STR: "முதலில் ஒரு டைரக்டர் நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வரவேண்டும்" - சிம்பு ஓப்பன் டாக்
‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கமலும் மணி ரத்னமும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.
சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஜூன் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நேர்காணல் ஒன்றை ஒருங்கிணைத்து அதை காணொளியாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த நேர்காணலில் சிம்பு படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வருவது தொடர்பாக பேசியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு பேசுகையில், "என்னிடம் பலரும் ‘மணி சார் இயக்கும் படத்திற்கு மட்டும் படப்பிடிப்பு தளத்துக்கு சீக்கிரமாக வந்துவிடுகிறீர்களே! அவர் மீது என்ன பயமா? அவர் கண்டிப்பானவரா?’ எனக் கேட்கிறார்கள்.
சத்தியமாக, அவர் மீது பயம் கிடையாது. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் ஒரு நாள்கூட மணி சார் படத்தின் படப்பிடிப்புக்கு தாமதமாகச் சென்றது கிடையாது. சில நேரங்களில் மணி சார் வருவதற்கு முன்பே கூட நான் சென்றிருக்கிறேன்.
நாம் ஒரு நடிகர். தயாரிப்பாளரையோ, இயக்குநரையோ நம்பி ஒரு படத்திற்குள் நடிக்கச் செல்லும்போது முதலில் சொன்ன நேரத்தில் படத்தை எடுக்க வேண்டும்.
முதலில் ஒரு டைரக்டர் நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வரவேண்டும்.

அப்படி வந்தால்தான் மற்ற நடிகர்களும் சரியான நேரத்திற்குப் படப்பிடிப்பு தளத்திற்கு வருவார்கள்.
கதையைச் சொன்ன பிறகு படப்பிடிப்பு தளத்தில் ‘இதை இப்படி செய்யலாமா? அதை அப்படி செய்யலாமா’ என யோசிக்கவே மாட்டார்.
அன்றைய படப்பிடிப்பில் என்னென்ன விஷயங்கள் செய்யப்போகிறோம் என்பது அவருக்கு தெரியும். சொன்ன நேரத்திற்கு படத்தை முடித்துவிடுவார்.
சம்பளமும் சரியாக வந்துவிடும். படமும் சொன்ன தேதியில் ரிலீஸாகும். இவ்வளவு விஷயங்களையும் மணி சார் தவறாமல் இத்தனை ஆண்டுகளாக பாலோ செய்யும்போது எந்த நடிகர் அவருடைய படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவார்கள்?" எனக் கூறி முடித்துக் கொண்டார்.