`StartUp' சாகசம் 25 : கோடியில் பயனர்கள்; 300+ பணியாளர்கள் - திருச்செங்கோடு `Nithra Apps’ வெற்றி கதை
ஆண்டிராய்டு செல்பேசி செயலிகள் பரவலான பிறகு, தமிழ் மொழியில் செயலி உருவாக்குவது மிகத் தேவையான ஒன்றாக இருந்தது. ஏறக்குறைய 2012 - 2013 ஆம் ஆண்டு வாக்கில், தமிழில் செல்பேசி செயலிகளை உருவாக்குவோர் மிகக் குறைவு. அன்றிலிருந்து இன்றுவரை, சுமார் 12 ஆண்டுகளாகச் தமிழில் செல் பேசி செயலிகள் உருவாக்கத்தில் ஆரம்பித்து இன்று பல மொழிகளில் செல்பேசி செயலிகளை உருவாக்கி பணியாற்றிவரும் ஒரு நிறுவனம் உள்ளது. அதுவும் தமிழ்நாட்டின் ஒரு சிறிய நகரிலிருந்து செயல்பட்டு, தமிழ்நாட்டில் வாழும் எட்டு பேரில் ஒருவர் பயன்படுத்தும் அளவுக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் எண்ணிமப் புரட்சிக்குச் சிறிய நகரிலிருந்தே பங்களிக்கும் அந்த நிறுவனத்தைப் பற்றித்தான் இன்று நாம் காணப்போகிறோம்.

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பெருநகரங்களில் மட்டுமே மையம் கொண்டிருக்கிறது என்ற பொதுவான எண்ணம் நம்மிடையே நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டுத் தேவைகளை மட்டுமே சார்ந்துள்ளது போன்ற ஒரு மாயையும் உள்ளது. ஆனால், யதார்த்தம் மாறி வருகிறது.
இந்தியாவின் எண்ணிமப் புரட்சி இப்போது பெருநகரங்களைத் தாண்டி, இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களை (Tier 2, Tier 3, Tier 4 cities) நோக்கிய புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில், சிறிய நகரங்கள் மென்பொருள் நிறுவனங்களுக்குச் சிறந்ததொரு களமாக உருவெடுத்து, உள்ளூர் பொருளாதாரத்திலும் சூழலமைப்பிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றன.
முன்பு பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் மட்டுமே குடிகொண்டிருந்த தகவல் தொழில்நுட்பத் துறை, இப்போது சிறிய நகரங்களுக்கும் பரவி, சமச்சீரான வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம், யாரோ ஒருவர் துணிந்து ஒரு சிறிய நகரத்தில் நிறுவனத்தைத் தொடங்கி, எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் கலங்காமல் தொடர்ந்து நடத்தி, மற்றவர்களுக்கும் நம்பிக்கை அளித்திருப்பதுதான்.
அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான முயற்சிதான், திருச்செங்கோட்டிலிருந்து வெறும் ஒரே ஒரு பணியாளருடன் தொடங்கி, இன்று 250 - 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து, தமிழ்நாட்டிலிருந்து பிற மொழிகளுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ள ஒரு நிறுவனத்தின் வெற்றி.
இது நிச்சயமாக ஒரு சாதாரண வெற்றி அல்ல, இது ஒரு உண்மையான சாகசம்!
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து இயங்கிவரும் நித்ரா ஆப்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திரு. கோகுல்நாதன் பொன்னுசாமி அவர்களின் இந்தச் சாகசப் பயணத்தைத்தான் நாம் இன்று 'ஸ்டார்ட் அப் சாகசம்' பகுதியில் விரிவாகப் படிக்கப்போகிறோம்.

``உங்கள் தொழில் முனைவு பயணத்தைப் பற்றி சொல்லுங்கள். குறிப்பாக, ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து, இவ்வளவு பெரிய ஒரு மொபைல் ஆப் டெவலப்மென்ட் நிறுவனத்தை உருவாக்கியது எப்படி? எது உங்களை மொபைல் ஆப் டெவலப்மெண்ட் நிறுவனத்தை உருவாக்க உந்தித்தள்ளியது?”
``நான் சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றவன். எனக்கு இயல்பாகவே தொழில்நுட்பம் மீது ஆர்வம் அதிகம். அதனால் எங்களது திருச்செங்கோடு பாரத் பாலிடெக்னிக் கல்லூரியில் தாளாளராக இருந்தபோது 2002 ஆம் ஆண்டு முதலே கல்லூரியில் மாணவர்களுக்கு இணையதள வசதி ஏற்படுத்தி கொடுத்திருந்தேன். இரவு 12 மணி வரையும் எங்களது கணினி ஆய்வகங்களை மாணவர்களுக்காக திறந்து வைத்திருந்தேன்.
2008-ம் ஆண்டு முதல் அனைத்து வகுப்பறைகளிலும் ப்ரொஜெக்டர் வசதி செய்து கொடுத்திருந்தேன். முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு புதிய ஆண்ட்ராய்டு மொபைல் போன் வாங்கியிருந்தேன். அதில் நமக்கு தேவையான செயலிகளை Google Play Store வழியாக Download செய்யும் வசதி இருந்தது என்னை ஈர்த்தது. அப்போதே எங்கள் மாணவர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கவும் திட்டமிட்டிருந்தேன். அந்த சமயத்தில் தற்போது எங்களது கம்பெனியின் COO ஆக உள்ள திரு.மோகன்ராஜ் அவர்கள் Computer Department-ல் Lecturer வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த Resume-ல் அவர் 5 ஆண்டுகள் Software துறையில் பணியாற்றிய அனுபவத்தை குறிப்பிட்டிருந்தார். நான் உடனே அவரை நேர்காணல் செய்து ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கம் பற்றி கேட்டேன்.
ஆனால் அவர் அதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். உங்களுக்கு ஆண்ட்ராய்டு பற்றி தெரியாவிட்டால் பரவாயில்லை ஆனால் கற்று கொண்டு ஒரு Calculator செயலியை உருவாக்குமாறு கேட்டு கொண்டேன். மூன்றே நாட்களில் கற்று கொண்டு அந்த செயலியை உருவாக்கினார். இதுதான் நித்ரா என்ற பெரிய நிறுவனம் உருவாவதற்கான ஆரம்ப விதை.”
``நித்ரா ஆப்ஸின் ஆரம்ப கட்டம் கல்விக்கான தீர்வாக இருந்தது. இப்போது பலதரப்பட்ட ஆப்களை வெளியிடுகிறீர்கள். இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?”
``ஆங்கில தமிழ் அகராதிதான் எங்களுடைய முதல் செயலி. 2006-ஆம் ஆண்டு முதலே கல்லூரியை நிர்வகிக்கும் வசதியை எளிதாக்க IMPRES என்ற Enterprise Resource Planning Software-ஐ பயன்படுத்தி வந்தோம். அதனால் மாணவர்களின் தரவுகள் அனைத்தும் Database-ல் இருந்தது. அதை Backend-ஆக வைத்து எங்களது கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் செயலிகளை உருவாக்கி கொண்டிருந்தோம். அப்போது இதை பார்த்த என்னுடைய நண்பர் செல்வகுமார், `நாம் ஏன் இதை மற்ற கல்லூரிகளுக்கும் எடுத்து செல்ல கூடாது?’ என்று என்னிடம் கேட்டார்.
அந்த சமயத்தில் என்னுடைய மைத்துனர் திரு கோபிநாத் MBA முடித்திருந்தார். மூவரும் சேர்ந்து `Nithra Edu Solutions India Private Limited’ என்ற பெயரில் நிறுவனத்தை ஆரம்பித்தோம். அந்த சமயத்தில் பத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் திருச்செங்கோடு அலுவகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். மற்ற கல்லூரிகளுக்கு இந்த செயலியை கொண்டு செல்வதற்காக கோவையில் ஒரு அலுவலகத்தை ஆரம்பித்தோம். ஆனால் மற்ற கல்லூரிகளுக்கு இதை எடுத்து செல்லும் எங்களது எண்ணம் ஈடேறவில்லை. அதற்கு காரணம் `Market is not ready and the product is too early to the market’ என்று பின்னர் புரிந்தது.

அதனால் ஒரு ஆண்டிற்கு பிறகு கோவையில் உள்ள அலுவலகத்தை மூடிவிட்டோம். எனது மைத்துனர் பெங்களுருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார். எனது நண்பர் அவர் பார்த்து கொண்டிருந்த தொழிலை நடத்த சென்று விட்டார். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் செயலிகளில் இருந்து வருமானம் பெறுவதற்கு Google AdMob என்ற நிறுவனத்தின் வழியாக விளம்பரம் வெளியிடும் வகையில் நாங்கள் எங்கள் செயலியை வடிவமைத்திருந்தோம். அதனால் ஓரளவுக்கு எங்களால் தாக்கு பிடிக்க முடிந்தது. 2015ம் ஆண்டு இறுதியில் தான் Break Even நிலையை அடைந்தோம். இதனால் நிறைய வெவ்வேறு வகையான செயலியை வெளியிடுவதன் மூலம் விளம்பரங்கள் வழியாக எங்களது வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்தோம்.”
``ஆண்ட்ராய்டு டெவலப்மென்ட் பயிற்சி அளித்து மாணவர்களை ஆப் உருவாக்கத்தில் ஈடுபடுத்துவது ஒரு புதுமையான அணுகுமுறையாக உள்ளது. இதன் பின்னணி என்ன?, இதிலிருந்து நித்ரா மற்றும் மாணவர்கள் என்ன பயன் பெறுகிறார்கள்?”
``ஆரம்ப காலகட்டங்களில் எங்களது கல்லூரி மாணவர்களையே ஆண்ட்ராய்டு செயலிகளை உருவாக்குவதற்கு பயிற்சி கொடுத்து அவர்களில் சிலரை நமது கம்பெனியில் வேலையில் அமர்த்தினோம். பிறகு நிறைய பேருக்கு ஆண்ட்ராய்டு ஆப் டெவலப்மென்ட் ட்ரைனிங் கொடுத்துக் கொண்டிருந்தோம். நாங்கள் வெளியில் இருந்து ஆட்களை எடுக்காமல் எங்களது கல்லூரியில் இருந்து எடுத்ததால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க முடிந்தது. தற்பொழுது Internship என்று கூறப்படும் முறையை நாங்கள் 2013-ஆம் ஆண்டே ஆரம்பித்தோம். அது எங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. எங்களது நிறுவனம் 2015 டிசம்பர் வரை கல்லூரியிலேயே இயங்கி வந்தது. பின்னர் 2016-ல் திருச்செங்கோடு நகருக்கு அதை மாற்றினோம்.”

``ஒரு ஊழியருடன் தொடங்கிய நித்ரா நிறுவனம், இன்று 350 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. இந்த வளர்ச்சிக்கு நீங்கள் எப்படி திட்டமிட்டீர்கள்? உங்கள் தலைமைத்துவ பாணியில் என்ன வித்தியாசத்தை கொண்டுள்ளீர்கள்?”
``ஆரம்ப காலகட்டங்கள் பெரிதாக எதுவும் திட்டமிடவில்லை. 2014-ல் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கான செயலியை வெளியிட்டோம். பின்னர் 2015-ஆம் ஆண்டு நித்ரா தமிழ் காலண்டர் செயலியை வெளியிட்ட பிறகு அதற்கு மக்களிடையே உண்டான வரவேற்பை தொடர்ந்து இதை நாம் பெரிதாக எடுத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்தது. அதன் பிறகு மக்களுக்கு பயன்படக்கூடிய நிறைய செயலிகளை வெளியிட ஆரம்பித்தோம். 2018 வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே செயலிகளை வெளியிட்டு வந்தோம். பிறகு இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிட ஆரம்பித்தோம்.
2015-ஆம் ஆண்டு மொபைல் செயலிகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டாகும். அந்த ஆண்டுதான் ஜியோ தனது 4ஜி சேவையை மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியது. அதற்குப் பிறகு ஸ்மார்ட் போன் மார்க்கெட் வேகமாக உயர ஆரம்பித்தது. மக்களும் அதிகமாக ஸ்மார்ட்போனை வாங்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு செயலிக்கும் அதை உருவாக்குவதற்கும், அதற்கு உண்டான Content-ஐ தயார் செய்வதற்கும் பிறகு டெலி மார்க்கெட்டிங் என ஆட்கள் தேவை அதிகமாகிக் கொண்டே சென்றது.
இப்படியாக கம்பெனியின் ஊழியர்கள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்று 350 பேர் என்ற அளவில் உள்ளது. திருச்செங்கோட்டில் நான்கு இடங்களில் எங்களது அலுவலகம் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஆந்திராவில் குண்டூர் நகரத்திலும் எங்களது அலுவலகம் உள்ளது. மற்ற மொழிகளுக்கு அந்தந்த மாநிலத்திலேயே ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிகிறார்கள்.
என்னுடைய தலைமைத்துவ பாணி என்னவென்றால் ஊழியர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பது. அதோடு மட்டுமல்லாமல் அவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வது. மேலும் மாதந்தோறும் அனைத்து ஊழியர்களும் ஒரே இடத்தில் கூடி சந்தோசமாக ஆடிப்பாடி, விளையாடி மகிழ்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளேன். ஒவ்வொரு நாளும் மதிய உணவு இடைவேளையில் விளையாடுவதற்கான (உள்ளரங்க & வெளிப்புற) விளையாட்டுகளையும் ஏற்பாடு செய்துள்ளேன். அதோட மட்டுமல்லாமல் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மற்றும் எங்களது கம்பெனியின் ஆண்டு விழா ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடுவோம்.
அதோட எங்களுடைய Leadership டீமும் அவர்கள் குழுவுடன் இணைந்து கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பார்கள். ஆங்கிலத்தில் `Fail Fast Fail Forward’ என்பார்கள். அதாவது சீக்கிரம் முயற்சி செய்து தோல்வியடைந்து அதிலிருந்து கற்றுக்கொண்டு வேகமாக முன்னேற வேண்டும் என்பதே இதன் கருத்து. இதை நாங்கள் எங்கள் நிறுவனத்தில் நடைமுறைப்படுத்துகிறோம். இதுவே எங்கள் வெற்றிக்கு காரணம். இதுவெல்லாம் தான் எங்களுடைய நிறுவனத்தின் கலாச்சாரமும் கூட. இந்த கலாச்சாரத்தை நிறுவனம் முழுக்க கொண்டு சேர்ப்பது என்னுடைய தலையாயப் பணி.
Good to Great என்ற புத்தகத்தில் ஜிம் காலின்ஸ் பின்வருமாறு கூறுவார். “முதலில் பேருந்தில் ஏறுபவர்கள் யார் என்று முடிவு செய்யுங்கள். பிறகு பேருந்தில் எங்கு செல்லலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்” என்று கூறி இருப்பார். அதன் அர்த்தம் முதலில் நமது கம்பெனிக்கு திறமையான ஊழியர்கள் தான் மிக முக்கியம். நாம் என்ன Product செய்யப் போகிறோம், அதை எவ்வாறு செய்யப்போகிறோம் என்பதெல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம். அதனால் எங்களது நிறுவனத்தில் ஊழியர்களுக்கான முக்கியத்துவம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும்.”

``நித்ரா தமிழ் காலண்டர் ஆப் ஒரு கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. ஆன்மீகம் சார்ந்த ஆப்களுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?”
``ஆன்மீகம் சார்ந்து மக்களின் நம்பிக்கையே இதற்கு முக்கிய காரணம். அதோடு மட்டுமல்லாமல் மக்கள் சுப காரியங்களை செய்யும்போது நல்ல நேரம் பார்ப்பது, ராசிபலன் பார்ப்பது, பண்டிகைகள் குறித்த தேடல்கள் மற்றும் ஆன்மீகம் குறித்து நாங்கள் தரும் தகவல்கள், ஜோதிடர்களால் சரியாக கணிக்கப்படும் குறிப்புகள் ஆகிய காரணங்களால் ஆன்மீக செயலிக்கு அதிகப்படியான வரவேற்பு உள்ளது.
எங்களது நித்ரா தமிழ் காலண்டரில் ஆன்மீக செய்திகளோடு தினசரி மக்களுக்கு பயன்படும் பல்வேறு தகவல்கள் மற்றும் கருவிகளை கொடுத்திருக்கிறோம். இதனால் மக்கள் நித்ரா தமிழ் காலண்டர் செயலியை விரும்பி பயன்படுத்துகிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நாங்கள் உருவாக்கிய காலண்டர்களை மக்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். இதற்கு எங்களுடைய செயலிகளின் ரேட்டிங்கே முக்கிய சாட்சியாகும்.”
``உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் திருமண சேவைகளுக்கான ஆப்களை உருவாக்கியதன் நோக்கம் என்ன? இந்த ஆப்களின் மூலம் நீங்கள் என்ன சமூக தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்?”
``நான் கல்லூரியை கவனித்துக் கொண்டிருந்தபோது எனது அலுவலகத்திற்கு அக்கவுண்ட் ஒருவர் தேவைப்பட்டார். நான் மூன்று முறை பிரபல செய்தித்தாளில் விளம்பரம் செய்து மூன்றாவது தடவை மட்டுமே என்னால் ஒருவரை வேலைக்கு எடுக்க முடிந்தது. மக்களிடையே குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் செய்தித்தாள் படிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. அதனால் அங்கு வெளியிடப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள் சரியானவர்களை சென்றடைவதில்லை. அதே நேரத்தில் மொபைல் பயன்பாடு அதிகரித்துவிட்டது. என்னுடைய ஆட்கள் தேவைக்கான பிரச்னையே நான் நித்ரா ஜாப்ஸ் செயலியை உருவாக்குவதற்கான முக்கிய காரணம்.
இந்த செயலியை இதுவரை தமிழகம் முழுவதும் 75 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். எப்பொழுதும் 5 லட்சத்திற்கும் அதிகமான வேலை தேடுவோர் இந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். 50,000-க்கும் அதிகமான வேலை கொடுப்போர் தங்கள் ஆட்கள் தேவைக்கு நமது செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு பக்கம் வேலைக்கு ஆள் கிடைக்காத நிலைமை. இன்னொரு பக்கம் உள்ளூரிலேயே வேலை எங்கிருக்கிறது என்று தெரியாத சூழ்நிலை. இந்த இருவரையும் நமது தமிழ் மொழி வாயிலாக, தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒருங்கிணைப்பதால் சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று என்னால் நம்ப முடிந்தது. அந்த கனவை இன்று ஓரளவுக்கு நிறைவேறி உள்ளதாக நான் நினைக்கிறேன். மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நித்ரா ஜாப்ஸ் செயலியை தெலுங்கிலும் வெளியிட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கும் சேவையாற்றி கொண்டிருக்கிறோம்.

நித்ரா மேட்ரிமோனி செயலி என்பது மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற செயலிகளில் நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி இருந்தும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அந்த கட்டணம் செல்லுபடியாகும். ஆனால் எங்களுடைய திட்டங்கள் எல்லாம் அதில் உள்ள வரன் பார்க்கக்கூடிய வரம்பு தீரும்வரை, நீங்கள் அதை எவ்வளவு நாட்கள் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.
அதோடு மட்டுமல்லாமல் குறைவான கட்டணத்தில் அதை மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கியுள்ளோம். அதனால் ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறேன். அதோடு மட்டுமல்லாமல் நமக்கான வாழ்க்கை துணை எங்கிருக்கிறார் என்பது தெரியாத பட்சத்தில் இந்த செயலி மூலமாக அவர்களது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் நாங்கள் முக்கிய பங்கு வைக்கிறோம் என்பது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தருகிறது. ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வரன்கள் நித்ரா மேட்ரிமோனி மூலமாக தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொண்டிருக்கிறார்கள்."
`வருங்காலத்தில் நித்ரா ஆப்ஸின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? புதிய தொழில்நுட்பங்கள் அல்லது சந்தை வாய்ப்புகள் குறித்து உங்களுக்கு என்ன திட்டங்கள் உள்ளன? "
``எங்களது அனைத்து செயலிகளையும் இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் 10 மில்லியன் மக்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். நாங்கள் ஆண்டுக்கு சராசரியாக 30 முதல் 40 சதவீதம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இதையும் 50 முதல் 60% வரை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் எங்களது நிறுவன பங்குகளை ஸ்டாக் மார்க்கெட்டில் வெளியிட வேண்டும் என்ற குறிக்கோளோடும், கனவுகளோடு முன்னேறிக் கொண்டிருக்கிறோம். எங்களது நித்ரா செயலிகளை மக்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் மேம்படுத்திக் கொண்டே வருகிறோம். அதன் மூலம் சமுதாயத்திற்கு பெரிய சேவை செய்த மனநிறைவும் எங்களுக்கு தேவை.
கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக `Nithra People' மற்றும் `நித்ரா Life' என்ற இரண்டு செயலிகளை வெளியிட்டுள்ளோம் ஏற்கனவே நாங்கள் B2C என்ற வகையில் எங்களுடைய அனைத்து தயாரிப்புகளும் இருந்தது. முதன்முறையாக B2B என்ற அடிப்படையில் Nithra People என்ற வருகை பதிவு மற்றும் சம்பள கணக்கீடு காண செயலியை புதிய தொழில்நுட்பங்களோடு உருவாக்கியுள்ளோம். அதை சந்தைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளோம். அதோடு மட்டுமல்லாமல் Nithra Life என்ற செயலி மூலமாக உடல் நலம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் Financial Literacy எனப்படும் நிதி மற்றும் பணம் சார்ந்த தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த செயலியை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் நாங்கள் மிக வலுவாக உள்ளோம். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறோம். கர்நாடகா மற்றும் கேரளாவில் நித்ரா ஜாப்ஸ் மற்றும் Nithra People செயலிகளை வெளியிட வேண்டும். பின்னர் இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்த வேண்டும். மேலும் IMPRES ERP Software ஐ நானும் எனது நண்பர் செல்வகுமாரும் இணைந்து கையகப்படுத்தி உள்ளோம். இதன் மூலம் எங்களது பழைய கனவான கல்வி துறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற பயணம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
மேலும், நான் தொழில் முனைவு மற்றும் அது சார்ந்து தெரிந்து கொள்ள விஷயங்கள் குறித்து Beyond Limit by Gokul என்ற YouTube Channel வாயிலாக என்னுடைய தொழில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன்."
சவால்களை எதிர்கொண்டு ஒரு சிறிய நகரத்திலிருந்து இத்தகைய பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டிய நித்ரா ஆப்ஸ் நிறுவனம் இன்னமும் மிளிர வாழ்த்துவோம்.
(சாகசங்கள் தொடரும்..!)