செய்திகள் :

'StartUp' சாகசம் 11 : சூரிய ஒளி சக்தியில் மலைவாழ் மக்கள் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சும் `தழழ்’

post image

இந்தியாவில் காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்வது நகரங்களோ அல்லது பெரிய தொழில் நகரங்களோ அல்ல, மாறாக மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் குக்கிராமங்களாகும். இவற்றில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத பல பழங்குடி கிராமங்கள் உள்ளன. மலைகளில் இயற்கை வளங்களை சார்ந்தே வாழ்ந்து வரும் இவர்கள், நகரங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் காண முடியாத நிலையில், உணவுப் பாதுகாப்பு, நீர் வசதி, மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக கூட போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மலை

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள் தொகையில்  சுமார் 10% பேர் மலைவாழ் மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. இப்போது சுமார் 14 கோடி பேர் என்று வைத்துக்கொண்டாலும் மலைகளிலும், அடர்ந்த வனங்களிலும் கிடைக்கும் உணவுப்பொருட்களைக்கொண்டே அவர்கள் வாழ்கிறார்கள். நகரத்தில் கிடைக்கும் எல்லா பொருட்களும் பலர் கண்ணாலகூட பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் அரசுகளின் சில முயற்சிகளால் இப்போது ஸ்மார்ட் போன் தொலைகாட்சி என அவர்கள் பயன்படுத்தி ஆரம்பித்திருக்கிறார்கள்.  அடிப்படை அத்தியாவசியமே அவர்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை.

இவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தழல் நிறுவனம் சூரிய ஆற்றல் மூலமாக நீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வேணுகோபால் நடத்தி வருகிறார். இனி வேணுகோபால்...

``உங்களைப்பற்றிய அறிமுகம் ஒன்றை தாருங்களேன்?”

``நான் வேணுகோபால், Oscar Solar Pump நிறுவனர். கடந்த 15 ஆண்டுகளாக, சூரிய ஆற்றல் மூலமான நவீன தொழில்நுட்பங்களை கொண்டு கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

எனது பயணத்தின் துவக்கம், என் குடும்பத்தின் பொருளாதார நிலைமையும், அதை மாற்ற வேண்டும் என்ற உறுதியும். நான் ITI Electrical படித்திருந்தாலும், அரசாங்க வேலை கிடைக்கப்பெற அப்பரண்டீஸ் முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் குடும்ப நிலைமையின் காரணமாக, நான் வேலைக்கே சென்று விட்டேன்.

அடுத்த 10 ஆண்டுகளில், திருப்பூர் கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்களில் பேனல் போர்டு துறையில் எனது அனுபவத்தை மேம்படுத்தினேன். அதன் பிறகு, பசுமை ஆற்றல் வளர்ச்சியின் முக்கியத்துவம் புரிந்த பிறகு, நான் இந்த துறைக்கு வந்தேன். வந்து ஆஸ்கார் சோலார் பம்ப் நிறுவனத்தினை துவங்கி சூரிய ஒளி வழியே நீர் பாய்ச்சும் சேவையை வழங்கிவந்தேன்.

ஒரளவு நன்றாக சென்றுக்கொண்டிருந்த சமயத்தில் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு. பல இழப்புகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்கார் சோலார் பம்பு நிறுவனத்தை தொடங்கினேன். அப்போது மலை வாழ் மக்களுக்கு என பிரத்யோகமாக நிறைய ஆய்வுகளுடன் கூடிய செயல்பாடுகள் தேவையாக இருந்தது. அதற்காக தழழ் அமைப்பை ஆரம்பித்தேன்”

``மலை வாழ் மக்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழியே மாவ அரைக்கும் இயந்திரம் எப்படி இந்த சேவை தரலாம்  என நினைத்தீர்கள்? இதை உருவாக்க என்னவெல்லாம் சிக்கல்கள் சந்தித்தீர்கள் ? எப்படி சரி செய்தீர்கள்?”

``ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ளது கத்தரிமலை. இங்கு, பழங்குடியின மக்கள், 75 குடும்பங்களாக வசிக்கின்றனர். இங்கு செல்ல இணைப்பு சாலை வசதி இல்லை. மின்சார வசதி பெறவில்லை. மலை கிராமம் என்பதால் பாசன வசதியும் இல்லை. வானம் பார்த்த பூமியில் மானாவாரியாக ராகி, கம்பு, கேழ்வரகு, தினை போன்ற சிறு தானியங்களை பயிரிடுவர். அதுதான், பழங்குடியின மக்களின் பிரதான உணவு. ஒரு குடும்பத்துக்கு சராசரியாக ஆண்டுக்கு 75 கிலோவுக்கும் அதிகமாக சிறுதானிய மாவு தேவைப்பட்டது. வருடத்திற்கு, ஐந்து டன் சிறுதானிய மாவு அந்த கிராம தேவையை நிறைவேற்றும். விளையும் தானியங்களை சுத்தமாக்கி, உலர வைத்து அரைக்க வேண்டி இருந்ததது. மின்வசதி இல்லாததால், அரவை இயந்திரம் நிறுவ முடியவில்லை.

இதனால், பண்டை கால தொழில்நுட்பத்தில் பழமையான திரிகல்லில் மாவு அரைத்து பயன்படுத்தி வந்தனர். இதில் வேலைப் பளு அதிகம். இதனால் பல குடும்பங்கள், விளைந்த தானியத்தை விற்று, அரசு வழங்கிய ரேஷன் அரிசி, மளிகைப் பொருட்களை பயன்படுத்தி வந்தனர். ஒரே வகை உணவு பயன்பாட்டால், சத்து குறைபாடு ஏற்பட்டது. அடிக்கடி நோய்வாய்ப் பட்டனர் கிராம மக்கள். மாற்று உணவாக கிழங்கு மட்டுமே கிடைத்து வந்தது.

நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், மலையில் இருந்து இறங்கி நகரங்களில் தானியங்களை அரைத்து எடுத்து சென்றனர். அடர்ந்த காட்டு வழியாக இதற்கு, எட்டு கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டியிருந்தது. இதற்காக, 3500 அடி உயரத்திலிருந்து இறங்கி வர வேண்டியிருந்தது. மிகவும் ஆபத்தான பாதையில் தனியாக பயணிக்க முடியது. குழுவாக மட்டுமே பயணிக்க முடியும். மழை காலங்களில் பயணம் செய்வது மிகவும் சிரமம்.

மலைக் கிராமங்களில் விளையும் சிறுதானியங்களை அங்கேயே மதிப்பு கூட்டினால் மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை உணர்ந்து அப்போதைய  ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனை அணுகி, ஒரு திட்ட வரைவை அளித்தேன். அந்த  திட்டத்துக்கு கனரா வங்கி நிதி உதவி செய்ய முன்வந்தது.

புதிய முறையில் சூரிய ஒளியில் இயங்கும் சிறுதானிய மாவு அரவை இயந்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. மின்சார வசதி இல்லாத மலைகிராமத்தில், 2 எச்பி புளுவரேசர் அரவை இயந்திரத்தை உருவாக்கும் எங்களின் முயற்சி வெற்றி பெற்றது. 

இந்த இயந்திரம் இரண்டு மாதம் சோதனையாக ஆய்வு செய்யப்பட்டது. பின், மலைகிராமத்துக்கு எடுத்துச் சென்று பொருத்தி சோதனை முறையில் இயக்கப்பட்டது.

தற்போது, சூரிய ஒளியில் இயங்கும் மாவு அரவை இயந்திரம் அந்த கிராமத்தில் சிறப்பாக இயங்குகிறது. மின்வசதியில்லாத அந்த கிராமத்தில் சூரிய ஒளியில் இயங்கும் இயந்திரம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் செல்ல சரியான பாதை வசதியற்றது அந்த கிராமம்.  இங்கு சூழலுக்கு உகந்த மாற்று எரிசக்தியில் அரவை இயந்திரம் இயங்குவதால் மின் செலவு மிச்சப்படுகிறது.

இதனால், கார்பன் மாசுபாடும் குறைகிறது‌. சூரிய ஒளியில் இயங்கும் மாவு அரவை இயந்திரத்தால் கேழ்வரகு, கம்பு, ராகி போன்ற சிறு தானியங்களை கிராமத்திலே மதிப்பு கூட்ட முடிகிறது. இதன் வழியாக, பழங்குடியின மக்கள் பொருளாதார ரீதியாக மேம்பட வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

கத்தரிமலை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண் ரோஜாதான் இந்த அரவை ஆலை நிர்வாகத்தை கவனித்து கொள்கிறார். ஒரு மண்குடிசையில் அமைந்துள்ளது அரவை ஆலை. கிராமத்தவர் அதை வாழ்வாதாரத் துணையாகப் பயன்படுத்துகின்றனர்.

சூரிய ஒளியில் இயங்கும் இந்த சிறிய அரவை இயந்திரம், கத்தரிமலை பழங்குடியின கிராமத்தில் நிகழ்த்தியுள்ள மாறுதல் பெரிது , இந்த இயந்திரத்தில் தானியம் அரைத்துக்கொடுக்க, சிறிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதி அங்கே அரைத்துத்தரும் ரோஜாவுக்கு உழைப்பூதியமாக செல்கிறது. ஒரு சிறிய இயந்திரம் வசதி வாய்ப்பற்ற கத்தரிமலை கிராமத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழ்நாட்டின் பதின்மூன்று மலை கிராமங்களில், ஐயாயிரம் குடும்பங்கள் எட்டு டன் பாரம்பரிய ராகியை உள்ளூர் உணவுகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இது பழங்குடியின மக்களுக்கு உணவு பாதுகாப்பு அளிப்பதோடு, பாரம்பரிய உணவுகளை நிலைநிறுத்தவும் பெரும் ஆதரவாக இருக்கிறது.

இது போல, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் மின்சார வசதி இல்லாத பகுதிகளில், சிறுதானிய உணவுகளை அரைத்து பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசின் பழங்குடி நலத்துறை மூலமாக, சுமார் பதின்மூன்று மலை கிராமங்களில் சூரிய ஆற்றல் அறவை இயந்திர மாதிரி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


மிக முக்கியமாக, சிறுதானிய அறுவடை காலங்களில் ஏற்படக்கூடிய சிரமங்களை குறைக்க, ராகி கல், குருணை நீக்குதல், சுத்தம் செய்தல், பாலிசெய்தல், மீண்டும் அரவை செய்ய ஆகிய செயல்பாடுகளை ஒரே இடத்தில் மேற்கொண்டு, பழங்குடியின மக்களுக்கு பயன்பெறும் வகையில், நகரும் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் சிறுதானிய மதிப்பு கூட்டும் மையம், 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த முயற்சிகள், மலைவாழ் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாரம்பரிய சிறுதானிய உணவுகளை மீட்டெடுக்கவும், மகளிர் தொழில்முனைவோர் வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக அமைந்துள்ளன.


பழங்குடி மலை கிராமங்களில் மற்றும் சம வெளியில் விவசாயிகளின் அடிப்படையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண தழல் என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு மானியத்துடன் கூடிய நிதி சூழல்கள் உருவாக்க முயல்கிறோம். அதற்கான அரசாங்கத்தின் திட்ட வரைவுகளை வகுத்து வருகிறோம்.”

``இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க சந்தித்த சிக்கல்கள் & தீர்வுகள்?”

``மின்சாரம் இல்லாத கிராமங்களில் இயந்திரம் செயல்படுத்துவது எப்படி என்பதும், அதற்கான சூரிய ஆற்றலை பயன்படுத்தி சிறு தானிய அரவை இயந்திரத்தை செயல்படுத்துவது எப்படி என்பதற்கு நிறைய ஆராய்ச்சிகள் செய்யவேண்டியதிருந்தது. இது எல்லாவற்றையும் விட பழங்குடி மக்களுக்கு புதிய இயந்திரத்தை பயன்படுத்தும் பழக்கம் இல்லை, அவர்கள் சிலர் முதலில் அரவை இயந்திரத்தை ஏற்கவே மறுத்தனர், முதலில் பயிற்சி முகாம்கள் நடத்தி, பழங்குடி மக்களைப் பயன்படுத்தச் செய்தோம்.நாங்கள் தொடர்ந்து விளக்கங்கள் கொடுத்து, இது அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதை புரிய வைத்தோம்.

``நீங்கள் மலைவாழ் மக்களுக்கு உருவாக்கிக்கொடுத்த இவைகளின் வழியே அவர்கள் வாழ்வில் நடந்த மாற்றம் என்ன?”

``மலைவாழ் மக்களுக்கு எங்கள் சேவை மிகவும் உதவியாக இருந்ததால் அவர்கள் ராகி பயிரினை மீ்ண்டும் பயிரிட ஆரம்பித்தார்கள். பின்னர் அதை இந்த மாவு அரைக்கும் இயந்திரத்தில் அரைத்துக்கொண்டர்.

மீண்டும் அவர்களின் பாரம்பரிய உணவு முறையை பின்பற்ற ஆரம்பித்தனர், இதனால் உணவுக்காக திரும்ப திரும்ப பயணிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது, உணவு பாதுகாப்பும் அவர்களுக்கு இதனால் கிடைத்தது.

பெண்கள் தொழில்முனைவோராக வளர்ந்து வருகிறார்கள். மலைப்பகுதியில் சூரிய ஆற்றல் மூலம் இயங்குவதால், மாசு இல்லாத தொழில்நுட்பம்அவர்களின் வளர்ச்சியைத உறுதி செய்கிறது.”

``தழல் அமைப்பை உருவாக்கியதன் நோக்கம் & சமூக மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?”

``தழல் நிறுவனம் இதுவரை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தியுள்ள  300 கிலோவாட் சூரிய ஆற்றல் வழியே, வருடத்திற்கு 7,30,000 கிலோவாட் மின்சாரம் உருவாகிறது. இதன் மூலம் 620.5 டன் கார்பன் வெளிப்பாடு குறைக்கப்பட்டுள்ளது, இது 28,250 மரங்கள் நடுவதற்குச் சமமானது.

விவசாய உற்பத்திகளில் பயன்படுத்த முடியாமல் போகும் கழிவுகளை குறைக்க, சூரிய உலர்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, இதுவரை 5 டன் விவசாயக் கழிவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 20 சூரிய ஆற்றல் நீர்ப்பம்புகள் நிறுவப்பட்டு, தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.


தழல் (Thalazal) என்பது சூரிய ஆற்றல் மூலம் விவசாயத்திற்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் உதவியாக உருவாக்கப்பட்ட பிராண்டாகும்.

எங்கள் நோக்கம்:

மலைவாழ் மக்களுக்கு சூரிய ஆற்றல் கொண்டு அவர்களுக்குத் தேவையான வசதிகளை உருவாக்கி அவர்களையும் தொழில் முனைவோராக மாற்றி  அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது.

மலைவாழ் மக்களுக்கு  உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது. அங்கேயுள்ள பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவைதான் எங்கள் நோக்கம்”

`தழழின் எதிர்கால திட்டங்கள்...’

``இன்னும் அதிக மலைராமங்களில் இந்த தொழில்நுட்பங்களை கொண்டு செல்வது, சமூகத் தொழில்முனைவோர்களை உருவாக்கி, கிராமப்புற மக்களுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்குவது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த, சூரிய ஆற்றல் மூலம் புதிய தீர்வுகளை உருவாக்குவது. தன்சானியா உள்ளிட்ட பிற நாடுகளில் ‘தழல்’ நிறுவனத்தால் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குவது என்பதை உருவாக்கிவருகின்றோம். நாங்கள் மலைவாழ் மக்களுக்கு மட்டும் சேவை அளிக்கவில்லை, அளவு குறைவிலான சூரிய உலர்த்தியை உருவாக்கியுள்ளோம். இதன் வழியே வீட்டிலிருந்து மசாலா, பொடி வகைகள் உருவாக்குபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். |

``இதுவரை முதலீடு  வாங்கியிருக்கின்றீர்களா? அவைகளின் விபரம்?”

``தமிழ்நாடு அரசு ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் நிதி பெற்றுள்ளோம்.

Selco Foundation மூலம் நிதி பெற்று, 50 சூரிய உலரிப்பான் மற்றும் 10 சிறுதானிய அரவை இயந்திரங்களை வழங்க உள்ளோம்.

StartupTN & ஆஸ்கார் அமைப்பும் இணைந்து ஒப்பந்தம் ஒன்றினை மேற்ககொண்டு CSR திட்டம் மூலம் ஈரோடு கடம்பூர் மலை கிராமங்களில் சிறுதானிய மதிப்பு கூட்டும் மையம் & மேலும் 4 இடங்களில் அரவை இயந்திரம் நிறுவும் ஒப்பந்தம் கையொப்பம் ஆகியுள்ளது. மேலும் முதலீட்டுக்கு முயற்சி செய்து வருகின்றோம்”

இயற்கையொடு இணைந்து வாழும் மக்களுக்கு இயற்கையின் வழியே வழியை உருவாக்கிக் கொடுத்துள்ளனர் தழழ் அமைப்பினர், இதுபோன்ற பல தொழில்நுட்பங்கள் மலை வாழ் மக்களுக்கு ஏற்றவாறு செயல்படுத்தவேண்டும் என்பதே அனைவரின் ஆவலும் விருப்பமும்!

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

'StartUp' சாகசம் 10 : சார்ஜிங் சிக்கலை தீர்க்க சேலத்திலிருந்து ஒரு நிறுவனம் - இது `TamiraBot’ ஸ்டோரி

தாமிரா போட்'StartUp' சாகசம் 10இந்திய மின்சார வாகன சார்ஜிங் சந்தை 2023-ல் USD 588.6 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டது. மேலும் 2024 முதல் 2030 வரை 39.1% CAGR வளர்ச்சியுடன் 2030-ல் USD 5695.6 மில்லியனை எ... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 9 : `24,000 வாடிக்கையாளர்கள்; பக்கத்து வீட்டு பால்காரன்' - `உழவர்பூமி’ வளர்ந்த கதை

`உழவர்பூமி’'StartUp' சாகசம் 9இந்தியாவில் பால் என்பது வெறும் உணவுப் பொருள் மட்டுமல்ல, அது ஒரு விவசாயிகளின் வாழ்வாதாரம்கூட, அது மட்டுமல்ல அது ஒரு பொருளாதார சக்தி. 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 8 : `ஸ்டார்ட்அப்களுக்கு உதவும் ஸ்டார்ட்நெட்... சிறு நகரங்களில் இதன் தேவை என்ன?!’

ஸ்டார்ட்நெட்'StartUp' சாகசம் 8இந்தியா உலகின் 3வது பெரிய புதிய தொழில்முனைவு கொண்டுள்ள நாடாக விளங்கிவருகிறது. இதனால் கடந்த 6 ஆண்டுகளில் 7.68 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதை நான் கவனத்தில்... மேலும் பார்க்க

'StartUp' சாகசம் 7 : `கசப்பை எப்படி விக்கிறாங்கனு தேடினேன்’ - அர்ச்சனா பகிரும் `Thy Chocolates’ கதை

Thy Chocolates'StartUp' சாகசம் 7உலக அளவில் கொக்கோ (கோகோ), சாக்லெட் செய்ய, சுவை மிகுந்த பானங்கள் மற்றும் மருத்துவ பொருட்களில் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொக்கோ (கோகோ) வின் தேவை ஒவ்வொரு வர... மேலும் பார்க்க