அரசு அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்! அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்...
Tasmac ED Raid: டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கடந்த மாதம் மார்ச் 6-ம் தேதியிலிருந்து 3 நாள்கள் சென்னையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது.
அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், பார் உரிமங்கள் வழங்குதல், அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குதல், டெண்டர் விடுதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், மதுபானம் பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் அதிகமாக விற்கப்படுவதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள், மதுபான நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டாஸ்மாக் மூலம் அரசு கணக்கில் சேராமல் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இது குறித்து அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விளக்கமளித்துப் பேசியிருந்தார்.
அதில், ``எந்தவித முகாந்தரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட ரைடு எந்த ஆண்டு பதியப்பட்ட, எந்த முதல் தகவல் அறிக்கை (FIR) அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறவில்லை.
கடந்த 4 ஆண்டிகளில் பார் டெண்டர் முழுவதும் ஆன்லைன் டெண்டராக மாற்றப்பட்டிருக்கிறது. அவர்கள் பொதுவாக சொல்லியிருக்கும் 1000 கோடி முறைகேடு என்பது எந்த முகாந்திரமும் இல்லாமல் பொத்தாம்பொதுவாக சொல்லப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது. அதிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலைமுதல், மணப்பாக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சூளைமேடு பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஜே நிறுவனம், திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் ஒருவர் வீட்டிலும், தேனாம்பேட்டை, தி நகர் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.