Thalaivan Thalaivi: "கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி..." - விஜய் சேதுபதி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் வைத்து செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசியிருக்கின்றனர்.
விஜய் சேதுபதி பேசும்போது, "இது மாதிரி ஆடியோ லாஞ்ச் வரும்போது பெரும் மகிழ்ச்சியா இருக்கும். அதே மாதிரி, இந்தப் படத்துல பாண்டிராஜ் பண்ணின வேலைனு தெரியல, இன்னைக்கு திருவிழாவுக்கு வந்த மாதிரியான உணர்வைக் கொடுக்குது.
இதே வைப்லதான் நாங்க 70 நாட்கள் படத்தை ஷூட் பண்ணோம். என்னுடைய இயக்குநர் பாண்டிராஜுக்கு நன்றியைச் சொல்லிக்கறேன். இந்தப் படம், நடிச்சோம்னு சொல்றதைத் தாண்டி ஒரு அழகான அனுபவத்தையும் கொடுத்திருக்கு.

இந்தப் படத்துக்கு அவர் நடிகர்களைத் தேர்ந்தெடுத்த விதமும் அழகா இருந்தது. ஆனா, கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காம உழவு மாடு ஓட்டுற மாதிரி எங்களை ஓட வச்சுட்டாரு.
இந்தப் படம் பார்க்கிற அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்னு நம்புறேன். அப்படி ஒரு கொண்டாட்டமான திரைப்படம்தான் இது.
படத்தோட தலைப்பை ஷூட் முடிச்சு டப்பிங் சமயத்துல டிசைன் பண்ணிட்டுதான் சொல்லுவேன்னு பாண்டிராஜ் சார் சொன்னாரு. அவர் டைட்டில் சொன்னபோதே எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சு." என்றார்.