடி பிடித்தால், காற்று இருப்பதற்கு போதுமான இடமில்லாமல் போகும்.
இந்த நிலையில், அந்தக்காற்றானது இரைப்பைக்குள் ஒரு காற்றுக்குமிழாக மாறும். அந்தக் காற்றுக்குமிழ் வயிற்றுக்குள்ளும் நெஞ்சகத்திலும் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அந்தக் காற்றுக்குமிழால் ஏப்பமாக வெளியேறவும் முடியாமல், அபானவாயுவாக வெளியேறவும் முடியாமல் இருக்கும். இந்தக் காற்றானது உதரவிதானத்தை அழுத்தினால், மூச்சு விடுவதே சிரமமாக இருக்கும். சிலருக்கு இந்த நேரத்தில் இதயம் படபடக்க ஆரம்பித்துவிடும்.
இந்த நேரத்தில் காற்று நிரம்பிய குளிர்பானத்தையோ அல்லது சோடாவையோ குடித்தால், இரைப்பைக்குள் இருக்கிற காற்றுக்குமிழியின் வடிவம் மாறி, அது ஏப்பமாக வெளியேறி விடும்.

இதில் உண்மை என்னவென்றால், நீங்கள் அளவாக சாப்பிடாதது ஒரு தவறு. காற்று நிரம்பிய பானத்தைக் குடித்ததும் தேவையில்லாததுதான்.
அதிகமாக சாப்பிட்ட தவறை, காற்று நிரம்பிய பானத்தைக் குடித்தல் என்னும் இன்னொரு தவறை செய்து ஏப்பமாக காற்றை வெளியேற்றி சரி செய்துவிட்டீர்கள்.
சிலர், சோடா குடித்து ஏப்பம் விட்டால்தான் நன்கு செரிமானம் ஆவதாக நம்புவார்கள். அதையே தொடரவும் செய்வார்கள். இவர்களுக்கு ஏப்பம் விட்டால்தான் திருப்தியாக இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் ஒருகட்டத்தில், 'டாக்டர் எப்போ பார்த்தாலும் ஏப்பம் ஏப்பமா வருது; சங்கடமா இருக்கு' என்பார்கள்.
சோடா குடித்து ஏப்பத்தை செயற்கையாக வரவழைத்தது நீங்கள்தான். இப்போது அதற்கு உங்களைப் பிடித்துவிட்டது என்பேன் நகைச்சுவையாக. ஆனால், சோடா குடிக்கும் பழக்கத்தை நிறுத்தி இந்தப் பிரச்னைக்கு சிகிச்சையளித்தால் சரி செய்துவிடலாம்.
தவிர, காற்று நிரம்பிய குளிர்பானங்களில் இருக்கிற சர்க்கரை உடலுக்கு நல்லதும் அல்ல. தேவைப்பட்டால் ரசம் குடிக்கலாம்.
உங்கள் வீட்டில் செரிமானமாவதற்கு சீரகத்தண்ணீர், ஓமத்தண்ணீர் குடிக்கிற வழக்கம் இருந்தால், அவற்றையும் அருந்தலாம்.
மற்றபடி, செரிமானம் ஆவதற்கும், வயிறு உப்புசத்தை சரிசெய்வதற்கும் சோடா குடித்தல் என்பது வேண்டாத பழக்கம்'' என்கிறார் டாக்டர் பாசுமணி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...